வடமாகாண மக்களின் வாழ்வாதார மேம்பாட்டிற்கான உதவிப்பாலம் (உதவிகள் வழங்கும் நிகழ்வு) கைதடி ஸ்ரீ விநாயகர் மண்டபத்தில் கடந்த சனிக்கிழமையன்று நடைபெற்றபோது வடமாகாண முதலமைச்சர் சி.வி. விக்கினேஸ்வரன் ஆற்றிய உரை
சரியாக ஒரு வருட காலத்தின் பின்னர் இந்த நிகழ்வு மீண்டும் நடைபெறுகிறது. மூன்றாம் ஆண்டாக இந் நிகழ்வு ஆற்றுப்படுத்தப்படுகின்றது. உதவிப்பாலம்என்ற மக்கள் பயனுறுந் திட்டத்தின் கீழ் போரினால் பாதிக்கப்பட்ட எம் மக்கள் பலருக்கும் பலவிதமான உதவிகளை நாம் செய்து வருகின்றோம்.
எனினும் பாரிய திட்டங்களையே உலகம் எதிர்பார்க்கின்றது. ஆனால் அத்திட்டங்கள் வெளிநாட்டு நிறுவனங்களின் நிதி உதவியுடன் மத்திய அரசாங்கத்தினாலேயே செயற்படுத்தப்பட்டு வருகின்றன. பல தடவைகளில் எங்களிடம் கேட்காது எமது அலுவலர்களுடன் மட்டும் கலந்தாலோசித்தே இவ்விதமான பாரிய செயற்றிட்டங்கள் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றன. இதனால் நெல்சிப் போன்ற பாரிய செயற்றிட்டங்களில் ஊழல் நடைபெற்றபோது எம்மால் அது பற்றி நடவடிக்கைகள் எடுப்பது சிரமமாக இருந்தது. எமது மாகாணத்திற்குரிய எந்த பாரிய செயற்றிட்டமானாலும் எமக்கூடாகவே அவை மத்திய அரசாங்கத்தினால் நடைமுறைப்படுத்தப்பட வேண்டும். கடமைக்காகக் கடிதம் அனுப்பி தாம் நினைத்தவாறு நடந்துகொள்வதை நாம் கண்டித்து வருகின்றோம்.
65,000 பொருத்துவீடுகள் திட்டமும் தான் தோன்றித்தனமாக எமது பங்குபற்றல் எதுவுமின்றியே அறிமுகப்படுத்தப்பட்டுள்ள ஒரு செயற்றிட்டம். எமது பங்குபற்றலை நாம் ஒரு ஆணவப் போக்கில் கோரவில்லை. எம்மை மதிக்கவில்லை என்பதற்காக நாம் கோரவில்லை. மக்கள் பிரதிநிதிகளாகிய எங்களுடன் கலந்தாலோசித்தால் மக்கள் சார்பான கருத்துக்களை வெளியிடலாம் என்ற எண்ணத்திலேயே எம்முடன் கலந்தாலோசித்து முடிவுகளை எடுக்க வேண்டுகின்றோம். அத்துடன் அதிகாரப்பகிர்வு, அதிகாரப் பகிர்வு என்று வாய் கிழியக் கத்தி விட்டு இதைக்கூட எமக்குத் தெரியாமல் செயற்படுத்த முன்வந்தால் மத்தியின் உண்மையான மனநிலை என்ன என்ற கேள்வியே மேலோங்கி நிற்கும்.
இன்றும் சென்ற ஆண்டைப் போல் CSR (Corporate Social Responsibility) என்ற சமூகத்திற்கான வர்த்தகக் குழுமப் பொறுப்புணர்வு என்ற கொள்கை ஆற்றுப்படுத்தலானது எமது கொடையாளர்களால் எம் சார்பாகவே நடைமுறைப்படுத்தப்படுகின்றன. அவர்கள் அளிக்கும் உதவி எமது பாதிக்கப்பட்ட மக்களுக்கு வருடப்பிறப்பின் போது அவர்கள் வாழ்வில் ஒரு மறு மலர்ச்சியை ஏற்படுத்தும் என்பதில் ஐயமில்லை. இன்று இங்கு வந்திருப்போர் நித்திய கல்யாணி நகைமாளிகை வர்த்தக நிலையத்தின் சொந்தக்காரர் ஜெயராஜும் கொழும்பு வெள்ளவத்தை மயூராபதி அறங்காவலர் சுந்தரலிங்கமும் மட்டுமல்ல. சங்கம் அமைத்து பலர் இங்கு வந்துள்ளார்கள். அவர்களால் ஒழுங்கு செய்யப்பட்ட பண உதவியுடன் தான் இன்றைய இந்தக் கைங்கரியம் முன்னெடுத்துச் செல்லப்படுகிறது. அவர்கள் மயூராபதி அம்மன் நலன்புரிச்சங்கம் என்ற ஒரு சங்கத்தை அமைத்து அதனூடாக அதன் அங்கத்தவர்களின் உதவிகளைப் பெற்று போரினால் பாதிக்கப்பட்ட எமது மக்களுக்கு உதவ முன்வந்துள்ளார்கள். இங்கு வந்திருக்கும் அங்கத்தவர்கள் பலர் என்னை வந்து கொழும்பில் சந்தித்தும் இருக்கின்றார்கள். சைக்கிள்கள், தண்ணீர் பம்புகள், தையல் மெஷின்கள், பாடசாலைப் பைகள், காலணிகள் என்று பலவிதமான உதவிகளைத் தந்துதவியுள்ளார்கள்.
எம்மைச் சந்திக்கப் பல பாதிக்கப்பட்டமக்கள் புதன்கிழமைகளில் படையெடுத்து வருகின்றார்கள். பலரின் குறைகளைத் தீர்க்க முடியாத நிலையில் நாங்கள் அவர்கள் பெயர்களையும் தேவைகளையும் பதிந்துவைக்கின்றோம். இவ்வாறான நிகழ்வுகள் வந்ததும் அவர்களுக்கு எம்மாலான உதவிகளை வழங்குகின்றோம். பாதிக்கப்பட்ட மக்களை இனங்கண்டு உதவிகள் புரிகின்றோம்.
இன்றைய நிகழ்வு ஒரு தற்காலிகமான மகிழ்வேற்றும் நிகழ்வே. வருடப்பிறப்பின் போது இங்கு வந்திருக்கும் பயனாளிகளுக்கு ஏதோ ஒரு உதவி கிடைக்கப் போகின்றது. ஆனால் அது உங்களை வருடப் பிறப்பின் போது மகிழ்வுடன் வைத்திருக்க எமது கொடையாளிகள் தரும் உதவி. அதை நாங்கள் மதிக்கின்றோம். வரவேற்கின்றோம். மகிழ்வுடன் கையேற்கின்றோம். உங்களிடம் கையளிக்கின்றோம். ஆனால், வெறும் உதவிகளிலேயே காலத்தைக் கடத்தும் ஒரு பழக்கம் எங்களுள் சிலருக்கு இப்பொழுது பழக்கப்பட்டு வருகிறது. எங்காவது சென்று ஏதாவது உதவிகளைப் பெற்று அன்றாடம் வயிற்றை நிரப்ப அவர்கள் ஆயத்தமாகி இருக்கின்றார்கள். இது தவறான வழிமுறை.
பல மாணவ மாணவிகள் பிறநாடுகளில் இருந்து அவர்களின் உற்றார், உறவினர் அனுப்பும் பணத்தை நம்பி வாழ்ந்து வருகின்றனர். அங்கு அவர்கள் எவ்வளவு பாடுபட்டு வயிற்றைக் கட்டி,வாயைக் கட்டிப் பணம் அனுப்புகின்றார்கள் என்பதை எம்முள் பலர் அறிவதில்லை, உணர்வதில்லை. மாணவமாணவியர் தம் சொந்தக் கால்களில் நின்று முன்னேற முடிவெடுக்கவேண்டும். படித்துவிட்டு வேலை கிடைக்காது தவிக்கின்றோம் என்று பலர் கூறுவது எனது காதுகளுக்குக் கேட்கின்றது. ஆனால் அந்த நிலை நிரந்தரமானதாக இருக்காது. வெளிநாட்டுப் புலம்பெயர் எமது மக்களின் உதவியுடன், எமது கொடையாளிகளின் உதவியுடன் பல செயற்திட்டங்களைச் செயன்முறைப்படுத்தப்போகும் காலம் வெகுதூரத்திலில்லை.
படித்தவர்களும் பாமரர்களும் ஏதாவது தொழில்களில் ஈடுபடவேண்டும். கணினி பாற்பட்ட தொழில்களையும் சிறுகைத்தொழில்களையும் நாம் ஊக்குவித்து வருகின்றோம். எம்மைப் பொறுத்தவரையில் பாரிய தொழிற்சாலைகளையும் ஆலைகளையும் நிறுவி மக்களை ஒரு இடத்திற்குக் கொண்டுவந்து பலவித சமூகச் சிக்கல்களை ஏற்படுத்தாது எமது சூழலை தொடர்ந்திருக்கச் செய்து மக்கள் தாம் இருந்த இடங்களில் இருந்தே சிறுகைத்தொழில்களில் ஈடுபடவும் சந்தைவாய்ப்புக்களைப் பெறவும் நாம் ஆவன செய்து வருகின்றோம்.
ஆகவே, இன்றைய கொடைகள் கையளிக்கும் நிகழ்வு பாதிப்புற்ற மக்களின் மனங்களில் வருடப் பிறப்பின் போது மன மகிழ்வை ஏற்படுத்தவே நாமும் எமது கொடையாளர்களும் சேர்ந்து செய்யும் கைங்கரியம். தொடர்ந்து உங்களை கையேந்துபவர்களாக நாங்கள் வைத்திருக்கமாட்டோம். ஆகவே சிறியமத்தியதர தொழில் முயற்சிகளில் யாவரும் இறங்க முன்வரவேண்டும். உதாரணத்திற்கு நெசவுத் தொழிலை மக்களிடையே பரப்பி அவர்களின் படைப்புக்களை ஏற்று சந்தைப்படுத்தி பயனைப் பெறலாம். இவ்வாறான தொழில்களில் நீங்கள் ஈடுபடவும் எமது கொடையாளர்கள் உதவுவார்கள் என்பதற்கு ஏற்கனவே டிமார்க் ஜெயராஜ் உத்தரவாதம் அளித்துள்ளார். அவருக்கு எனது மனமார்ந்த நன்றிகள் உரித்தாகுக. எங்கள் தொழிற்றிறனை மேம்படுத்த வேண்டும். எமது கைத்தொழில்களின் தரத்தை நாம் மேம்படுத்த வேண்டும். மற்றவர்களின் உதவிகளை எதிர்பார்க்கும் குணம் போய் தன்னுறுதியுடன் தங்கள் தங்கள் சொந்தக் கால்களில் நிற்க எம்மவர்கள் பழகிக் கொள்ளவேண்டும்.
எமது கொடையாளர்களுக்கு எமது மனப்பூர்வமான நன்றிகளைத் இத்தருணத்தில் கூறிவைக்கின்றேன். உங்கள் நற்செயல்களால் எமது பாதிக்கப்பட்ட மக்களில் சிலருக்கேனும் இவ்வருட வருடப் பிறப்பு வெளிச்சம் கொண்டதாகத் திகழப் போகின்றது. அதேநேரம் அவர்கள் ஏதாவது நிரந்தர கைத்தொழில்களில் ஈடுபட நாங்கள் ஆவன செய்ய வேண்டும்.
காலஞ்சென்ற சௌமியமூர்த்தி தொண்டமான் 500க்கும் மேற்பட்ட குடிசைக் கைத்தொழில்களை அடையாளம் கண்டு தனது மலையக மக்கள் அவற்றில் ஏதாவதொன்றில் ஈடுபட்டுப் பயன்பெறவேண்டும் என்று கோரி நின்றார். மலையக மக்கள் பலர் மேற்படி குடிசைக் கைத்தொழில்களில் ஈடுபட்டுத் தமது வருமானங்களை விருத்தி செய்து மேம்படுத்தியும் வந்தனர். கைத்தொழில்கள் பற்றிய அறிவை மேம்படுத்தி மக்களுக்கு அறிமுகப்படுத்தவேண்டும். அதற்கான நடவடிக்கைகளில் எமது கைத்தொழிற் திணைக்களம் ஈடுபடவேண்டும்.
எமது மக்களில் பலர் இந்திய வீட்டுத் திட்டத்தின் கீழ் வீடுகளைக் கட்டத் தொடங்கிவிட்டு அவற்றைப் பூர்த்தி செய்ய நிதிவளம் இல்லாது தவிக்கின்றனர். அவர்களின் வீடுகளைக் கட்டி முடிக்க வெறும் இரண்டு அல்லது மூன்று இலட்சங்களே தேவைப்படுகிறது. ஒரு சுழலும் நிதியம் Revolving Fund ஒன்றை ஏற்படுத்திக் கடன் அடிப்படையில் அவர்களுக்கு மிகக் குறைந்த வட்டியுடன் இவ்வாறான கடன்களைக் கொடுத்துக் காலக்கிரமத்தில் அவற்றைத் திரும்பப் பெற்றுக் கொள்ளலாம். வீடுகளைக் கட்டத் தொடங்கி முடிவுறச் செய்யமுடியாது தவிக்கும் பலருக்கு இப்பேர்ப்பட்ட ஒரு சுழலும் நிதியம் மறுமலர்ச்சியை உண்டுபண்ணும். அவ்வாறான ஒரு நிதியத்தை நடைமுறைப்படுத்த எமது அலுவலர்கள் தகைமை உடையவர்களாக இருக்கின்றார்கள் என்று இங்கு கூறிவைக்க விரும்புகின்றேன்.
பலர் எமக்குப் பணம் அனுப்புகின்றார்கள். அவற்றை ஒரு சிறப்பு வங்கிக் கணக்கில் இட்டு, உதவி கோரும் மக்களின் உண்மையான நிலை பற்றி எங்கள் அலுவலர்களைக் கொண்டு ஆராய்ந்தறிந்து அறிக்கை பெற்று, பணஉதவி செய்து, அவர்களின் தேவைகள் பூர்த்தியடைகின்றனவா என்று தொடர் நடவடிக்கைகள் எடுத்து வருகின்றோம். தேவையென்றால் சுழல் நிதியப் பாவனையை நடைமுறைப்படுத்தவும் எமது அலுவலர்கள் உதவுவார்கள் என்று கூறிவைக்கின்றேன். எம்மைப் பொறுத்தவரையில் நாங்கள் மக்களைப் பிராந்திய ரீதியாகவோ மத, மொழி, சாதி ரீதியாகவோ பிரித்துப் பார்க்காது வகையற்றவர்கள் வளம் பெற உதவவேண்டும் என்ற குறிக்கோளுடன் சேவையாற்றி வருகின்றோம். உங்கள் அனைவரதும் வரவு நல்வரவாகுக என்று வாழ்த்துகின்றேன். உங்கள் கொடைப்பணி சிறக்க வாழ்த்துகின்றேன். எமது மக்கள் வாழ்வு விரைவில் மலர வேண்டும் என்று பிரார்த்தித்துக் கொண்டு எனது சிற்றுரையை இத்துடன் நிறைவுசெய்கின்றேன்.
Close
No comments
Post a Comment