நாரஹேன்பிட்டி விரைவுத் தபால் (கூரியர்) நிறுவன தலைமையகம் ஒன்றில் வைத்து லண்டனுக்கு அனுப்புவதற்கு தயாராக இருந்த போது மீட்கப்பட்ட புலிகளின் உயர் மட்டத் தலைவர்கள் பயன்படுத்தும் தொப்பி தொடர்பிலான விசாரணைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.
கொழும்பு தெற்குக்குப் பொறுப்பான உதவி பொலிஸ் அத்தியட்சர் நிஸாந்த சொய்ஸா, நாரஹேன்பிட்டி பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி கயான் பிரசன்ன ஆகியோரின் நேரடி கட்டுப்பாட்டில் இது தொடர்பிலான விசாரணைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.
இந் நிலையில் லண்டனுக்கு அனுப்பப்பட ஆயத்தமாக இருந்த குறித்த தொப்பியானது விடுதலைப் புலிகளின் புலனாய்வுப் பிரிவுக்கு பொறுப்பாக இருந்த பொட்டு அம்மானினால் பயன்படுத்தப்பட்டதாக பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.
இது தொடர்பில் சிற்சில தகவல்கள் விசாரணையாளர்களுக்கு கிடைத்துள்ள நிலையில் அதனை உறுதி செய்துகொள்ள தொடர்ந்தும் சூட்சும விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக பொலிஸ் தலைமையகத்தின் உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
இந் நிலையில் இந்த விவகாரத்துடன் தொடர்புடைய இருவரை பொலிஸார் கைது செய்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் உதவி பொலிஸ் அத்தியட்சர் ருவன் குணசேகர தெரிவித்தார்.
வவுனியாவைச் சேர்ந்த குறித்த இருவரையும் அங்கு வைத்தே கைது செய்ததாகவும் அவர்களை நேற்று முன்தினம் புதுக்கடை 3ம் இலக்க நீதிவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தியதாகவும் அதன் போது அவர்களை எதிர்வரும் 20ம் திகதிவரை விளக்கமறியலில் வைக்க உத்தரவிடப்பட்டதாகவும் உதவி பொலிஸ் அத்தியட்சர் ருவன் குணசேகர தெரிவித்தார்.
இது குறித்து மேலும் அறிய முடிவதாவது,
கடந்த வாரம் நாரஹேன்பிட்டியில் தலைமையகத்தைக் கொண்ட விரைவுத் தபால் நிறுவனம் ஒன்றிற்கு லண்டன் நோக்கி அனுப்ப பொதியொன்று அனுப்பட்டுள்ளது. காட் போர்ட் பெட்டியினாலான அந்த பொதியில் ஏற்பட்ட சந்தேகத்தால் அதனைப் பிரித்து அந்த நிறுவனம் சோதனை செய்துள்ளது.
இதன் போது அந்த பொதியில் 6 ரின் மீன்கள், 4 பால் ரின்கள், 4 பெட்சீட்டுக்கள் மற்றும் ஒரு காற்சட்டை ஆகின இருந்துள்ளன. காட்சட்டையின் பைக்குள் மிக சூட்சுமமாக மறைத்து வைக்கப்பட்டிருந்த நிலையில் தமிழீழ விடுதலைப் புலிகளின் தொப்பியொன்றி இருப்பது கண்டறியப்பட்டது.
இதனையடுத்தே நாரஹேன்பிட்டி பொலிஸாருக்கு வழங்கப்பட்ட தகவலுக்கு அமைய விசாரணைகள் ஆரம்பமாகியுள்ளன.இதன் போது குறித்த தொப்பியானது தமிழீழ விடுதலை புலிகளின் உயர் மட்ட தலைவர்கள் பயன்படுத்துவது என கண்டறிந்த பொலிஸார், அந்த பொதியானது குறித்த விரைவுத் தபால் நிறுவனத்தின் வவுனியா கிளையில் இருந்து கொண்டு வரப்பட்டு முகத்துவாரத்திலிருந்தே நாரஹேன்பிட்டி தலைமையகத்துக்கும் அனுப்பட்டுள்ளதை உறுதி செய்துகொண்டனர்.
இதனையடுத்து வவுனியா சென்ற விஷேட பொலிஸ் குழுவொன்று கடந்த வாரம் வவுனியாவில் உள்ள குறித்த நிறுவனத்தின் கிளைக்கு சென்று அங்கிருந்த சி.சி.ரி.வி. கண்காணிப்பு கமராவை மையப்படுத்தி விசாரணைகளை ஆரம்பித்துள்ளது.
இதன் போது முச்சக்கர வண்டியொன்றில் வரும் இருவர் அந்த பொதியை அங்கு ஒப்படைப்பது உறுதியாகியுள்ளது. இதனையடுத்து முச்சக்கர வண்டியில் வந்ததாக சந்தேகிக்கப்பட்ட வவுனியா - மன்னார் பஸ் வண்டி ஒன்றின் சாரதியான ஒருவரை பொலிஸார் முதலில் கைது செய்துள்ளனர்.
அதனையடுத்து அவரிடம் முன்னெடுக்கப்பட்ட விசாரணைகளுக்கு அமைய வவுனியா, பூவரசங்குளத்தைச் சேர்ந்த 38 வயதுடைய மற்றொருவரையும் பொலிஸார் கைது செய்துள்ளனர்.இவ்விருவரையும் பொலிஸார் தடுப்புக் காவலில் வைத்து விசாரணை செய்துவந்த நிலையிலேயே நேற்று முன் தினம் புதுக்கடை 3ம் இலக்க நீதிவான் நீதிமன்றில் ஆஜர் செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.
இது வரை முன்னெடுக்கப்பட்ட விசாரணைகளில் குறித்த பொதியானது லண்டனில் உள்ள இலங்கையரான ஒருவருக்கு அனுப்பட இருந்தமையும் சந்தேக நபர்கள் இருவரும் முன்னாள் விடுதலைப் புலிகள் இயக்க உறுப்பினர்கள் என்பதும் தெரியவந்துள்ளது.
இந் நிலையிலேயே இது தொடர்பிலான மேலதிக விசாரணைகளை மேல் மாகாணத்துக்கு பொறுப்பான சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் பூஜித்த ஜயசுந்தர குழுவினரின் ஆலோசனைக்கு அமைய நாரஹேன்பிட்டி பொலிஸ் நிலையத்தின் சிறப்புக் குழுவினரால் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
அத்துடன் இத்தொப்பியை போட்டு படங்கள் எடுத்து தாங்கள் புலிகள் அமைப்பில் இருந்தோம் என்று காட்டி அகதி அந்தஸ்து பெறுவதற்காக மேற்கொள்ளப்பட்ட முயற்சியா ? என்ற கோணத்திலும் விசாரணைகளை காவற்துறையினர் மேற்கொள்கின்றனர்.
அத்துடன் ரணில் அரசின் திட்டமிட்ட செயலாக இருக்கலாம் என அரசியல் அவதானிகள் தெரிவித்துள்ளார்கள்
No comments
Post a Comment