Latest News

March 26, 2016

உறுதியுடன் போராடுவதற்கு உதாரணமான சம்பூர் நிலப்போராட்டம்
by admin - 0

உறுதியுடன் போராடுவதற்கு உதாரணமான சம்பூர் நிலப்போராட்டம்

 Iஈழம் அபகரிக்கப்பட்டுக்கொண்டிருக்கும் தேசம். 

ஈழத் தமிழர்கள் தங்கள் தாயகபூமியான வடக்கு கிழக்கை அபகரித்தலுக்கு எதிராகவும் அதன் சுய ஆட்சிக்காகவும் போராடுகின்றனர். தமிழர்களின் விடுதலைப் போராட்டத்தை ஒடுக்க தமிழ் இனத்தை அழிப்பதற்கு நிகராக தமிழர் நிலத்தை அபகரிக்கும் செயற்பாட்டை இலங்கை அரசு திட்டமிட்டு முன்னெடுத்துவருகிறது. ஈழம் எங்கும் நிலம் அபகரிக்கப்படுகிறது. 

இராணுவத்திற்காகவும் சிங்களக்குடியேற்றங்களுக்காக அபகரிக்கப்படுவதுடன் நிலத்திற்கான மக்களின் உரிமையை பறித்து அந்நிய நாடுகளுக்கும் தனியார் நிறுவனங்களுக்கும் நிலங்கள் தாரைவார்க்கப்படுகின்றன. அவ்வாறு பலவகையிலும் ஆக்கிரமிப்பையும் அபகரிப்பையும் சந்தித்து அதற்கான இடையறாத போராட்டத்தை சம்பூர் நிலத்து மக்கள் முன்னெடுத்தனர்.
2006ஆம் ஆண்டில் நான்காம் ஈழ யுத்தம் தொடங்கியவேளையில் முதன் முதலில் சம்பூரை ஆக்கிரமிக்கும் படை நடவடிக்கையை இலங்கை அரசபடைகள் மேற்கொண்டன.

 இலங்கை அரச படைகளின் வசம் இலங்கை அரசின் வசம் வீழ்ந்த முதல் நிலப்பகுதியாக சம்பூரைக் குறிப்பிடலாம். காலம் காலமாக மகிழ்ச்சியோடும் நிறைவோடும் வாழ்ந்த சம்பூர் மக்கள் அந்த இடம்பெயர்வினால் மாபெரும் துயரத்திற்கு முகம் கொடுக்க நேரிட்டது. விடுதலைப் புலிகளிடமிருந்து மீட்பதாக தெரிவித்து அந்த நிலம் மக்களிடமிருந்து பறிக்கப்பட்டது. 2006ஆம் ஆண்டு சம்பூரைவிட்டு இடம்பெயர்ந்த மக்களை மகிந்த ராஜபக்ச அரசு மீள்குடியேற அனுமதி மறுத்தது. நான்காம் ஈழ யுத்தத்தின் முதல் அகதிகளை தொடர்ந்தும் அகதிகளாக வைத்துக்கொண்டே இந்த நாட்டில் அகதிகள் எவருமில்லை என்றனர்.

மூதூரில் கிளிவெட்டி, கட்டைப்பறிச்சான், மணற்சேனை, பட்டித்திடல் ஆகிய இடங்களில் அமைக்கப்பட்ட நான்கு முகாங்களில் ஆயிரத்து ஐந்நூற்றுக்கு மேற்பட்ட சம்பூர் மக்கள் அகதிகளாக்கப்பட்டு தங்க வைக்கப்பட்டனர். உலகின் அவலம் மிகுந்த அகதிமுகாங்களில் இவற்றையும் உள்ளடக்கலாம். தகரங்களால் ஆன கூடாரங்கள். வெயிலில் கடும் வெக்கை அடிக்க மழையில் கடும் குளிர். முகாங்கள் அமைக்கப்பட்ட இடங்களோ மக்கள் குடியிருப்பதற்கு ஏதுவற்ற இடங்கள். நிம்மதியற்ற சூழலில்தான் ஒவ்வொரு கணங்களையும் பெரும் நெருக்கடியுடன் வலியுடன் அந்த மக்கள் கடந்தனர். மனிதர்கள் வசிக்க முடியாத தகரச்சிறைகளுக்குள் எங்கள் மக்கள் அடைக்கப்பட்டார்கள்.

இந்த மக்கள் இவ்வாறான நிலையில் வசித்துக் கொண்டிருக்க இவர்களின் நிலத்தை மகிந்த ராஜபக்ச அரசு கூறுபோட்டு ஆக்கிரமித்தது. முதலீட்டுச் சபைக்கு விற்றது. சம்பூரில் சுமார் இருநூறு ஏக்கரில் கடற்படைக்கு இராணுவமுகாம் அமைக்கப்பட்டு அந்தக் காணிகள் உயர்பாதுகாப்பு வலமாக ஆக்கிரமிக்கப்பட்டது. அத்துடன் இந்தியாவின் அனல் மின்னிலையம் அமைப்பதற்கும் காணி பகரிந்தளிக்கப்பட்டது. அத்துடன் முதலீட்டுச் சபைக்கு சுமார் எண்ணூறு ஏக்கர் காணிகள் வழங்கப்பட்டது. சம்பூர் மக்கள் அகதிகளாக முகாங்களில் அல்லல்பட இந்த அறிவிப்புக்கள் வர்த்தமானியில் இடம்பெற்றது.

சம்பூர் பிரதேசம் இந்தியாவின் அனல் மின்னிலையத்திற்காக வழங்கப்பட்டுவிட்டது என்றும் இந்தியாவின் அனல் மின்னிலையம் அமைக்கப்படுவததால் அதை மீளப் பெற வாய்பில்லை என்ற தோற்றமும் ஏற்படுத்தப்பட்டது. குறிப்பாக தமிழ் தலைவர்கள் இந்தியாவை எதிர்க்க தயங்குவார்கள் என்பதனாலும் இவ்வாறு இந்தியாவுக்கு அனல் மின்னிலையம் அமைக்க இடமளிக்கப்பட்டதுடன் அதனுடன் இணைந்து சம்பூரை அபகரிக்கும் திட்டம் தீட்டப்பட்டது. கடற்படைமுகாமுக்கான காணி அபகரிப்பையும்  முதலீட்டுச் சபைக்கான காணி அபகரிப்பையும்விட அனல் மின்னிலையம் அமைத்தல் பற்றிய செய்தியே முன்னணியாக இருந்தது. அதன் பின்புலத்தில் சம்பூர் கூறுபோட்டது.

தமிழர்களின் நிலத்தை அபகரிக்க கடற்படைமுகாமை அமைத்தது இலங்கை அரசு. அந்தக் கடற்படை முகாமுக்கு பாதுகாப்பாக அனல் மின்னிலையம் அமைக்கப்பட்டது. அனல் மின்னிலையத்திற்காக கடற்படை முகாம் அமைக்கப்படுவதுபோல் காட்டப்பட்டு அங்கு இராணுவ ஆக்கிரமிப்பு நிறுத்தப்பட்டது. ஒன்றுடன் ஒன்று பின்னிப்பிணைந்த வகையில் இராணுவ ஆக்கிரமிப்பையும் அரசியல் பாதுகாப்பையும் இலங்கை அரசு ஏற்படுத்தி சம்பூர் மக்களை மாபெரும் அச்சுறுத்தலுக்கு உள்ளாக்கியது. இவ்வாறான அரசியல் இராணுவச் சூழல் ஏற்படுத்தப்பட்டு அந்த மக்களின் நிலம் முதலீட்டுச் சபையின் வணிகத் தேவைக்கு விற்கப்பட்டது. மிக தந்திரமாகவும் நுட்பமாகவும் மகிந்த அரசு இதை செய்தது.

திருகோணமலை நகரத்தின் பாதுகாப்பிற்காக சம்பூரை விடுதலைப் புலிகளிடமிருந்து கைப்பற்றுவதாக கூறிய மகிந்த அரசு நாட்டின் பாதுகாப்புக்காக சம்பூர் மக்கள் தங்கள் நிலங்களை தியாகம் செய்ய வேண்டும் எனக்கூறியது. தமிழர் நிலத்தை ஆக்கிரமிக்கும் யுத்தம் எதற்காக மேற்கொள்ளப்படுகின்றது என்பதற்கும் தமிழர்களுக்கும் அவர்களின் நிலத்திற்கும் எப்போது பாதுகாப்பு இருந்தது என்பதற்கும் சம்பூர் ஆக்கிரமிக்கப்பட்டு அபகரிக்கட்ட கதை உணர்த்துகிறது. கடற்படை முகாமை அகற்ற மகிந்த அரசு மறுத்தது. அதை நாட்டின் பாதுகாப்பு சார்ந்த விடயமாகவும் மீண்டும் புலிகள் உருவாகிவிடுவார்கள் எனப் புலிப்பூச்சாண்டி காட்டியும் அந்த நிலத்தை அபகரித்தனர்.

சம்பூர் மக்கள் வார்த்தைகளால் விவரித்துவிட முடியாத ஒரு வாழ்வை வாழ்ந்தனர். தமது சொந்த நிலத்திற்குச் சொல்வதற்காய் மகிந்த அரசால் பின்னப்பட்ட கொடுமையான அகதிமுகாம் வாழ்வை ஒரு தவத்தைபோல எதிர்கொண்டனர். நெருப்பாற்றில் நிகழ்த்திய தவம். கணந்தோறும் மக்களை துன்பப்படுத்தும் சூழலுக்குள் தள்ளி அவர்களால் வாழ முடியாது என்கிற நிலையை ஏற்படுத்தி அவர்களை மாற்றிடங்களில் குடியமர்த்த இலங்கை அரசு திட்டமிட்டது. சம்பூர் விடுவிக்கப்படமாட்டாது என்றும் மாற்றிடங்களில் குடியேற வேண்டும் என்றும் மகிந்த அரசு கூறியது. மக்களை மாற்றிடங்களில் குடியேற்ற தொடர்ந்தும் இராணுவத்தையும் அரச அதிகாரிகளையும் அரசியல்வாதிகளையும் வைத்து பல்வேறு நடவடிக்கைகளை நேரடியாகவும் குறுக்குவழிகளிலும் மேற்கொண்டது. நிலப்போராட்டத்தை ஒடுக்கும் நடவடிக்கையில் இராணுவப் புலனாய்வாளார்கள் கண்காணிப்பில் ஈடுபடுத்தப்ட்டனர்.

சம்பூர் மக்களின் இடையறாத போராட்ட வாழ்வும் இந்த மக்களின் நிலத்தை மீட்டல் குறித்து உயர்நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்குமே இந்த மக்களின் நிலத்தை விடுவிக்க உதவியது. ராஜபக்ச காலத்திலேயே சம்பூர் மக்களை அவர்களின் சொந்த இடத்தில் மீள்குடியேற்ற உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்தது. ஆனாலும் ராஜபக்ச அதை நடைமுறைப்படுத்தவில்லை. தற்போதைய இலங்கையின் ஜனாதிபதி மைத்திரிபால  முதலீட்டுச் சபைக்கான காணி உரிமத்தை இரத்துச் செய்யும் வர்த்தமானியில் கையெழுத்திட்டு சம்பூர் மக்களின் அகதிவாழ்வுக்கு ஓர் முடிவை ஏற்படுத்தியுள்ளார்.

 அத்துடன் சம்பூரில் அமைக்கப்பட்டுள்ள கடற்படை முகாமையும் அகற்றுவதாக கிழக்கு மாகாண ஆளுனர் கூறியுள்ளார்.

சம்பூர் மக்களின் நிலப் போராட்டம் இன்னும் முடிவடையவில்லை. ஆனால் அவர்கள் முக்கியமானதொரு கட்டத்தை அடைந்துவிட்டார்கள். அடுத்த கட்டப்போராட்டம் இலங்கை அரசு ஒப்புக்கொண்டபடி சம்பூரிலிருந்து குறிப்பிட்ட கால அவகாசத்தில் கடற்படைமுகாமை அகற்ற வேண்டும். முழுமையாக இராணுவச் சூழல் நீக்கப்பட்டுமக்கள் இயல்பாக வாழும் சிவில் சூழல் உருவாக வேண்டும். மிக முக்கியமாக சம்பூர் என்ற அழகிய கிராமத்திற்கும் அதன் சனங்களுக்கும் அக் கிராமத்தின் எதிர்கால பிரசைகளுக்கும் அச்சுறுத்தலாக அமைந்துள்ள அனல் மின்னிலையம் அகற்றப்பட வேண்டும். அதற்கான அடுத்த கட்டப் போராட்டங்களில் அந்த மக்கள் விரைவில் ஈடுபடவுள்ளனர். அந்தப் போராட்டத்தின் வெற்றியுடன்தான் சம்பூர் உண்மையில் விடுவிக்கப்பட்டிருக்கும்.

ஒன்றல்ல இரண்டல்ல பத்து ஆண்டுகள் அகதிவாழ்வு சம்பூர் மக்களை பலவித்திலும் பாதித்துள்ளது. அதனால் அவர்கள் சந்தித்த இழப்புக்கள், வேதனைகள் சொல்லி மாளாதவை. ஊரைப் பார்க்க வேண்டும், ஊரில் சாகவேண்டும் என காத்திருந்து அகதிமுகாங்களில் இறந்தவர்கள் பலர். அகதியாய் பிறந்து ஊரைப் பார்க்க காத்திருந்த குழந்தைகள் பலர். ஊருக்காய் காத்திருந்து ஏங்கிய தருணங்கள் பல. அகதிமுகாமில் வசித்தமையால் நோய்வாய்பட்டு இறந்தவர்கள் பலர். ஒரு சமூகத்தின் வாழ்வுத் தளமான நிலத்தை பறிக்கும் போது அவர்கள் இப்படிப் பல இழப்புக்களுக்கு முகம் கொடுக்க நேரிடுகிறது. இதுதான் ஈழமெங்கும் நடக்கிறது. இந்த உயிரிழிவும் உள அழிவும் இன அழிப்பிற்கானதே.

பத்து வருடங்களின் பின்னர் சம்பூர் மக்களின் முகங்களில் இப்போதுதான் புன்னகை பூக்கிறது. அகதிவாழ்வால் நலிந்துபோனவர்கள் தங்கள் சொந்த மண்ணில் காலடி எடுத்து வைப்பதன் ஊடாகவே மறு பிறப்பை அடைகின்றனர். வாழ்தல் பற்றிய புதிய நம்பிக்கை ஏற்பட்டிருக்கிறது. எல்லாம் அழிந்து உருக்குலைந்து காடு பற்றிப்போன பூர்வீக நிலத்தை அந்த மக்கள் துப்புரவு செய்து அதில் ஒரு பாயை விரித்து படுத்துறங்கினர். அந்த மக்கள் பத்தாண்டுகளாக தூக்கமற்றிருந்தனர்.  தங்கள் சொந்த நிலத்தில் வாழ வேண்டும் என்ற கனவை வென்று சம்பூர்கள் மீள்குடியேறுவதைப் பார்க்கும்போது ஈழத்தில் நிலத்தை இழந்து தவிப்பவர்கள் நிச்சயம் ஒரு நம்பிக்கையை உணர்வார்கள்.

சம்பூரை விடுவிக்கும் புதிய அரசின் நடவடிக்கையை பராட்டலாம். ஆனால் அதையும் கடந்து ஒரு சூழல் உருவாக வேண்டிய அவசியம் சுட்டிக்காட்டப்பட வேண்டியது. நில உரிமைக்காக போராடிய ஈழத் தமிழர்கள் இன்று நிலத்தில் வாழ்வதற்காய் போராடுகின்றனர். நில உரிமையை கேட்டால் நிலத்தை பறிக்கும் ஒரு அரசியல் சூழல் இலங்கையில் ஈழத் தமிழர்களுக்கு எதிராக பிரயோகிக்கப்படுகிறது. இதுவே சம்பூரிலும் நடந்தது. எனவே எதிர்காலத்தில் இவ்வாறான ஒரு நிலை ஏற்படாத வகையில் ஈழத் தமிழர் நிலத்திற்கான பாதுகாப்பு அவசியமானது. தமிழர் நிலத்தில் தமிழர் வாழவும் ஆளவும் உரிமை அவசியமானது. ஈழத்தில் அபகரிக்கப்பட்ட கிராமங்களுக்காய் போராடும் மக்களுக்கு சம்பூர் மக்களின் நிலப் போராட்டம் ஊக்கத்தை அளிக்கும். அத்துடன் அபகரிக்கப்பட்ட ஈழ நிலத்திற்காய் போராட வேண்டிய அவசியத்தையும் சம்பூர் நிலப் போராட்டம் வலியுறுத்துகிறது.

தீபச்செல்வன்
« PREV
NEXT »

No comments