Latest News

April 05, 2016

இரண்டாகிறது தேமுதிக - அதிர்ச்சியில் வைகோ
by admin - 0

சென்னை: மக்கள் நல கூட்டணியுடன், தேமுதிக இணைந்ததால் தேமுதிகவில் பெரும் அதிருப்தி வெடித்துள்ளது. நாளை மதியத்திற்குள் திமுகவோடு கூட்டணி வைக்கும் முடிவை தேமுதிக அறிவிக்க வேண்டும் என்று கட்சி கொறடாவும், கொள்கை பரப்பு செயலாளருமான சந்திரகுமார் தலைமையில் கட்சி நிர்வாகிகள், விஜயகாந்த்துக்கு கெடு விதித்துள்ளனர்.

சென்னை பத்திரிகையாளர் மன்றத்தில் நிருபர்களை சந்தித்த சந்திரகுமார் கூறியதாவது: நான் தேமுதிகவின் கொள்கை பரப்பு செயலாளராகவும், சட்டமன்ற உறுப்பினராகவும் உள்ளேன். என்னோடு, மேட்டூர் சட்டசபை உறுப்பினர் பார்த்தீபன், கும்மிடிபூண்டி சேகர், தேமுதிக துணை செயலாளர் தேனி முருகேசன், உயர்மட்ட குழு உறுப்பினர் வீரப்பன், திருவண்ணாமலை மாவட்ட கழக செயலாளர் காத்திகேயன், வேலூர், ஈரோடு மற்றும் ஈரோடு தெற்கு மாவட்ட செயலாளர்கள், உள்ளிட்டோரும் உங்களை சந்திக்க வந்துள்ளனர்.


கடந்த 5 ஆண்டுகால அதிமுக ஆட்சியில் எவ்வளவோ நெருக்கடி தந்தனர், ஆசை வார்த்தை கூறினர். ஆனால் நாங்கள் அதை துச்சமென நினைத்து, விஜயகாந்த் சொல்வதை செய்து வந்தோம். கடந்த ஆட்சியில் மிகப்பெரிய பாதிப்பை சந்தித்தது தேமுதிகதான்.

பல்வேறு வழக்குகள் தொடரப்பட்டன. சிறையில் இருந்துள்ளோம். சட்டசபையில் ஓராண்டுக்கு சஸ்பெண்ட் செய்யப்பட்டோம். சாதாரணமாக ஒரு பொதுக்கூட்டம் நடத்தக்கூட கோர்ட்டில் சென்று அனுமதி பெற வேண்டிய நிலை இருந்தது.

எனவே, ஜெயலலிதாவை ஆட்சி கட்டிலில் இருந்து இறக்குவதற்காக எந்த தியாகத்தையும் செய்ய நான் தயாராக இருக்கிறேன் என்று பல பொதுக்கூட்டங்களில் விஜயகாந்த் பேசிவந்தார். இப்படி வாக்குறுதி கொடுத்துவிட்டு, கடந்த 10ம் தேதி தனித்து போட்டி என அறிவிப்பு வெளியிட்டார். இதுகுறித்து நாங்கள் பேசினோம். திடீரென யாருக்கும் தெரியாமல், 23ம் தேதி மக்கள் நல கூட்டணியுடன் கூட்டணி என அறிவித்துவிட்டார்.

தேமுதிக பொதுக்குழு, செயற்குழு கூட்டங்களின்போது, 95 சதவீதம் பேர் தேமுதிக, திமுகவோடு கூட்டணி வைக்க வேண்டும் என்று கூறினர். நேர்காணலின்போதும், திமுகவோடு பேசிவருவதாக கூறிவந்தார் விஜயகாந்த். ஆனால், தேமுதிக நிர்வாகிகள், தொண்டர்கள் மட்டுமின்றி, தமிழக மக்களின் மனநிலையை மறந்து, விஜயகாந்த் தனது நிலைப்பாட்டை மாற்றியதை யாரும் விரும்பவில்லை.

தமிழகத்திலுள்ள ஒட்டுமொத்த தொண்டர்களும் இதற்காக எங்களிடம் குமுறுகிறார்கள். தொண்டர்கள் தங்கள் சொந்த பணத்தை போட்டு கட்சியை வளர்த்தனர். தாலியை விற்று கூட இயக்கத்தை வளர்க்க செலவு செய்துள்ளனர். இதற்காகத்தான் கேப்டன் தனது முடிவை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்று பல முறை கேட்டோம்.

என்னிடம் கடைசியாக பேசியபோதுகூட, வேட்புமனுவை வாபஸ் பெறும் வரை கூட்டணி பேச முடியும், எனவே அமைதியாக இருங்கள் என்று விஜயகாந்த், கூறியதால் நாங்கள் அமைதியாக இருந்தோம். ஆனால் ஜெயலலிதா மீண்டும் ஆட்சிக்கு வர உதவும் வகையில் விஜயகாந்த் முடிவு அமைந்து விட்டது. தொண்டர்கள் மனப்பாங்கை மதித்துதான் தலைவன் முடிவை எடுத்திருக்க வேண்டும்.

திமுகவோடு தேமுதிக கூட்டணி பேச்சுவார்த்தை நடத்திவருகிறது என்று பத்திரிகையில் செய்தி வந்தபோதுகூட விஜயகாந்த் மறுப்பு தெரிவிக்கவில்லை. எனவே நாங்கள் நம்பிக்கையோடு இருந்து வந்தோம். மக்கள் நல கூட்டணியில் விஜயகாந்த் இணைய என்ன காரணம் என்று எங்களுக்கு இன்னும் விளங்கவில்லை


எங்களுக்கும் ஜெயலலிதாவுக்கும் சொந்த தகராறு போன்ற பிரச்சினையை உருவாக்கிவிட்டு மக்கள் நல கூட்டணியோடு விஜயகாந்த் கூட்டணி வைத்துக்கொண்டது ஏன்?

 கடந்த மாதம் 23ம் தேதி காலையில் 8 மணியளவில், தொலைபேசியில் எண்ணை அழைத்தார். அலுவலகத்தில் வேலை இருக்கிறது, சீக்கிரம் வாருங்கள் என்று அழைத்தார். நானும் சென்றிருந்தேன். திடீரென மக்கள் நல கூட்டணியினர் வந்து கூட்டணிக்கு ஒப்பந்தம் போட்டுக்கொண்டனர். இதுவரை எங்களை பொறுமையாக இருங்கள் என்று கூறிவந்த விஜயகாந்த், திடீரென தனது ஆண்டாள்-அழகர் கல்லூரியில் மக்கள் நல கூட்டணி மாநாட்டை நடத்துங்கள் என்று அறிவித்தார். மக்கள் நல கூட்டணியில்தான் இனி தொடருவார் என்பது உறுதியாகிவிட்டது என்பதை அப்போதுதான் நாங்கள் உணர்ந்தோம். எனவேதான் இப்போது பத்திரிகையாளரை சந்திக்கிறோம்.


தேமுதிகவில் இருந்து நாங்கள் யாரும் இன்னும் விலகவில்லை. நாங்கள் செதுக்கிய சிற்பம்தான் தேமுதிக. எங்கள் தலைவர் கேப்டனை இதுவரை நேரடியாக சந்தித்து பேசிவந்தோம். இப்போது, பத்திரிகையாளர்கள் வழியாக விஜயகாந்த்திடம் வேண்டி, விரும்பி மன்றாடி கேட்டுக்கொள்வதெல்லாம், திமுகவோடு கூட்டணி வைத்துக்கொள்ள வேண்டும் என்பதுதான். 


யார் சேர்ந்தாலும் சேராவிட்டாலும், திமுக ஆட்சியை பிடித்து, கருணாநிதி முதல்வராவார். கள நிலவரம் விஜயகாந்த், பிரேமலதாவைவிட எங்களுக்குத்தான் தெரியும். எனவே தேமுதிக இப்போது எடுத்துள்ள முடிவு தற்கொலைக்கு சமமானது. தனது முடிவை அவர் மாற்றிக்கொண்டால்தான் தேமுதிக இயக்கத்தை காப்பாற்றிக்கொள்ள முடியும். நாளை மதியம்வரை விஜயகாந்த்துக்கு நேரம் தருகிறோம். அதற்குள் அவர் எங்களை சந்தித்து பேசுவார் என்று நம்புகிறேன். இவ்வாறு சந்திரகுமார் தெரிவித்தார்.


அடுத்தகட்ட நடவடிக்கை என்ன என்ற நிருபர்கள் கேள்விக்கு, அந்த யோசனைக்கே நான் போகவில்லை. கேப்டன் நல்ல முடிவை எடுப்பார் என்ற நம்பிக்கை எனக்கு உள்ளது.


இந்த பிளவு நடவடிக்கையால் விஜயகாந்த்தை விட வைகோ அதிகளவில் அதிர்ச்சியடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது 







« PREV
NEXT »

No comments