அமெரிக்க ஜனாதிபதி பராக் ஒபாமா, முதல் பெண்மணி மிசெல் ஒபாமா சகிதம் 3 நாள் விஜயத்தை மேற்கொண்டு பிரித்தானியாவை வியாழக்கிழமை பின்னிரவு சென்றடைந்தார்.
இதன் போது அவர், பிரித்தானியா ஐரோப்பிய நேச நாடுகளுடன் இணைந்து பணியாற்றுமானால் அந்நாட்டின் தீவிரவாதத்துக்கு எதிரான போர் மேலும் பயனுறுதிப்பாடு மிக்கதாக அமையும் என தெரிவித்தமை பெரும் சர்ச்சையைத் தோற்றுவித்துள்ளது.
பிரித்தானிய 'டெயிலி டெலிகிராப்' பத்திரிகைக்கு வழங்கிய கருத்திலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
உலகமெங்குமான பிரித்தானியாவின் செல்வாக்கை ஐரோப்பிய ஒன்றியம் அதிகரிக்கும் என அவர் கூறினார்.
,
பிரித்தானியாவில் எதிர்வரும் ஜூன் 23 ஆம் திகதி நடைபெறவுள்ள ஐரோப்பிய ஒன்றிய சர்வஜன வாக்கெடுப்புக் குறித்து தலையீடு செய்யும் கருத்தை பராக் ஒபாமா வெளியிட்டுள்ளமை , ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து விலக விரும்பும் பல பிரித்தானியர்கள் மத்தியில் கடும் சர்ச்சையையும் விவாதத்தையும் ஏற்படுத்தியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
எனினும் அந்தப் பத்திரிகைக்கு வழங்கிய கருத்தில் பராக் ஒபாமா, மேற்படி விவகாரம் தொடர்பில் பிரித்தானிய வாக்காளர்களே தீர்மானிக்க வேண்டியவர்களாக உள்ளார்கள் என்று குறிப்பிட்டிருந்தார்.
அந்த சர்வஜன வாக்கெடுப்புகள் தொடர்பான பெறுபேறுகளில் அமெரிக்கா ஆழ்ந்த அக்கறை கொண்டிருப்பதாக அவர் தெரிவித்தார்.
இது தொடர்பில் பிரித்தானிய அரசியல்வாதியான போரிஸ் ஜோன்ஸன் கருத்து வெளியிடுகையில், 'நான் சொல்வது போன்று செய்யுங்கள். ஆனால் நான் செய்வதைப் போன்று செய்யாதீர்கள் என்ற கருத்துக்கு பொருத்தமான உதாரணமாக இது உள்ளது' எனக் குறிப்பிட்டுள்ளார்.
"அமெரிக்காவானது ஐரோப்பிய ஒன்றியம் போன்று தமது சொந்த கண்டத்திலுள்ள அயல்நாடுகளுடன் தனக்கென எந்த பிணைப்பையும் கொண்டிராத நிலையில், எங்களுக்கு அத்தகைய பிணைப்பு சரியானது என அவர்கள் ஏன் நினைக்கிறார்கள் என்று புரியவில்லை" என அவர் கூறினார்.
பிரித்தானியாவின் செல்வாக்கு ஐரோப்பிய ஒன்றியத்துக்கு வெளியில் அல்லாது உள்ளேயிருக்கும் போது அதிகமாக இருப்பதாகக் கூறுவது அபத்தமானது என போரிஸ் ஜோன்ஸன் மேலும் தெரிவித்தார்.
No comments
Post a Comment