மட்டக்களப்பு மாவட்டத்தில் கமநல அபிவிருத்தி வங்கிகளில் சேமிப்புக்கணக்கை ஆரம்பிப்பதற்கு ஒரு சீரான கட்டணம் அறவிடப்படவில்லை என்று விவசாயிகள் விசனம் தெரிவிக்கின்றனர்.
பசளை நிதி மானியத்துக்கு விண்ணப்பிக்கும் ஒரு விவசாயி ஏதாவது ஒரு அரச அல்லது வர்த்தக வங்கியில் சேமிப்பு கணக்கை வைத்திருக்க வேண்டும் என்பது நிபந்தனையாகும். இருந்த போதிலும் அவ்வாறு வைத்திருந்தாலும் கமநல அபிவிருத்தி வங்கியிலும் கணக்கை திறக்குமாறு விவசாயிகள் நிர்ப்பந்திக்கப்பட்டனர். இதற்கு அமைவாக நிதிமானியம் மறுக்கப்படும் எனப் பயந்து விவசாயிகள் கணக்கை ஆரம்பித்துள்ளனர்.
எனினும் இதற்கான கட்டணம் ஒரு சீராக அறவிடப்படவில்லை. மண்டூர் கமநல சேவை நிலையத்தில் ஆயிரம் ரூபாயும் வெல்லாவெளி கமநல சேவை நிலையத்தில் ஐநூறு ரூபாயும் அறவிடப்பட்டுள்ளன.
கொக்கட்டிச்சோலை மற்றும் வாழைச்சேனை நிலையங்களிலும் ஆயிரம் ரூபா அறிவிடப்பட்டதாக தெரிவித்த விவசாயிகள் அதற்கான பற்றுச்சீட்டுகளையும் காண்பித்தனர்.
இவ்வாறு ஒரு மாவட்டத்துக்குள்ளேயே வேறு வேறு விதமான கட்டணம் அறவிடப்பட்டமைக்கு யார் பொறுப்பு. நல்லாட்சியில் அரச நிருவாகம் சரியாக இயங்கவில்லையா? சம்பந்தப்பட்டவர்கள் சரியான அறிவுறுத்தலை வழங்கியிருக்க வேண்டும். அத்துடன் மேற்பார்வை செய்திருக்கவும் வேண்டும். விவசாயிகளின் அமைப்பான விவசாய அமைப்பு மற்றும் மாவட்ட விவசாய அமைப்பு என்பன இதனை அறிந்திருந்தும் உரிய நடவடிக்கை எடுக்கத் தவறிவிட்டன. ஆங்காங்கே நியமிக்கப்பட்டுள்ள விவசாய பிரதிநிதிகளும் கரிசனை காட்டவில்லை. அரச நிருவாகம் ஓர் ஒழுங்கு முறைக்கு உட்பட்டது. இவ்வாறு விவசாயிகள் பலரும் கவலையும் அதிருப்தியும் தெரிவித்தனர்.
No comments
Post a Comment