கடந்த ஆட்சிக்காலத்தில் மேற்கொள்ளப்பட்ட தமிழ் ஊடகவியலாளர்கள் மீதான படுகொலைகள், ஊடக நிறுவனங்கள் மீதான தாக்குதல்கள், வன்முறைகள் குறித்து உரிய விசாரணை நடத்தப்படவில்லை என்ற குற்றச்சாட்டு தற்போது மேலெழுந்து வருகின்றது. 2015 ஆம் ஆண்டில் ஜனவரி மாதம் 8 ஆம் திகதி இடம்பெற்ற ஜனாதிபதித் தேர்தலில் பொது எதிரணியின் வேட்பாளர் மைத்திரிபால சிறிசேன வெற்றிபெற்றதையடுத்து புதிய அரசாங்கம் பதவியேற்றிருந்தது. இதனையடுத்து இடம்பெற்ற பாராளுமன்றத் தேர்தலில் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான அரசாங்கம் மீண்டும் பதவிக்கு வந்தது.
இவ்வாறு புதிய அரசாங்கம் பதவியேற்று ஒரு வருடம் ஆகிவிட்டபோதிலும் படுகொலை செய்யப்பட்ட தமிழ் ஊடகவியலாளர்கள் தொடர்பில் உரிய விசாரணைகள் இன்னமும் முன்னெடுக்கப்படவில்லை. இதேபோல் ஊடக நிறுவனங்கள் மீதான தாக்குதல்கள் குறித்தும் உரிய வகையில் விசாரிக்கப்படவில்லை. படுகொலை செய்யப்பட்ட மற்றும் வன்முறைக்கு உள்ளான தமிழ் ஊடகவியலாளர்களின் குடும்பங்களுக்கு உரிய நஷ்டஈடுகளும் வழங்கப்படாத நிலைமை தொடர்ந்து வருகின்றது.
தென்பகுதியில் படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளரான லசந்த விக்கிரமதுங்க மற்றும் கடத்தப்பட்டு காணாமல் போய் படுகொலை செய்யப்பட்டிருக்கலாம் என சந்தேகிக்கப்படும் பிரகீத் எக்னெலிகொட ஆகியோர் தொடர்பில் விசாரணைகள் இடம்பெற்று வருகின்றன. இந்த சம்பவம் தொடர்பில் பலர் கைதுசெய்யப்பட்டு விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. உண்மையிலேயே இந்த ஊடகவியலாளர்களின் படுகொலை தொடர்பில் விசாரணைகள் இடம்பெறுகின்றமை வரவேற்கத்தக்க நடவடிக்கையேயாகும். இதேபோல் கொல்லப்பட்ட தமிழ் ஊடகவியலாளர்கள் தொடர்பிலும் ஊடக நிறுவனங்கள் மீதான தாக்குதல்கள் குறித்தும் உரிய விசாரணைகள் முன்னெடுக்கப்படவேண்டும் என்பதே தமிழ் மக்களினதும் தமிழ் ஊடகத்துறையினரதும் வேண்டுகோளாக இருந்துவருகின்றது.
நல்லாட்சி அரசாங்கம் பதவியேற்றதையடுத்து தமிழ் ஊடகத் துறைமீதான தாக்குதல்கள், வன்முறைகள் குறித்து உரிய விசாரணை நடைபெறும் என்று பெரும் எதிர்பார்ப்பு நிலவிவந்தது. ஆனால் ஒரு வருடம் கடந்துவிட்ட நிலையிலும் இத்தகைய விசாரணைகள் இடம்பெறாமை பெரும் ஏமாற்றம் தரும் செயற்பாடாக மாறியுள்ளது.
2000 ஆம் ஆண்டில் யாழ்ப்பாணத்தில் ஊடகவியலாளர் மயில்வாகனம் நிமலராஜன் சுட்டுக்கொல்லப்பட்டிருந்தார். இவரது படுகொலை தொடர்பில் அப்போது விசாரணைகள் நடைபெற்றபோதிலும் இதுவரை எவரும் தண்டிக்கப்படவில்லை. இதேபோல் சிரேஷ்ட ஊடகவியலாளர்களான டி. சிவராம் கொழும்பில் கடத்திச்செல்லப்பட்டு சுட்டுக்கொல்லப்பட்டார். மட்டக்களப்பில் ஊடகவியலாளரான நடேசன் நடுத்தெருவில் வைத்து சுட்டுக்கொல்லப்பட்டிருந்தார். 2006 ஆம் ஆண்டு திருகோணமலையில் ஊடகவியலாளர் சுகிர்தராஜன் சுட்டுக்கொல்லப்பட்டார். யாழ்ப்பாணத்தில் ஊடகவியலாளர் ரஜிவர்மன் மற்றும் யாழ். பல்கலைக்கழக ஊடகத்துறை மாணவன் நிலக் ஷன் ஆகியோர் சுட்டுக்கொல்லப்பட்டனர்.
இவ்வாறு தமிழ் ஊடகத்துறையைச் சேர்ந்த ஊடகவியலாளர்களும் ஊடகத்துறை ஊழியர்களும் அடுக்கடுக்காக சுட்டுக்கொல்லப்பட்டிருந்தனர்.
யாழ்ப்பாணத்தில் 2006 ஆம் ஆண்டு உதயன் பத்திரிகை வளாகத்திற்குள் பிரவேசித்த ஆயுததாரிகள் நிறுவனத்தில் பணிபுரிந்துகொண்டிருந்த ஊடகப்பணியாளர்களை சுட்டுக்கொலை செய்ததுடன் தாக்குதலும் நடத்தியிருந்தனர். இதனைவிட இந்தப் பத்திரிகையின் செய்தி ஆசிரியர் குகநாதன் மீதும் பத்திரிகை விநியோக ஊழியர்கள் மீதும் தாக்குதல் நடத்தப்பட்டிருந்தது.
இதேபோல் ஊடக நிறுவனங்கள் மீதும் ஊடகவியலாளர்கள் மீதும் வன்முறைகள் கட்டவிழ்த்து விடப்பட்டிருந்தன. இந்த காட்டுமிராண்டித்தனமான நடவடிக்கைகள் குறித்து விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு குற்றவாளிகள் சட்டத்தின் முன் நிறுத்தப்படுவார்கள் என்று எதிர்பார்க்கப்பட்டபோதிலும் கடந்த அரசாங்க காலத்தில் அதற்கான நடவடிக்கைகள் எவையும் எடுக்கப்படவில்லை.
வேலியே பயிரை மேயும் சம்பவங்கள் தொடர்ந்தனவே தவிர, அதனைத் தடுத்து நிறுத்துவதற்கான செயற்பாடுகள் எவையும் இடம்பெறவில்லை. ஊடகவியலாளர்கள் மீதான படுகொலைகள், தாக்குதல்களை அடுத்து பெருமளவான ஊடகவியலாளர்கள் உயிரச்சுறுத்தல் காரணமாக வெளிநாடுகளுக்கு புலம்பெயரும் நிலையும் ஏற்பட்டது. இவ்வாறான ஊடக அச்சுறுத்தல்கள் தொடர்ந்த நிலையிலும் ஊடகத்துறை சுதந்திரத்திற்காக அன்றும் உயிரச்சுறுத்தல்களுக்கு மத்தியில் தமிழ், சிங்கள ஊடகவியலாளர்கள் களத்தில் நின்று போராடினார்கள்.
அன்று சுதந்திர ஊடக இயக்கத்துடன் உழைக்கும் பத்திரிகையாளர் சங்கம், தமிழ் ஊடகவியலாளர்கள் ஒன்றியம், முஸ்லிம் ஊடகவியலாளர்கள் ஒன்றியம் உட்பட ஏழு சங்கங்கள் ஒன்றிணைந்து செயற்பட்டு ஊடக அடக்குமுறைக்கு எதிராகக் குரல்கொடுத்து வந்தன. ஊடகவியலாளர்கள் கடத்தப்பட்டபோதும் படுகொலை செய்யப்பட்டபோதும் இந்த சங்கங்களைச் சேர்ந்த உறுப்பினர்கள் துணிந்து நின்று போராட்டங்களை நடத்தினர். வடக்கு, கிழக்குப் பகுதிகளுக்குச் சென்றும் போராட்டங்கள் நடத்தப்பட்டன.
அப்போது அச்சுறுத்தல்களுக்கு மத்தியில் ஒன்றிணைந்து ஊடக சுதந்திரத்திற்காகப் போராடிய அமைப்புக்கள் இன்று புதிய அரசாங்கம் பதவியேற்றுள்ள நிலையில் ஊடகவியலாளர்களுக்கு இழைக்கப்பட்ட அநீதிகள் தொடர்பில் நியாயம் கிடைக்க வேண்டுமென்று வலியுறுத்தி வருகின்றன. தமிழ் ஊடகவியலாளர்களின் படுகொலை தொடர்பில் விசாரணைகள் முன்னெடுக்கப்பட வேண்டுமென்றும் இந்த ஊடக அமைப்புக்கள் வலியுறுத்தி வருகின்றன.
அண்மையில் ஊடக அமைப்புக்களின் பிரதிநிதிகளை பிரதமர் ரணில் விக்கிரமசிங்க சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தியிருந்தார். இந்த சந்திப்பின் போது படுகொலை செய்யப்பட்ட தமிழ் ஊடகவியலாளர்கள் தொடர்பில் உரிய விசாரணைகள் நடத்தப்படவேண்டுமென்றும் தற்போதும் தமிழ் ஊடகவியலாளர்கள் படைத்தரப்பினரால் அச்சுறுத்தல்களை எதிர்நோக்கி வருவதாகவும் சுட்டிக்காட்டப்பட்டிருந்தது. லசந்த விக்கிரமதுங்க, பிரகீத் எக்னெலிகொட ஆகியோரின் படுகொலைகள் தொடர்பில் விசாரணைகள் நடத்தப்படுவதைப்போன்று தமிழ் ஊடகவியலாளர்களின் படுகொலை தொடர்பிலும் விசாரிக்கப்படவேண்டுமென்றும் இங்கு வலியுறுத்தப்பட்டது.
இதற்குப் பதிலளித்த பிரதமர் இவ்விடயம் குறித்து நடவடிக்கை எடுக்கப்படுமென்றும் தற்போது படுகொலை செய்யப்பட்ட பாராளுமன்ற உறுப்பினர்களான ஜோசப் பரராஜசிங்கம், நடராஜா ரவிராஜ் ஆகியோரின் கொலை தொடர்பில் விசாரணைகள் நடைபெறுவதாகவும் தெரிவித்திருந்தார். பாராளுமன்ற உறுப்பினர்களின் படுகொலை தொடர்பில் விசாரணை இடம்பெறுவதைப்போன்று தமிழ் ஊடகவியலாளர்களின் கொலைகள் தொடர்பிலும் விசாரிக்கப்படவேண்டும் என்பதே தமிழ் ஊடகத்துறையினரின் கோரிக்கையாக இருக்கின்றது.
ஊடகத்துறை அமைச்சர் கயந்த கருணாதிலக மற்றும் பிரதி அமைச்சர் கருணாரத்ன பரணவிதாரண ஆகியோர் தலைமையில் தெற்கைச் சேர்ந்த ஊடகவியலாளர்கள் குழுவொன்று நேற்று முன்தினம் சனிக்கிழமை யாழ்ப்பாணத்திற்கு விஜயம் செய்துள்ளது. தெற்கு ஊடக சகோதரத்துவத்தையும் வடக்கு ஊடக சகோதரத்துவத்தையும் ஒன்றாக இணைக்கும் நல்லிணக்கப் பயணமாகவே இந்த குழுவினர் அங்கு சென்றுள்ளனர்.
இக்குழுவினர் யாழ்ப்பாணத்தில் வடமாகாண ஆளுநர் ரெஜினோல்ட் குரே மற்றும் படைத்தளபதிகள் ஆகியோரையும் மதத்தலைவர்களையும் சந்தித்துள்ளனர். ஊடக நிறுவனங்களையும் பார்வையிட்டுள்ள இவர்கள் படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர்களின் குடும்பங்களையும் சந்திக்கவுள்ளதாக தெரிகின்றது. உண்மையிலேயே வடக்கு, தெற்கு ஊடகவியலாளர்கள் மத்தியில் சகோதரத்துவத்தை ஏற்படுத்துவது வரவேற்கத்தக்க செயற்பாடேயாகும்.
வடக்கு, தெற்கு ஊடகவியலாளர்களிடையே புரிந்துணர்வு ஏற்படுவது என்பது நல்லதொரு விடயமாகும். ஆனால் இவ்வாறான புரிந்துணர்வு ஏற்படவேண்டுமானால் படுகொலை செய்யப்பட்ட தமிழ் ஊடகவியலாளர்கள் தொடர்பிலும் ஊடக நிறுவனங்கள் மீதான தாக்குதல் தொடர்பிலும் உரிய விசாரணை நடத்தப்பட்டு நீதி நிலைநாட்டப்படவேண்டும். குற்றமிழைத்தவர்கள் தண்டிக்கப்படவேண்டும்.
படுகொலை செய்யப்பட்ட தமிழ் ஊடகவியலாளர்களது குடும்பங்களுக்கு இதுவரை நஷ்டஈடுகள் எதுவும் வழங்கப்படவில்லை. இதனால் அந்தக் குடும்பங்கள் வாழ்வாதார உதவிகள் இன்றி கஷ்டப்பட்டு வருகின்றன.
இழைக்கப்பட்ட அநீதிகள் குறித்து விசாரணைகளை நடத்துவதுடன் பாதிக்கப்பட்ட ஊடகவியலாளர்களின் குடும்பங்களுக்கும் நஷ்ட ஈடுகள் வழங்கப்படவேண்டும். தற்போது கடந்த ஆட்சிக் காலத்தில் பாதிக்கப்பட்ட ஊடகவியலாளர்களின் விபரங்களை ஜனாதிபதி செயலகம் கோரியிருக்கிறது. இந்த விபரங்களைப் பெற்று அந்த ஊடகவியலாளர்களுக்கு அரசாங்கமானது உதவிகளை செய்யவேண்டும். இதன் மூலமே வடக்கு, தெற்கு ஊடகவியலாளர்கள் மத்தியில் புரிந்துணர்வை ஏற்படுத்தி நல்லிணக்கத்தை கட்டியெழுப்பலாம் என்பதை வலியுறுத்த விரும்புகின்றோம்.
No comments
Post a Comment