Latest News

April 13, 2016

வாழ்நாள் பேராசிரியர்களான அ.சண்முகதாஸ், மனோன்மணி சண்முகதாஸ் ஆகியோரின் பாராட்டு விழாவும் நூல்களின் வெளியீடும்.
by admin - 0

நெல்லண்டையான் வெளியீட்டுக் கழகத்தின் ஏற்பாட்டில் பேராசிரியர் அருணாசலம் சண்முகதாஸ், பேராசிரியர் மனோன்மணி சண்முகதாஸ் ஆகியோரின் நூல்களின் வெளியீடும் பாராட்டு விழாவும் நேற்றுக்  காலை 9.00 மணிக்கு நெல்லியடி நெல்லை முருகன் திருமண மண்டபத்தில் பேராசிரியர் மா.நடராஜசுந்தரம் தலைமையில் நடைபெற்றது.

இந்நிகழ்வின் பிரதம விருந்தினராக பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் கலந்துகொண்டு விழாநாயகர்களை வாழ்த்தி அவர்கள் தமிழுக்கு ஆற்றிய அரும் பணிகள் பற்றியும் அவர்களது பணி மேன்மேலும் தொடரவேண்டுமெனவும் தனது உரையில் குறிப்பிட்டிருந்தார்.

அவர் தனது உரையில் மேலும் குறிப்பிடுகையில் தமிழின் தொன்மையையும் தமிழர்களின் பண்பாட்டையும் கலாசாரத்தையும் கட்டிக் காத்து எமது அடுத்த சந்ததிக்கு வழங்கக் கூடிய வகையில் தமிழர்களாகிய நாம் செயற்படவேண்டும் எனவும் குறிப்பிட்டார்.

நிகழ்வில் நல்லை ஆதீன முதல்வர் ஸ்ரீலஸ்ரீ சோமசுந்தரதேசிக ஞானசம்பந்த பரமாசாரிய சுவாமிகள், மற்றுமு; விழா அமைப்பாளர் சிவஸ்ரீ தியாக. சோமாஸ்கந்தராஜக் குருக்கள் ஆகியோர் ஆசியுரைகளை வழங்கினர். பண்டிதர் பொன். சுகந்தன் வரவேற்புரையையும் ஆசிரியர் வேல். நந்தகுமார் தொடக்கவுரையையும் ஆற்றினர். 
.
வடமராட்சி வலயக் கல்விப் பணிப்பாளர் சி. நந்தகுமார், வடமாகாணசபை உறுப்பினர் வே. சிவயோகன், புதிய உயர்கல்லூரி இயக்குநர் அருள்நங்கை சண்முகநாதன், முன்னாள் பேராசிரியர் கலாநிதி எஸ். சிவலிங்கராஜா, கலாநிதி த. கலாமணி, கலாநிதி ஜெயலஷ்மி இராசநாயகம், ஓய்வு பெற்ற அதிபர் கி.நடராசா ஆகியோர் வாழ்த்துரைகளை வழங்கினர். 
.

நிகழ்வில் பேராசிரியர் அ. சண்முகதாஸ் எழுதிய கட்டுரைகளையும் வேறு சில கட்டுரைகளையும் உள்ளடக்கிய பவளமணி என்ற பவளவிழா மலரும் முனைவர் மனோன்மணி சண்முகதாஸ் எழுதிய தமிழ் இலக்கியப் பாரம்பரியத்தில் பெண் என்ற நூலும் பிரதமவிருந்தினர் சி.சிறீதரனால் வெளியிட்டு வைக்கப்பட்டன. இதன் முதற்பிரதிகளை அதிபர் பொ.அரவிந்தன், தொழிலதிபர் ந. சணற்குணராஜா ஆகியோர் பெற்றுக் கொண்டனர். 
.
நூல்களுக்கான வெளியீட்டுரையை பருத்தித்துறை பிரதேச செயலர் த.ஜெயசீலன் ஆற்றினார். பவளமணி நூலின் மதிப்புரையை அதிபர் ஆ.சிவநாதனும் தமிழ் இலக்கியப் பாரம்பரியத்தில் பெண் என்ற நூலுக்கான மதிப்புரையை கோப்பாய் ஆசிரிய கலாசாலை பிரதிமுதல்வர் ச.லலீசனும் ஆற்றினர். 
.
பேராசிரிய இணையருக்கான பவளவிழா மற்றும் பொன்விழா ஆகிய நிகழ்வுகள் கடந்த 14.10.2015அன்று நல்லூரில் யாழ்ப்பாணத் தமிழ்ச்சங்கத்தால் முன்னெடுக்கப்பட்டிருந்தது என்பதுவும் கனடா, சுவிஸ், ஜேர்மன் ஆகிய புலம்பெயர் நாடுகளிலும் அவர்களது மாணவர்களால் இவ்விழாக்கள் முன்னெடுக்கப்பட்டன என்பதுவும் குறிப்பிடத்தக்கன.
























« PREV
NEXT »

No comments