சம்பூர் அனல்மின் நிலையத்தினால் மக்களுக்கு பாதிப்பு ஏற்படுமென கருதினால் அதை நிர்மாணிப்பது பற்றி மீள்பரிசீலனை செய்வோம். இந்த விடயம் தொடர்பில் மக்களுடன் கலந்துரையாடி முடிவு எடுக்கக் காத்திருக்கிறேன் என்று எதிர்க்கட்சித் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்தார்.
சம்பூரில் உயர்பாதுகாப்பு வலயமாக கடற்படைவசமிருந்த 177 ஏக்கர் காணிகளை கையளிக்கும் வைபவம் நேற்று சம்பூரில் அரசாங்க அதிபர் என்.புஷ்பகுமார தலைமையில் நடைபெற்றது. இந்த நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே சம்பந்தன் எம்.பி.மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அவர் தொடர்ந்தும் உரையாற்றுகையில், சம்பூர் அனல்மின் நிலையம் சம்பந்தமாக பல்வேறு சர்ச்சைகள் எழுந்துள்ளன. கண் டனங்களும் விமர்சனங்களும் வந்த வண்ணம் உள்ளன. தினந்தோறும் தொலைபேசி மூலம் சம்பூர் அனல்மின் நிலைய த்தை நிறுவவேண்டாமென மக்கள் எனக்கு கூறிவருகிறார்கள். இந்த விடயத்தில் மக்கள் பாதிக்கப்படுவதற்கு நாம் அனுமதிக்கப் போவதில்லை.
சம்பூர் அனல்மின் நிலையத்தினால் மக் கள் பாதிப்படைவார்கள், அனர்த்தங்கள் ஏற்படுமெனக் கருதப்பட்டால் அதனை நிறுவுவது தொடர்பில் நான் மீள் பரிசீலனைச் செய்யத் தயாராக இருக்கின்றேன். மக்கள் ஏற்றுக்கொள்ளாத எந்தவொரு விடயத்தையும் நாம் செய்யப் போவதில்லையென உறுதிகூற விரும்புகின்றேன்.
அனல்மின் நிலையம் அமையப்பெறுவதனால் ஏற்படக்கூடிய விளைவுகள் பற்றி இருவகைப்பட்ட பாதிப்புக்கள் எடுத்துக் கூறப்படுகின்றன.
கரித்தூசியினால் ஏற்படும் விளைவுகள் இரண்டாவது சாம்பல் பறப்பதனால்
ஏற்படும் பாதிப்புகள் பற்றி எடுத்துக் கூறப்படுகின்றன. மக்களைப் பாதிக்கும் எந்த முடிவையும் நான் எடுக்கமாட்டேன். அந்த வகையில் சம்பூர் மக்களுடனும் எனது மாவட்ட மக்களுடனும் நிபுணர்களுடனும் கலந்து பேசி விரைவில் ஒரு முடிவு எடுப்பேன் என உறுதியாகக் கூறி கொள்கிறேன்.
பலர் கருதுகிறார்கள் சம்பந்தன் நினைத்தால் அனல்மின் நிலையப் பிரச்சினை தொடர்பாக ஜனாதிபதியுடன் பேசலாம், பிரதமருடன் பேசலாம், சம்மந்தன் நினைத்தால் பாரதப்பிரமதர் நரேந்திமோடியுடன் கதைத்து அனல்மின் நிலையம் அமைப்பதை தடுத்து நிறுத்தலாமென்று, நான் எப்பொழுதும் எனது மக்களை கைவிடமாட்டேன்.
நுரைச்சோலையில் ஒரு அனல்மின்நிலையம் அமைக்கப்பட்டபோது அதை பலர் கடுமையாக எதிர்த்தார்கள். பின்பு பார்த்தால் அதை எதிர்த்தவர்களே அதில் கடமையாற்றுகின்றார்கள் என்ற செய்தியை என்னிடம் தெரிவித்தார்கள்.
நாங்கள் எப்பொழுதும் வன்முறைவாதிகளாக இருக்கக்கூடாது, வன்முறைகளைக் கைவிட்டு சமத்துவமான வாழ்வு முறையை நாம் வாழப் பழகிக் கொள்ளவேண்டும். வன்முறைகள் எப்பொழுதும் எமக்கு நன்மை தரப்போவதில்லை. வன்முறை மூலம் சட்டத்தை மீற நாம் எத்தனிக்கக் கூடாது. நாம் அனைவரும் சமத்துவமான வாழ்வை வாழப்பழக வேண்டும். தற்பொழுது அந்த சூழ் நிலை தோன்றியுள்ளது என்பதை நாம் உணர்ந்து கொள்ள வேண்டும்.
சம்பூர் விடுவிக்கப்படுமா? அங்கு மீண்டும் மக்கள் குடியேறுவார்களா என்ற சந்தேகங்கள் மக்கள் மத்தியில் நிலவியிருந்தன. ஆட்சி மாற்றத்தின் காரணமாக பொருளாதார வலயத்துக்கு ஒதுக்கப்பட்ட 818 ஏக்கர் நிலம் கடந்த வருடம் ஆவணி மாதம் மக்களுக்காக விடுவிக்கப்பட்டது. இன்று உயர்பாதுகாப்பு வலயமாக இருந்த மக்களுக்கு சொந்தமான 177 ஏக்கர், காணி, பாடசாலைகள், பொதுக்கட்டிடங்கள், குடியிருப்புக்கள் விடுவிக்கப்பட்டுள்ளன. 237 ஏக்கர் உயர்பாதுகாப்பு வலயப் பிரதேசத்தில் ஏலவே இருபது, இருபதாக 60, ஏக்கர் நிலம் விடுவிக்கப்பட்டு இன்று 177 ஏக்கர் நிலம் விடுவிக்கப்பட்டுள்ளது. இந்த மாற்றத்துக்கு காரணமான ஜனாதிபதி, பிரதமர், மீள்குடியேற்ற அமைச்சர், படைத்தளபதிகள், கிழக்குமாகாண ஆளுநர் அனைவருக்கும் நன்றி கூறக்கடமைப்பட்டுள்ளேன். எனத் தெரிவித்தார்.
இந்நிகழ்வில் பாதுகாப்பு செயலாளர் கே.ஹெட்டியாராட்சி படையினர் வசம் இருந்த 177 ஏக்கர் காணிகளுக்குரிய பத்திரங்களை அரசாங்க அதிபர் புஸ்பகுமாரவிடம் கையளித்தார். பாடசாலைகளுக்குரிய பத்திரங்கள் கிழக்கு மாகாண கல்வி மற்றும் புனர்வாழ்வு அமைச்சர் எஸ்.தண்டாயுதபாணியிடம் கையளிக்கப்பட்டது. ஆலயங்களுக்குரிய பத்திரங்களை அகில இலங்கை இந்து மாமன்ற தலைவர் கந்தையா நீலகண்டன் தலைமையிலான குழுவினர் ஆலயபரிபாலன சபையினரிடம் ஒப்படைத்தனர்.
No comments
Post a Comment