Latest News

April 03, 2016

வடக்கில் சிங்கள குடியேற்றம் – இனப்படுகொலையை ஒத்தது : அமெரிக்காவிடம் சி.வி
by admin - 0

வடக்கில் திட்டமிட்ட வகையில் சிங்கள குடியேற்றம் இடம்பெறுவதானது, இனப்படுகொலை போன்ற விடயங்களை ஒத்த செயலென அமெரிக்க தூதுக்குழுவிடம் வடக்கு முதல்வர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

இலங்கைக்கு விஜயம் செய்துள்ள அமெரிக்க இராஜாங்க திணைக்களத்தின் பூகோள குற்றவியல் நீதிக்கான பணியகத்தின் விசேட இணைப்பாளர் ரொட் புச்வால்ட் தலைமையிலான குழுவினர், வடக்கு முதல்வரை நேற்று (சனிக்கிழமை) கொழும்பில் சந்தித்துள்ளனர். இதன்போதே வடக்கு முதல்வர் மேற்கண்டவாறு தெரிவித்தார். குறித்த சந்திப்பு குறித்து அவர் தெரிவிக்கையில்-

‘கடந்த அரசாங்கத்தைப் போலவே மத்திய அரசாங்கமும் மாகாண சபைகளை புறக்கணித்து செயற்படுகிறது. மாகாண சபைகளிடம் கேட்காது மத்திய அரசாங்கம் சுயமாக தீர்மானங்களை மேற்கொள்கின்றது. இதனால் வரும் சிக்கல் நிலைமைகளை அமெரிக்க தூதுக்குழுவிடம் எடுத்துரைத்தேன். குறிப்பாக வடக்கில் மேற்கொள்ளப்படவுள்ள 65 ஆயிரம் வீடடுத்திட்டம் குறித்து எம்மிடம் கலந்தாலோசிக்காது அதனை ஆரம்பிக்கவுள்ளனர். இதனால் பயனடையப் போவது எமது மக்கள். ஆகவே, இது எந்தளவுக்கு பொருத்தமானதென எம்மிடம் கலந்துரையாடி மேற்கொண்டிருக்க வேண்டும் என குறிப்பிட்டேன்.

வடக்கு கிழக்கிற்கான அதிகாரப் பகிர்வை பிரதானமாகக் கொண்டே 13ஆவது திருத்தச் சட்டம் கொண்டுவரப்பட்டது. ஆனால் மற்றையை மாகாணங்களைப் போன்று வடக்கு மாகாணத்தையும் நடத்துவதை ஏற்றுக்கொள்ள முடியாது. இதன்படி தமிழ் மக்கள் புறக்கணிக்கப்படுகிறார்கள் என்பதே அர்த்தப்படும்.

காணி விவகாரம் தொடர்பாகவும் தெளிவுபடுத்தினேன். வடக்கு கிழக்கில் இன்னும் மக்கள் மீளக் குடியேற முடியாத அளவுக்கு பிரச்சினைகள் உள்ளன. மக்களின் பெருமளவான காணிகள் இராணுவத்தினர் வசமுள்ள அதேவேளை, மக்களது காணிகளுக்கு அருகில் இராணுவ முகாம் காணப்படுகிறது. மக்களது காணிகளில் இருந்து கிடைக்கும் வருமானங்களை இராணுவத்தினரே அனுபவித்து வருகின்றனர். இவ்வாறான நிலைமைகளுக்கு விரைவில் தீர்வு காணப்படவேண்டுமென்பதையும் நான் வலியுறுத்தினேன்.

அத்தோடு, வடக்கில் சிங்கள குடியேற்றங்கள் இடம்பெறுவது தொடர்பாகவும் சுட்டிக்காட்டினேன். யுத்த காலத்தில் மக்கள் தமது காணிகளை கைவிட்டு இடம்பெயர்ந்திருந்த நிலையில், கடந்த அரசாங்கத்தின் காலத்தில் அவற்றில் சிங்கள குடியேற்றங்கள் இடம்பெற்றன. அருகில் இராணுவத்தினர் இருப்பதால் அங்கு சிங்கள குடியேற்றங்கள் இடம்பெறுவது இலகுவாக உள்ளது. இவ்வாறான விடயங்கள், இனப்படுகொலை போன்ற செயற்பாடுகளுக்கு சமமானது என்பதை அமெரிக்க குழுவினரிடம் தெரிவித்தேன்’ என்றார்.
« PREV
NEXT »

No comments