வட்டமடு விவசாய காணிகளில் விவசாயம் செய்வதற்கு வனபரிபாலன அதிகாரிகள் தடையை ஏற்படுத்தினால் சாலைமறியல் போராட்டத்தை நடத்துவோம் என வட்டமடு விவசாய அமைப்புக்களின் தலைவர் ஏ.எம்.எம்.முகைதீன் தெரிவித்தார்.
வட்டமடு விவசாய அமைப்புக்கள் சேர்ந்து அக்கரைப்பற்று ரி.எவ்.சி.ஹோட்டலில் நடத்திய பத்திரிகையாளர் மாநாட்டில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர்,
திருக்கோவில் பிரதேச செயலகத்துக்குட்பட்ட வட்டமடு பிரதேசத்தில் வட்டமடு ஏழை விவசாயிகளாகிய நாங்கள் 1970 ஆம் ஆண்டு தொடக்கம் 2013 ஆம் ஆண்டு வரை நிம்மதியாக சுமுகமானமுறையில் விவசாயம் செய்து வருகின்றோம். இக்காணிகளுக்கான வர்த்தமானி அறிவித்தலும் உள்ளது. இக்காணிகள் அக்கரைப்பற்று கிழக்கு கமநல சேவை நிலையத்தின் கீழ் உள்ளன.இக்காணிகளுக்கான (எல்.டீ.ஓ) அனுமதிப்பத்திரமும் உள்ளது. உரமானியம் பெற்றுக்கொண்டமை, வரிசெலுத்தியமை உள்ளிட்ட விவசாயம் செய்தமைக்கான சகல ஆவணங்களும் உள்ளன.
இதற்கு மேலதிகமாக 1970ஆம், 1980ஆம் ஆண்டு காலப்பகுதிகளில் வட்டமடு வயல் பிரதேசத்தில் விவசாயிகள் குடும்பத்துடன் தங்கி விவசாயம் செய்துவந்தனர். அதற்கு சான்றாக 1974 ஆம் ஆண்டு சித்திரை மாதம் 6 ஆம் திகதி சித்தி பரீதா முகைதீன் என்பவருக்கு வட்ட மடு வயலில் வசீர் எனும் ஆண் குழந்தை பிறந்ததும் ஒரு சான்றாகும்.
இவ்வாறு இருக்கையில் நாங்கள் கடந்த ஒருவாரமாக விவசாய நடவடிக்கைகளுக்காக எங்களது காணிகளுக்குள் சென்றால் வனபரிபாலன உத்தியோகத்தர்கள் எங்களை அடித்து விரட்டுகிறார்கள். என்ன என்று கேட்டால் மேலிடத்தில் இருந்து உத்தரவு வந்துள்ளதாகவும் இது வனபரிபாலன திணைக்களத்துக்கு உரிய காணி எனவும் அது 2010 ஆம் ஆண்டு வர்த்தமானியில் தெரிவிக்கப்பட்டுள்ளதாகவும் கூறுகின்றனர். ஆனால் இது பிழையான வர்த்தமானி அறிவித்தல். ஏனெனில் அப்பகுதி பிரதேச செயலாளர், கிராம சேவை அலுவலர், பதிவுசெய்யப்பட்ட கமக்கார அமைப்புக்கள் ஆகியோரது கருத்துக்கள் பெறப்படாமல் அன்று கடமையில் இருந்த மாவட்ட வன அதிகாரியின் பொய்யான தகவலின் அடிப்படையில் வர்த்தமானியில் பிரசுரிக்கப்பட்டுள்ளது. இது பிழையான அறிவித்தலாகும். இதனை செய்த மாவட்ட வன அதிகாரிக்கு எதிராக நடவடிக்கை எடுக்கவுள்ளோம் எனவும் விவசாய அமைப்பு பிரதிநிதிகள் தெரிவித்தனர்.
1970 ஆண்டு முதல் விவசாயம் செய்து வந்த எங்களுக்கு இவ்வர்த்தமானி அறிவித்தல் பெரும் ஏமாற்றத்தையளித்தது. இவ்வர்த்தமானி அறிவித்தலை வைத்து கடந்த 2 வருடங்களாக புதிதாக வந்த அக்கரைப்பற்று வட்டார வன அதிகாரிகளினால் புதிய எல்லைகள் பிழையாக நிர்ணயித்து பூர்வீகமாக விவசாயம் செய்த விவசாயக்காணிகளில் இருந்து எங்களை குண்டர்களை கொண்டு விரட்டி அடிக்கிறார்கள். அதுமட்டுமல்லாமல் உடமைகளையும் சேதப்படுத்தி உயிர் அச்சுறுத்தலையும் ஏற்படுத்தி வருகின்றனர்.
இதுதொடர்பாக பொலிஸில் முறைப்பாடு செய்தாலும் பொலிஸார் நடவடிக்கை எடுக்க அதிகாரம் இல்லை என தெரிவிக்கின்றனர். இதனால் ஏழை விவசாயிகள் மனஉளைச்சலுக்கு உள்ளாகியுள்ளதுடன் மனநோயாளியாகவும் ஆக்கப்பட்டுள்ளனர்.
இன்னும் ஓரிரு நாட்களில் வட்டமடு பிரதேசத்துக்கு விவசாய நடவடிக்கைகளை மேற்கொள்ள செல்லவுள்ளோம். எனவே எங்களை தடுக்காமல் பிழையாகக் கொண்டு வரப்பட்ட வர்த்தமானி அறிவித்தலை இரத்துச் செய்ய வேண்டுமெனவும் இவ் ஏழை விவசாயிகளின் வாழ்வாதாரத்தைப் பெற்றுத்தருமாறும் கேட்டுக்கொண்டனர்.
இதனையும் மீறி வயலுக்கு செல்லும் எங்களை மீண்டும் துரத்துவார்களாயின் அக்கரைப்பற்று வனபரிபாலன காரியாலயத்துக்கு முன்னால் தொடர்ந்து சாலைமறியல் போராட்டத்தை நடத்துவோம் எனவும் தெரிவித்தனர். அம்பாறை மாட்டத்தில் தமிழ் பேசும் மக்கள் 70 சதவீதம் வாழ்கிறார்கள். அம்பாறை மாவட்ட அரசாங்க அதிபர் சிங்கள மொழி பேசுபவராக இருக்கிறார். எங்களுக்கு வட்டமடு பிரதேச பிரச்சினையை ஆரம்பத்தில் இருந்து அரசாங்க அதிபரிடம் தமிழில் எல்லாவற்றையும் புரியவைக்க முடியாமல் உள்ளது. ஆகவே முதலில் இந்த நல்லாட்சியில் தமிழ் மொழி பேசக்கூடிய ஒருவரை அரசாங்க அதிபராக நியமிக்க வேண்டும் எனவும் கேட்டுக்கொள்கின்றோம் எனவும் தெரிவித்தனர்.
இவ் ஊடகவியலாளர் மாநாட்டில் வட்ட மடு, வேப்பையடி, முறாணவட்டி, கொக்கு ளுவ உள்ளிட்ட விவசாய அமைப்புகளின் பிரதிநிதிகள் கலந்துகொண்டனர்.
No comments
Post a Comment