யாழ். வண்ணை காமாட்சி அம்மன் (நாச்சிமார் கோவில்) மீது பாடப்பட்ட நினைவெல்லாம் காமாட்சி என்ற பக்திப் பாடல் இறுவட்டின் வெளியீட்டு விழா கடந்த 10.04.2016 ஆம் திகதி கோப்பாய் ஆசிரிய கலாசாலையின் பிரதி முதல்வர் ச.லலீசன் தலைமையில் ஆலய முன்றிலில் அமைக்கப்பட்ட விசேட பந்தரில் இடம்பெற்றது.
ஒலியமைப்பாளர் மினி மகாலிங்கத்தின் தயாரிப்பிலும் இசையமைப்பாளர் ஜி.சாயிதர்ஷனின் இசையமைப்பிலும் வெளிவந்துள்ள இந்த இறுவட்டின் வெளியீட்டு விழாவின் பிரதம விருந்தினராக இந்திய துணைத்தூதர் ஆ. நடராஜன் கலந்து கொண்டு இறுவட்டை வெளியிட்டு வைத்தார்.
நிகழ்வில் வண்ணை காமாட்சி அம்மன் ஆலயப் பரிபாலன சபைத் தலைவர் க.சிவகுமார் வரவேற்புரையையும் நல்லை திருஞானசம்பந்தர் ஆதீன முதல்வர் ஸ்ரீலஸ்ரீ சோமசுந்தரதேசிக ஞானசம்பந்த பரமாசாரிய சுவாமிகள் ஆசியுரையையும் தெல்லிப்பழை துர்க்காதேவி தேவஸ்தானத் தலைவர் கலாநிதி ஆறு. திருமுருகன் சிறப்புரையையும் யாழ். பல்கலைக்கழக விரிவுரையாளர் பா. அகிலன் அறிமுகவுரையையும் இசைவாணர் கண்ணன் இறுவட்டு வெளியீடு தொடர்பான ஏற்புரையையும் இசையமைப்பாளர் கோ. சத்தியன் (முரளி) நன்றியுரையையும் ஆற்றியிருந்தார்கள்.
இந்திய இலங்கைக் கலைஞர்களின் கூட்டுத் தயாரிப்பாக பத்துப் பாடல்களைக் கொண்டு இவ்விறுவட்டு வெளிவந்துள்ளது. இறுவட்டில் உள்ள பாடல்களை அமரர் வீரமணி ஐயர் மற்றும் தமிழகப் பாடலாசிரியர்களான வ.கருப்பன், முகிலன் ஆகியோர் எழுதியுள்ளனர். பாடல்களை சாந்தன் மற்றும் தமிழகப் பாடகர்களான மதுபாலகிருஸ்ணன், ஓ.எஸ்.அருண், அனுராதா ஸ்ரீராம், சோனியா, பிரசன்னாராவ், சின்மயி, சத்தியப்பிரகாஷ் ஆகியோர் பாடியுள்ளனர்.
மேற்படி இறுவட்டுக்கு இசைவழங்கிய கோ. சாயிதர்ஷன், ஈழத்தின் மூத்த இசையமைப்பாளர் இசைவாணர் கண்ணனின் புதல்வர் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.
No comments
Post a Comment