Latest News

April 14, 2016

ஒரு இனத்தின் வரலாற்று மூலாதாரங்களாக நுல்கள் காணப்படுகின்றன - சிறீதரன் எம்.பி தெரிவிப்பு!
by admin - 0

ஒரு இனத்தின் வரலாற்று மூலாதாரங்களாக நுல்கள் காணப்படுகின்றன அதனைப் பேணிப் பாதுகாக்க வேண்டியது எமது பொறுப்பாகும் என சாவகச்சேரி நூலகத் திறப்பு விழாவில் சிறீதரன் எம்.பி தெரிவிப்பு.

அமரர் சின்னையா சுந்தரலிங்கம் ஞாபகார்த்த நூலகத் திறப்பு விழா கடந்த 10 ஆம் திகதி காலை 9.00 மணிக்கு மிருசுவிலில் நடைபெற்றது. இந்நிகழ்வில் பிரதம விருந்தினராகக் கலந்துகொண்ட சிவஞானம் சிறீதரன் அவர்கள் நூலகத்தைத் திறந்து வைத்து உரையாற்றும் போதே மேற்படி கருத்துக்களைத் தெரிவித்தார்.

அவர் தனது உரையில் மேலும் குறிப்பிடுகையில், ஒரு காலத்தின் கண்ணாடி எனக் குறிப்பிடப்படும் வரலாற்றை இன்னொரு காலத்தில் அறிவதற்கு அக்காலத்தில் எழுந்த நூல்களே முக்கிய ஆதாரங்களாகக் காணப்படுகின்றன. ஒரு நாட்டின், ஒரு இனத்தின் வரலாற்றை அறிவதற்கு அங்கு தோற்றம்பெற்ற நூலாதாரங்களே முக்கியமானவையாக விளங்குகின்றன. ஒரு இனத்தை அழிக்கவேண்டுமானால் அந்த இனத்தின் வரலாற்று மூலாதாரங்களான நூல்களையே முதலில் அழிக்க வேண்டும். அதனால் அந்த இனத்தின் தொன்மை, பண்பாடு, கலாசாரம் என்பன காலப்போக்கில் தானாகவே அழிந்து சிதைந்து அந்த இனமே காணாமல்போய்விடும். ஆந்த அடிப்படையில்தால் ஈழத்தமிழர்களாகிய எம் இனத்தை அழிக்க நினைத்த சிங்களப் பேரினவாதம் எமது வராலற்றுப் பொக்கிசங்கள் நிறைந்து காணப்பட்ட யாழ்ப்பாணப் பொது நூலகத்தை தீவைத்து எரித்தழித்தது. எமது வரலாற்றில் என்றைக்குமே மறக்க முடியாத கறைபடிந்த வரலாறாகவே இது நோக்கப்படுகின்றது.

எமது இனத்தின் ஆதாரங்களை அழிக்க முயல்பவர்களிடமிருந்து அதனைப் பேணிப் பாதுகாக்கவேண்டிய பொறுப்பும்; அதனை எமது அடுத்த சந்ததிக்கு பேணிப் பாதுகாத்து வழங்க வேண்டிய பொறுப்பினையும் அறிவுப் பசிக்குத் தீனிபோடுகின்ற கடப்பாட்டினையும நூலகங்கள் ஆற்றி வருகின்றன. இன்றைய தினம் இந்த மிருசுவில் கிராமத்தில் இந்த நூலகம் ஆராம்பிக்கப்பட்டமையானது இங்குள்ள மாணவர்கள் முதல் அனைவருக்கும் மிகவும் பயனுள்ளதாக அமைகின்றது என்பது மிகவும் வரவேற்கத்தக்க மகிழ்ச்சியான விடயமாகும்.

தற்போதைய காலகட்டத்தில் வாசிப்புப் பழக்கம் மிகவும் குறைவாகக் காணப்படுவதாகக் சொல்லப்படுகின்றது. வாசிப்பு என்பது தனிமனித ஆளுமையை வளர்க்கின்றது மனிதனிடம் புத்தாக்கச் சிந்தனைகளை ஏற்படுத்துகின்றது. நல்ல நூல்களை வாசிப்பதன் மூலம் மனிதர்களிடத்திலே நல்ல சிந்தனைகள் தோற்றுவிக்கப்படுகின்றன. 
நல்ல நூல்களை வாசிப்பதன் மூலம் மனிதன் நல்வழிப்படுத்தப்படுவதுடன் அதே போன்ற நூல்களை தாமும் ஆக்க வேண்டும் என்னும் ஆக்க முயற்சியும் ஏற்படுத்தப்படுகின்றது. இனப் பற்றும் மொழிப் பற்றும் ஏற்படுகின்றது. எமது இனத்தின் வரலாற்றை எமது பண்பாட்டை கலாசாரத்தைப் பாதுகாக்க வேண்டும் என்ற மனநிலை இயல்பாகவே தோற்றுவிக்கப்படும்.


எனவே எமது மொழியை எமது பண்பாட்டை எமது கலாசாரத்தைக் பேணி எமது இனத்தின் வரலாற்றைப் பாதுகாக்கின்ற அதே நேரம் எமது இனத்தின் விடிவுக்காக உழைக்கக் கூடிய உத்தமர்களை உருவாக்க உறுதுணையாக இருக்கும் நூல்களைப் பேணிப் பாதுகாப்பதற்கும் அவற்றை உரிய முறைப்படி பயன்படுத்திப் பயனடைவதற்கும் ஏற்ற நூலகங்கள் உருவாக்கப்படுவது இன்றைய காலத்தின் தேவையாகக் காணப்படுகின்றது.' எனத் தனது உரையில் குறிப்பிட்டார்.

இந்நிகழ்வில் சிறப்பு விருந்தினர்களாக வடமாகாணசபை உறுப்பினர் கே.சயந்தன், தமிழரசுக் கட்சியின் சாவகச்சேரித் தொகுதிக் கிளையின் தலைவர் க.அருந்தவபாலன் ஆகியோரும் கௌரவ விருந்தினர்களாக பேராசிரியர் அ.நவரத்தினராஜா, சனசமூக அபிவிருத்தி உத்தியோகத்தர் திருமதி செ.ஜெகதீசன், சமூகசேவை ஆர்வலரும் ஓய்வு நிலைக் கணக்காளருமான சி.குகேந்திரன் ஆகியோருடன் மிருசுவில் விநாயகர் சனசமூகநிலையத்தின் தலைவர் செயலாளர் மாணவர்கள் மக்கள் எனப் பலரும் கலந்துகொண்டிருந்தமை இங்கு குறிப்பிடத்தக்கதாகும்.








« PREV
NEXT »

No comments