வட மாகாணத்தில் நல்லாட்சி அரசாங்கத் தின் ஆட்சிக் காலத்திலும் சிவில் நிர்வாகம் நடைமுறைப்படுத்தப்படவில்லை. மஹிந்த ஆட்சிக்கு ஒப்பான இராணுவ ஆட்சியே நடைபெற்று வருகின்றது. தேசிய பாதுகாப்பு என்ற போர்வையில் வடக்கில் சிங்கள பௌத்த மயமாக்கலுக்கே முப்படையினரும் நிலை நிறுத்தப்பட்டுள்ளனர் என்று வட மாகாண சபையின் நேற்றைய அமர்வில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
வடக்கு மாகாண சபையின் அமர்வு நேற்று கைதடியிலுள்ள மாகாண சபையின் பேரவை செயலகத்தில் சி.வி.கே.சிவஞானம்
தலைமையில் நடைபெற்றது.
குறித்த சபை அமர்வானது நேற்று விசேட அமர்வாக நடைபெறும் என அறிவிக்கப்பட்ட நிலையில் அரசியலமைப்பு சீர்திருத்தம் தொடர்பான திட்ட வரைபு முழுமை பெறாமையினால் இந்த அமர்வில் பிரேரணை மற்றும் நியதிச் சட்டங்கள் தொடர்பாக ஆராயப்பட்டது.
இதன்போது முக்கியத்துவம் வாய்ந்த பிரேரணையாக முல்லைத்தீவு மாவட்டம் கொக்குத்தொடுவாய் வடக்கு கிராம அலுவலர் பிரிவில் புலிபாய்ந்தகல் அருகாமையில் அத்துமீறி குடியேறி கடற்றொழிலில் ஈடுபட்டு வரும் மீனவர்கள் தொடர்பாக தகவல் சேகரிக்கச் சென்ற கிராம அலுவலர் அத்துமீறி கடல் தொழில் செய்த தென்னிலங்கை மீனவர்களால் தாக்கப்பட்டதுடன் இராணுவ அதிகாரி கிராம அலுவலரின் தேசிய அடையாள அட்டை மற்றும் உத்தியோக அடையாள அட்டைகளைப் பறித்து மரியாதைக்குறைவான வார்த்தைகளால் திட்டியமைக்குக் கண்டனம் தெரிவித்து பிரேரணை நிறைவேற்றப்பட்டது.
குறித்த பிரேரணையை முன்வைத்து உரையாற்றிய வடமாகாண சபை உறுப்பினர் ரவிகரன் குறிப்பிடுகையில்,
இறுதியாக நடைபெற்ற மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக்கூட்டத்தில் வெ ளிமாவட்ட மீனவர்கள் முல்லைத்தீவு கரையோரங்களில் அனுமதி இன்றி தங்கியிருந்து மீன்பிடிப்பது தடுத்து நிறுத்தப்படவேண்டுமெனத் தீர்மானிக்கப்பட்டிருந்தது.
இதனடிப்படையில் அரசாங்க அதிபரின் பணிப்பின்படி கிராம அலுவலர்களுக்குத் தெரியாமல் கடற்றொழிலில் ஈடுபட்டிருக்கும் வெ ளிமாவட்ட மீனவர்களின் விபரங்கள் சேகரிக்கப்பட்டு வருகின்றது.
கொக்குத்தொடுவாய் வடக்கு கிராம அலுவலர் பிரிவில் புலிபாய்ந்தகல் அருகாமையில் இவ்வாறு அத்துமீறி குடியேறி கடல் தொழிலில் ஈடுபட்டுவரும் மீனவர்கள் தொடர்பாக தகவல் சேகரிக்கச்சென்ற கிராம அலுவலர் சீவரட்ணம் யேசுரட்ணம் அத்துமீறி கடல் தொழிலில் ஈடுபட்டுவரும் சிங்கள மீனவர்களால் தாக்கப்பட்டுள்ளார்.
பின்னர் இம்மீனவர்களால் தொலைபேசி மூலம் தகவல் அனுப்பப்பட்டு 593ஆவது படைப் பிரிவின் கேணல் சமந்த சில்வா உட்பட சில இராணுவத்தினர் அங்கு வருகை தந்துள்ளார்கள். கேணல் சமந்த சில்வா கிராம அலுவலரின் தேசிய அடையாள அட்டை மற்றும் உத்தியோக அடையாகளை பறித்து அவரை மரியாதைக் குறைவான வார்ததைகளால் திட்டி உள்ளார். இது என்ன? சிவில் நிர்வாகமா? அல்லது இராணுவ ஆட்சியா? நடக்கின்றது. பொறுமைக்கும் எல்லை உண்டு என்பதை தெரிவிப்பதோடு இராணுவ கடற்படையின் ஒத்துழைப்புடன் அரங்கேற்றி வரும் இப்படியான சட்டம் ஒழுங்கு சீர்குலைவை மாவட்டத்தின் மக்கள் சார்பாக வன்மையாக கண்டிக்கின்றேன்.
அவர்கள் பிழை செய்தால் குற்றமில்லை. நாங்கள் பிழை செய்யாமலே குற்றவாளிகளாக்கப்படுகின்றோம். நல்லாட்சி என்று சொல்லப்படும் அரசுக்கு தெரியப்படுத்துகின்றேன். இப்படியான அராஜகங்கள் நிறுத்தப்படவேண்டும் என்றார்.
எம்.கே.சிவாஜிலிங்கம்
இது தொடர்பில் வடமாகாண சபை உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் கருத்துத் தெரிவிக்கையில்,
முல்லைத்தீவு மாவட்ட மக்கள் நெருப்பில் நின்று வேலைகள் செய்யவேண்டியுள்ளது. அத்துமீறிய செயற்பாடுகள் அதிகரித்துக் கொண்டு செல்கின்றன. குறிப்பாக வடக்கில் காணி சுவீகரிப்பிற்கான நடவடிக்கைகள் தொடர்ந்து கொண்டு இருக்கிறது. மக்கள் அழுது கொண்டு திரிகிறார்கள். இதற்கு முடிவு வேண்டும்.
இதன் காரணமாகவே நாம் மாவட்ட செயலகத்தை முடக்கினோம். தொடர்ந்து இத்தகைய செயலை தடுப்பதற்கே வடமாகாண முதலமைச்சர் நடவடிக்கை எடுக்கவேண்டும் என்றார்.
சர்வேஸ்வரன்
வடமாகாண சபை உறுப்பினர் சர்வேஸ்வரன் குறிப்பிடுகையில்,
முல்லைத்தீவு மாவட்டத்தில் தென்னிலங்கை மீனவர்கள் அத்துமீறுவது தொடர்பில் மத்திய கடற்றொழில் அமைச்சரிடம் கூறியும் சட்டவிரோத செயற்பாடு அதன் பின்னரும் நடக்கின்றது என்றால் நல்லாட்சி அரசில் இராணுவ ஆட்சியே நடக்கிறது.
தேசிய பாதுகாப்பு என்று கூறி கிழக்கு மாகாணம் சிங்களமாக மாறியது போன்று வடக்கையும் அவ்வாறே ஆக்கிரமிப்புச் செய்வதில் முப்படையினரும் திட்டமிட்டு செயற்பட்டு வருகின்றனர்.
தேசிய பாதுகாப்பு என்பது மற்றொரு நாடு உள்நுழைவதைத் தடுப்பதற்கான செயலாகும். ஆனால் இலங்கையில் இது வேறு மாதிரியான அர்த்தத்தைக் கொண்டுள்ளது. அத்துமீறிய தொழில்களையும் குடியேற்றங்களையும் மேற்கொண்டு இராணுவ ஆட்சியைதான் அரசாங்கம் மேற்கொண்டு வருகின்றது. இதை உடனடியாக நிறுத்தப்படவேண்டும் என்றார்.
வடமாகாண சபை உறுப்பினர் விந்தன் குறிப்பிடுகையில்,
வடக்கில் நயினாதீவில் நாகவிகாரை, யாழ்.நகர் ஆரிய குளத்தில் நாகவிகாரை, மாதகலில் விகாரை உள்ளன. இங்கு தெற்கில் இருந்து பௌத்த மக்கள் வருகிறார்கள் வழிபடுகின்றார்கள். ஆனால் நயினாதீவில் கடலுக்குள் புத்தரை கட்டுவதற்கு நடவடிக்கை எடுக்கப்படுகின்றது. இதற்கு யார் அனுமதி வழங்கியது.
இங்கு கடற்கரையை அண்மித்த பகுதியில் கட்டடம் அமைத்தாலோ மைதானம் அமைத்தாலோ சட்டம் பாய்கிறது. ஆனால் கடலுக்குள் கட்டுவது என்றால் எதுவும் செய்யமாட்டார்களா?
வடக்கில் இவ்வாறான பௌத்த விகாரைகளை அமைத்து சர்வதேசத்திற்கு பௌத்த தேசமாக காட்டுவதற்கே இவ்வாறான முயற்சி நடக்கிறதா? எனக் கேட்டதுடன் பலரும் எதிர்ப்புத் தெரிவித்து வரும் நிலையில் வடக்கு மாகாண சபையும் இதனைத் தடுத்து நிறுத்த நடவடிக்கை எடுக்கவேண்டும் என்றார்.
முதலமைச்சர் கருத்து
இதன்போது கருத்துத் தெரிவித்த வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன், எதிர்வரும் 18ஆம் திகதி ஜனாதிபதி, பிரதமருடன் வடமாகாண காணிப் பிரச்சினைகள் தொடர்பில் கலந்துரையாட வருமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இதற்கு நான் செல்வதனால் வடமாகாண சபை உறுப்பினர்களிடம் உள்ள காணிப் பிரச்சினை தற்போதைய பிரச்சினைகள் தொடர்பில் தரவுகளுடன் தந்துதவுமாறும் 18ஆம் திகதி நடைபெறவுள்ள சந்திப்பில் இவை குறித்து கலந்துரையாடுவதாகவும் தெரிவித்தார்.
No comments
Post a Comment