கனடா மொன்றியலைச் சேர்ந்த கியூபெக் தமிழர் அமைப்பு தாயகத்தில் யுத்தத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கான வாழ்வாதார உதவிகளை வழங்கியுள்ளது.
மூன்று இலட்சத்திற்கு மேற்பட்ட நிதியில் 16 பயனாளி குடும்பங்களுக்கு வாழ்வாதார உதவிகள் வழங்கப்பட்டுள்ளன.
மேற்படி வாழ்வாதார உதவிகள் கிளிநொச்சி மாவட்ட தமிழ் தேசியக் கூட்டமைப்பு அலுவலகமான அறிவகத்தில் வைத்து நேற்று காலை 10.00 மணிக்கு பயனாளிகளிடம் பாராளுமன்ற உறுப்பினர் சி.சிறீதரனால் வழங்கிவைக்கப்பட்டுள்ளன.
பயனாளிகள் விருப்புக்கமைவாக தையல் மெசின், விவசாயச் செய்கைக்கான நீர் இறைக்கும் இயந்திரங்கள், துவிச்சக்கர வண்டிகள், ஆடு, கோழி வளர்ப்பதற்கான உதவிகள் என்பன வழங்கப்பட்டிருந்தன.
புயனாளிகளிடம் உதவிகளை வழங்கி வைத்து மக்கள் மத்தியில் கருத்துத் தெரிவித்த பாராளுமன்ற உறுப்பினர் சிறீதரன் அவர்கள் 'எமது மக்களுக்கான வாழ்வாதார உதவிகளை புலம்பெயர் சமூகத்தைச் சேர்ந்த எமது உறவுகள் வழங்கிவருகின்றமையானது மிகவும் வரவேற்கத்தக்கதாகும். அவர்களின் இந்தக்காலத்திற்கேற்ற இப்பணியானது காலத்தால் மறக்கப்படமுடியாத மகத்துவமானதாகும்.
நடைபெற்ற கொடிய யுத்தத்தின் பின்னர் எமது மக்களின் வாழ்வியல் சிதைக்கப்பட்டு ஏதிலிகளாக ஆக்கப்பட்டுள்ளார்கள். இந்த மக்களுக்கான உதவிகளை எமது புலம்பெயர் உறவுகள் வழங்கிவருகின்றார்கள். யுத்தம் தந்த கொடுமையால் எமது உறவுகள் எத்தனையோபேர் தமது அவயவங்களை இழந்துள்ளமையாலும் தமது வளங்களை இழந்துள்ளமையாலும் உழைத்துக் குடும்பத்தைக் காக்கும் பிள்ளைகளை, குடும்பத் தலைவனை இழந்துள்ளமையாலும் அவலப்படவேண்டியவர்களாகக் காணப்படுகின்றார்கள்.
மற்றும் யுத்தத்தில் பலருடைய அவயவங்கள் இழக்கப்பட்டமையால் திறன்வாய்ந்த தொழில்களில் ஈடுபடமுடியாத நிலையிலுள்ளார்கள் இப்படியானவர்கள் தையல், கால்நடைவளர்ப்பு, சிற்றுண்டி வகைகள் உற்பத்தி போன்ற தொழில்களினூடாக மட்டுப்படுத்தப்பட்ட வருமான வழிகளோடுதான் வாழவேண்டியவர்களாகவுள்ளார்கள். இந்த இடத்தில் கியூபெக் தமிழர் அமைப்பு எனப்படும் எமது சகோதரர்கள் உங்களை நினைத்து தங்கள் உழைப்பின் ஒருபகுதியை உங்களுக்குத் தருவதனூடாக தமது நல்ல செயற்பாட்டினையும் எமது இனம் என்ற உணர்வையும் வெளிக்காட்டியுள்ளார்கள்.
இந்த உதவியைப் பெறும் நீங்கள் உங்களது முயற்சியால் முன்னுக்கு வந்து அவர்களது எதிர்பார்ப்புகள் நிறைவேற உதவுவீர்கள் என நம்புகிறேன். துமிழர்கள் எங்கிருந்தாலும் தமது இன உணர்வையும் தமது உறவுகளுக்கு உதவும் மனப்பாங்கினையும் மறந்துவிடமாட்டார்கள் என்பதே உண்மை.' ஏன்றார்.
மேற்படி உதவி வழங்கும் நிகழ்வில் வடக்கு மாகாணசபை உறுப்பினர் சு.பசுபதிப்பிள்ளை, கட்சியின் மாவட்ட அமைப்பாளர் அ.வேழமாலிகிதன், கட்சியின் இளைஞர் அணித் தலைவர் சு.சுரேன் மற்றும் கட்சியின் செயற்பாட்டாளர்கள் ஆகியோரும் கலந்துகொண்டு மக்களுக்கான உதவிகளை வழங்கிவைத்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.
No comments
Post a Comment