Latest News

April 06, 2016

மைத்துனனைக் குத்திக் கொலை செய்த வழக்கில், குற்றவாளிக்கு மரண தண்டனை
by admin - 0

யாழ்ப்பாணம் திருநெல்வேலியில் மைத்துனனைக் குத்திக் கொலை செய்த வழக்கில், குற்றவாளிக்கு மரண தண்டனை விதித்துத் தீர்ப்பளித்துள்ள மேல் நீதிமன்றம், எதிரியின் சார்பில் முன்வைக்கப்பட்ட கருணை மனுவின் அடிப்படையில் அதனை ஆயுட்காலச் சிறைத் தண்டனையாக மாற்றும்படி ஜனாதிபதிக்குப் பரிந்துரைத்திருக்கின்றது.

இந்தக் கொலைச் சம்பவம் கடந்த 2011 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 5 ஆம் திகதி நடைபெற்றுள்ளது.

சகோதரியின் கணவனாகிய கந்தசாமி இதயன் என்பவரை கொலை செய்ததாக சதீஸ் அல்லது ஜெகன் என்ற எதிரிக்கு எதிராக கொலைக்குற்றச்சாட்டு சுமத்தி, சட்டமா அதிபரினால் யாழ்.மேல் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டது.

இந்த வழக்கில் கண்கண்ட சாட்சியாகிய சோமசுந்தரம் ஈஸ்வரி என்ற இறந்தவரின் அயல் வீட்டுப் பெண் சாட்சியமளித்தார்.

சம்பவ தினத்தன்று பிற்பகல் ஒன்றரை அல்லது இரண்டு மணியளவில் நான் வீட்டின் உள்ளே இருந்தேன். எனது வீட்டு விறாந்தையில் ‘ஐயோ ஜெகன் குத்திப்போட்டான்’ என்று கத்துகின்ற சத்தம் கேட்டு, உள்ளே இருந்து விறாந்தைக்கு ஓடினேன். இறந்துபோன இதயன், வீட்டு விறாந்தையில் இரத்த வெள்ளத்தில் விழுந்து கிடந்ததைக் கண்டேன். ஐந்து அடி தூரத்தில் எதிரியாகிய ஜெகன் கறுத்த ஜக்கட்டுடன் கத்தியையும் கையில் கொண்டு சென்றதைக் கண்டேன் என அவர் தனது சாட்சியத்தில் தெரிவித்தார்.

இந்த சாட்சி குறுக்கு விசாரணை செய்யப்பட்டார்.

‘எதிரியாகிய ஜெகன், கொல்லப்பட்டவராகிய  இதயனைக் கத்தியால் குத்தியதை நான் காணவில்லை ஆனால் இறந்தவர் இரத்த வெள்ளத்தில் விழுந்து கிடந்ததையும், ஐந்தடி தூரத்தில் ஜெகன் கத்தியுடன் சென்றதையும் கண்டேன்’ என கண்கண்ட சாட்சியாகிய சோமசுந்தரம் ஈஸ்வரி  குறுக்கு விசாரணைக்குப் பதிலளிக்கையில் தெரிவித்தார்.

இதனையடுத்து மற்றுமொரு முக்கிய சாட்சியாகிய தங்கராஜா நிலான் சாட்சியமளித்தார். இவர் கண்கண்ட சாட்சியாகிய சோமசுந்தரம் ஈஸ்வரியின் மகன் என நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.

சம்பவம் நடைபெற்ற போது, வீட்டின் பின்புறமாக இருந்த தண்ணீர்ப் பைப்பில் நான் முகம் கழுவிக் கொண்டிருந்தேன். அப்பொழுது தனது வீட்டிற்குள் சத்தம் ஒன்று கேட்டது. நான் வீட்டின் வெளிப்பக்கமாக ஓடிச் சென்றபோது, என்னுடைய வீட்டு விறாந்தையில் இருந்து கறுத்த ஜக்கட்டுடன் ஒருவர் வெளியே போவதைக் கண்டேன். அவர் கிட்டத்தட்ட 40 மீற்றர் தூரம் சென்றுவிட்டார். அவரைப் பின்பக்கமாகத்தான் அவதானித்தேன்.

நான் வீட்டு விறாந்தைக்குச் சென்றபோது இறந்தவர் இரத்த வெள்ளத்தில் கிடந்தார். அயல் வீட்டில் இருந்த இதயனின் சகோதரியும் சகோதரியின் கணவரும் ஓடிவந்தார்கள். இரத்தத்தைக் கட்டுப்படுத்த எல்லோரும் சேர்ந்து காயத்தைத் துணியினால் கட்டினோம். பின்னர், நானும் இறந்தவரின் சகோதரியின் கணவரும் இதயனை யாழ் போதனா வைத்தியசாலைக்கு எடுத்துச் சென்றோம். ஆனால் அவர் இறந்துவிட்டதாக அங்கிருந்த வைத்தியர்கள் தெரிவித்தனர். .

இறந்தவரின் சகோதரியும் சகோதரியின் கணவரும் எங்கள் முன்னிலையில் இந்தச் சம்பவம் பற்றி பேசிக்கொண்டதைக் கேட்டேன். எதிரி தங்களுடைய வீட்டிற்கு வந்து இறந்தவருடன் பிரச்சினைபட்டு, அவரைத் துரத்திக் கொண்டு அயல் வீடாகிய எங்கள் வீட்டு விறாந்தைக்கு ஓடி வந்தார் என்பதை அவர்களுடைய கதையில் இருந்து நான் அறிந்து கொண்டேன் என்றார் தங்கராஜா நிலான்.

இந்தக் கொலைச் சம்பவத்தைப் புலனாய்வு செய்த காவல்துறை அதிகாரி  அறம்பொல நீதிமன்ற விசாரணையின்போது சாட்சியமளித்தார்.

எதிரியாக கூண்டில் நிற்கின்ற ஜெகனை நானே கைது செய்தேன். அவரை விசாரணை செய்தபோது, அவர் அளித்த வாக்குமூலத்தின் அடிப்படையில் அவருடைய வீட்டிற்குச் சென்று அவர் சுட்டிக்காட்டிய பெட்டியில் இருந்து கத்தி ஒன்றைக் கைப்பற்றினேன். அடுத்த அறையில் இருந்து இரத்தக் கறை படிந்திருந்த கறுத்த ஜெக்கட் ஒன்றையும் இரத்தம் தோய்ந்திருந்த  ஜீன்ஸையும் கைப்பற்றினேன் என்று அந்தச் சான்றுப் பொருட்களை நீதிமன்றத்தில் அடையாளம் காட்டி தெரிவித்தார்.

இந்தச் சம்பவத்தில் கொல்லப்பட்டவரின் உடலை மருத்துவ பரிசோதனை நடத்திய டாக்டர் சின்னையா சிவரூபன் மருத்துவ அறிக்கையை நீதிமன்றத்தில் சமர்ப்பித்து சாட்சியமளித்தார்.

இறந்தவரின் உடலில் ஐந்து வெட்டுக் காயங்கள் இருந்தன. நெஞ்சில் காணப்பட்ட வெட்டுக்காயம் பாரதூரமானதாக இருந்தது. இயற்கையின் போக்கில் அக்காயம் மரணத்தை ஏற்படுத்த வல்லதாக அமைந்திருந்தது. நீதிமன்றத்தில் சான்றுப் பொருளாக சமர்ப்பிக்கப்பட்டுள்ள கத்தியினால் இந்தக் காயங்கள் ஏற்படுத்தப்பட்டிருக்கலாம் என டாக்டர் சின்னையா சிவரூபன் தனது சாட்சியத்தில் தெரிவித்தார்.

இந்த விசாரணையின்போது எதிரியும் சாட்சியமளித்தார்.

சம்பவம் நடைபெற்ற போது நான் கோண்டாவிலில் இருந்தேன்.

எதிரி தனது பக்க சாட்சியத்தில் சம்பவம் நடைபெற்ற போது கோண்டாவிலில் இருந்தேன்.  இறந்தவர் எனது சகோதரியைத் திருமணம் முடித்திருந்தபோது, கடந்த 2007 ஆம் ஆண்டு அவர் தற்கொலை செய்து கொண்டார். அந்த வழக்கு அப்போதே முடிந்துவிட்டது.

எனது சகோதரியின் மரணத்தில் சகோதரியின் கணவனாகிய இறந்தவர் மீது எங்களுக்கு சந்தேகம் இருந்தது. ஆயினும் அவர் மீது எனக்கு எந்தவிதமான கோபதாபமும் இருக்கவில்லை. இக்கொலையை நான் செய்யவில்லை. இந்தக் கொலைக்கும் எனக்கும் எந்தவித சம்பந்தமும் இல்லை என தெரிவித்தார்.

விசாரணைகளின் முடிவில் இந்த வழக்கில் சுமத்தப்பட்டுள்ள கொலைக் குற்றச்சாட்டில் எதிரியை இந்த நீதிமன்றம் குற்றவளியாகக் காண்கின்றது. எனவே, கொலைக்குற்றம் புரிந்தமைக்காக எதிரிக்கு மரண தண்டனை விதிக்கப்படுகின்றது என நீதிபதி இளஞ்செழியன் தெரிவித்தார்.

அவர் தனது தீர்ப்பில் மேலும் தெரிவித்துள்ளதாவது:

இந்தக் கொலையானது சோமசுந்தரம் ஈஸ்வரியின் வீட்டு விறாந்தையில் நடைபெற்றுள்ளது.

சோமசுந்தரம் ஈஸ்வரி இறந்தவர் தனது வீட்டு விறாந்தையில் இரத்த வெள்ளத்தில் கிடந்து, ஐயோ ஜெகன் என்னைக் குத்திப்போட்டான் என கத்தியதாக, தனது சாட்சியத்தில் தெரிவித்திருக்கின்றார். அவர் வீட்டின் உள்ளே இருந்து வந்து இறந்து கிடந்தவரைப் பார்த்தபோது, எதிரியாகிய ஜெகன், ஐந்து அடி தூரத்தில் கறுத்த ஜக்கட் போட்ட வண்ணம் கத்தியுடன் சென்றதைக் கண்டதாகவும் கூறியிருக்கின்றார்.

கொலைச்சம்பவம் நடந்த உடன் நடைபெற்ற சம்பவங்களையே அவர் தனது சாட்சியத்தில் தெரிவித்துள்ளார்.

எனவே, இந்த வழக்கில் முக்கிய சாட்சியாகிய சோமசுந்தரம் ஈஸ்வரியை, கண்கண்ட சாட்சியமாக மன்று கருதுகின்றது.

வீட்டில் இருந்து 40 மீற்றர் தொலைவில் கறுத்த ஜக்கட்டுடன் ஒருவர் சென்றதைக் கண்டதாகவும், இரத்த வெள்ளத்தில் இறந்தவர் விழுந்து கிடந்ததைக் கண்டதாகவும் தங்கராஜா நிலான் அளித்துள்ள சாட்சியமானது, அவருடைய தாயாராகிய சோமசுந்தரம் ஈஸ்வரியின் சாட்சியத்தை ஒப்புறுதி செய்கின்றது.

எதிரியிடமிருந்து பெறப்பட்ட வாக்குமூலத்திற்கு அமைவாக கொலைக்குப் பயன்படுத்திய கத்தியும், எதிரி அணிந்திருந்ததாக சாட்சியங்களில் தெரிவிக்கப்பட்ட கறுத்த ஜக்கட்டும் புலனாய்வு செய்த காவல்துறை அதிகாரியால் கைப்பற்றப்பட்டு சான்றுப் பொருட்களாக முன்வைக்கப்பட்டிருக்கின்றன. இந்தக் கொலைச் சம்பவத்தின் முக்கிய சான்றுப் பொருட்களாகிய கத்தி மற்றும் கறுத்த ஜக்கட் என்பவை தொடர்பில் நீதிமன்றத்தில் அளிக்கப்பட்ட சாட்சியங்கள் இந்த வழக்கில் சம்பந்தப்பட்டிருக்கின்றன என்பதை ஒப்புறுதி செய்கின்றன.

வெட்டுக்காயம் காரணமாகவே மரணம் சம்பவித்துள்ளது என்ற மருத்துவ பரிசோதனை நடத்திய டாக்டர் சின்னையா சிவரூபனின் சாட்சியமும், எதிரியின் உடைமையில் இருந்து கைப்பற்றப்பட்ட கத்தியினால் இந்த வெட்டுக்காயங்கள் ஏற்படுத்தப்பட்டிருக்கலாம் என்ற அவருடைய கூற்றும், இந்தக் கொலைச்சம்பவத்தை மேலும் ஒப்புறுதி செய்கின்றது.

அதேநேரம் சம்பவ நேரம், கோண்டாவிலில் நின்றதாக எதிரி இந்த மன்றில் அளித்துள்ள சாட்சியம் நம்பகத்தன்மையற்றது. எனவே சாட்சியம் மன்றினால் நிராகரிக்கப்படுகின்றது.

எதிரி தன்னுடைய வீட்டில் இருந்து கத்தியுடன் திட்டமிட்டு இறந்தவரின் வீட்டுக்குச் சென்று இறந்துபோன இதயனுடைய வீட்டில் அவருடன் வாக்குவாதப்பட்டு, இதயன் அயல் வீட்டிற்கு ஓடியபோது அவரைத் துரத்திச் சென்று அங்கு கத்தியால் வெட்டி அவரைக் கொலை செய்துள்ளார் என்பது நியாயமான அளவு சந்தேகத்திற்கு அப்பால் அளிக்கப்பட்ட சாட்சியங்களின் மூலம் எண்பிக்கப்பட்டுள்ளது. எனவே, அவருக்கு இந்த நீதிமன்றம் மரண தண்டனை வழங்கித் தீர்ப்பளிக்கின்றது.

தீர்ப்பளிப்பதற்கு முன்னதாக ஏதேனும் சொல்ல விரும்புகின்றீரா என எதிரியை நோக்கி நீதிபதி வினவினார்.

அப்போது எனக்கு இன்னும் திருமணமாகவில்லை. எனது சகோதரியையும் எனது தாயாரையும் பார்த்து பராமரிக்க வேண்டிய பொறுப்பும் சூழ்நிலையும் எனக்கு இருக்கின்றது. நான் உயிர் வாழ ஆசைப்படுகிறேன். எனக்கு மரண தண்டனை அளிக்க வேண்டாம் என எதிரியான ஜெகன் நீதிபதியிடம் தெரிவித்தார்.

எதிரியின் சார்பில் நீதிமன்றத்தில் ஆஜராகியிருந்த சட்டத்தரணி, கருணை விண்ணப்பம் செய்திருந்தார்.

மரண தண்டனை என்பது, சர்வதேச மனித உரிமைகள் சட்டத்திற்கு எதிரானது. இதனை மன்று கவனத்தில் எடுத்து தீர்ப்பளிக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன் என எதிரியின் சட்டத்தரணி தெரிவித்தார்.

இதற்குப் பதிலளித்த நீதிபதி இளஞ்செழியன்

கொலைக்குற்றவாளிக்கு மன்று, மரண தண்டனை வழங்க வேண்டும் என்று சடடம் பரிந்துரைக்கின்றது. பாராளுமன்ற சட்டத்தை மீறி என்னால் தீர்ப்பளிக்க முடியாது. எனவே கொலைக்குற்றம் புரிந்த இந்த எதிரிக்கு மரண தண்டனை விதிக்கப்படுகின்றது. இருப்பினும் சர்வதேச மனித உரிமைகள் சட்டம், மரண தண்டனையை ஏற்பதில்லை. சர்வதேச குற்றவியல் நீதிமன்றங்களில் மரண தண்டனை ஒழிக்கப்பட்டுள்ளது என்பதைக் கவனத்தில் கொண்டு, இந்த எதிரிக்கு விதிக்கப்பட்டுள்ள மரண தண்டனையை நிறைவேற்றாமல் ஆயுள் தண்டனை வழங்க வேண்டும் என்று ஜனாதிபதிக்கு பரிந்துரைத்து அறிக்கை சமர்ப்பிப்பதாகத் தெரிவித்தார்.

மரண தண்டனைத் தீர்ப்பு வாசிக்கப்பட்டபோது நீதிமன்றத்தின் விளக்குகள் அணைக்கப்பட்டன. சம்பிரதாயபூர்வமாக அனைவரும் எழுந்து நின்றனர். தீர்ப்பு வாசிக்கப்பட்ட பின்னர், மரண தண்டனைத் தீர்ப்பில் கையொப்பம் இட்ட பேனா முறித்தெறியப்பட்டது.
« PREV
NEXT »

No comments