நீண்டகாலமாக புரையோடிப்போயிருக்கும் இனப்பிரச்சினைக்கான தீர்வாக சமஷ்டி முைறமை யை வலியுறுத்தும் வடமாகாணசபையின் அரசியல் தீர் வுத்திட்ட முன்வரைபை, பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, சபாநாயகர் கரு ஜெயசூரிய, எதிர்க்கட்சித்தலைவரும் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் தலைவருமான இரா.சம்பந்தன் ஆகியோரிடத்தில் நேரில் கையளிப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.
இதன்பிரகாரம் யாழ்ப்பாணம் மருதனார்மடத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பிரதான மே தினக்கூட்டம் இடம்பெறவுள்ளது. இதில் கலந்துகொள்வதற்காக சம்பந்தன் எதிர்வரும் 30ஆம் திகதி சனிக்கிழமை யாழ்ப்பாணத்திற்கு செல்லவுள்ளார்.
இதன்போதே வடமாகாணசபை முதலமைச்சர், குறித்த தீர்வுத்திட்ட வரைபை அவரிடத்தில் கையளிப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. வடமாகாணசபையின் தவிசாளர் சி.வி.கே.சிவஞானம், கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்கள், மாகாண அமைச்சர்கள், உறுப்பினர்கள் உள்ளிட்டோரும் குறித்த வரைபை நேரில் கையளிக்கும்போது பங்கேற்கவுள்ளனர்.
அதனைத்தொடர்ந்து பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, சபாநாயகர் கரு ஜெயசூரிய ஆகியோரிடமும் வடமாகாண சபை முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் நேரில் தீர்வுத்திட்ட வரைபை கையளிக்கவுள்ளார். நாட்டிலுள்ள இனங்களுக்கிடையிலான பிரச்சினைகள் உட்பட அனைத்துப் பிரச்சினைகளுக்கும் தீர்வை ஏற்படுத்தும் முகமாக புதிய அரசியலமைப்பு உருவாக்கும்
செயற்பாடுகள் முன்னெடுக்கப்படுமென ஜனதிபதி மைத்திரிபால சிறிசேன, பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான தேசிய அரசாங்கம் வாக்குறுதியளித்திருந்தது.
ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 30ஆவது கூட்டத்தொடரின்போது உரையாற்றி வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீரவும் புதிய அரசியலமைப்பு உருவாக்கப்படுமென்பதை உறுதிபடத்தெரிவித்திருந்தார்.
இந்நிலையில் பாராளுமன்றத்தை அரசியலமைப்பு சபையாக மாற்றியமைக்கும் பிரேரணை பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவினால் சமர்ப்பிக்கப்பட்டு நிறைவேற்றப்பட்டதையடுத்து தற்போது பாராளுமன்றம் அரசியல் அமைப்பு சபையாக மாற்றப்பட்டுள்ளது.
அதேவேளை புதிய அரசியலமைப்பு தொடர்பாக பொதுமக்களின் கருத்துக்களை அறிந்துகொள்வதற்கும் லால்விஜயநாக்க தலைமையிலான மக்கள் கருதறியும் நிபுணர்குழு உருவாக்கப்பட்டு நாடாளவிய ரீதியில் அமர்வுகள் நடைபெற்று பல்வேறு கருத்துக்களும் யோசனைகளும் பெறப்பட்டுள்ளன.
இவ்வாறிருக்கையில் புதிய அரசியலமைப்பு உருவாக்கத்தின்போது வடமாகாண சபையினால் அரசியல்தீர்வுத் திட்டம் தொடர்பான முன்வரைபொன்று தயாரித்து வழங்குவதுதென கடந்த ஜனவரி மாதம் 26ஆம் திகதி இடம்பெற்ற சபை அமர்வில் ஏகமனதான தீர்மானம் நிறைவேற்றப்பட்டதோடு முதலமைச்சர் விக்கினேஸ்வரன் தலைமையிலான 19 உறுப்பினர்கள் கொண்ட குழுவும் நியமிக்கப்பட்டிருந்தது.
குறித்த குழுவினால் தயாரிக்கப்பட்ட முன்வரைபானது கடந்த 7ஆம் திகதி இடம்பெற்ற சபை அமர்வின்போது சமர்ப்பிக்கப்பட்டது. சபையில் பல திருத்தங்கள் முன்வைக்கப்பட்டிருந்தன. அவைதொடர்பாக ஆராயப்பட்டு கடந்த 12ஆம் திகதி நடைபெற்ற விசேட அமர்வின்போது இறுதிசெய்யப்படுமென எதிர்பார்க்கப்பட்டபோதும் தீர்வுத் திட்ட முன்வரைபு தொடர்பான விடயம் எடுத்துக்கொள்ளப்படவில்லை.
எனினும் நேற்றுமுன்தினம் நடைபெற்ற வடமாகாண சபையின் அமர்வின்போது அத்தீர்வுத் திட்டத்தின் இறுதி வரைபு முதலமைச்சரினால் சபையில் சமர்ப்பிக்கப்பட்டு திருத்தங்களுடன் ஏகமனதாக நிறைவேற்றப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
இதேவேளை தமிழ் மக்கள் பேரவையின் அரசியல் தீர்வுத்திட்ட முன்வரைபு இறுதி செய்யப்பட்டுள்ளது. முன்வரைபை இறுதி செய்வதற்காக நடைபெற்ற தமிழ் மக்கள் பேரவையின் நான்காவது கூட்டத்தொடரில் குறித்த வரைபில் சிறு திருத்தங்கள் செய்யப்பட்டு ஏகமனதாக இறுதி முன் வரைபு ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது. எதிர்வரும் 30ஆம் திகதி குறித்த இறுதி முன் வரைபு வெளியிடப்படவுள்ளதோடு தமிழ்த்தலமைகளிடமும், அரசாங்கத்திடமும் சர்வதேச சமூகத்திடமும் நேரில் கையளிக்கப்படுமென தமிழ் மக்கள் பேரவையின் செயற்பாட்டுக் குழு அறிவித்துள்ளது.
No comments
Post a Comment