Latest News

March 02, 2016

மாவீரர் கனவுகளை நனவாக்குங்கள் அதன் பின் தானாக கண் திறக்கும் துயிலும் இல்லங்கள்.
by admin - 0

மாவீரர் கனவுகளை நனவாக்குங்கள்
அதன் பின் தானாக கண் திறக்கும் துயிலும் இல்லங்கள்.

பிரித்தானியாவில் நிறுவப்பட இருக்கும் துயிலும் இல்லத்தினை அமைக்கும் முன் சற்று சிந்தியுங்கள். விடுதலைப்புலிகள் தங்கள் சுய நலத்திற்காக போராடவில்லை. எமது மண்ணிற்காகவும், மக்களின் சுதந்திரத்திற்காகவும் போராடியவர்கள். அவர்கள் தியாகங்கள் அளப்பெரியவை. அதனால் தான் மாவீர அந்தஸ்து கொடுத்து துயிலும் இல்லங்களை அமைத்து பூஜிக்கும் தெய்வங்களாக எம் பெருந் தலைவன் விளக்கேற்றி ஆரம்பித்து வைத்தார். அவர்கள் தியாகங்கள் என்றும் நம்மை விட்டு போய் விடப்போவதில்லை. மக்களோடு மக்களாக மக்களின் தலைவர்களாக தமிழினம் கண்டிராத பேர் இயக்கமாக விடுதலைப் புலிகள் திகழ்ந்தனர்.
 
கடந்த இறுதி இனவழிப்பு காட்டிக் கொடுப்புகள் துரோகங்கள் அனைத்தும் ஒன்றாக இணைந்து எம் மாவீரர் அடையாளங்களை அழித்து போட்டது. அதன் பின் மாவீர செல்வங்களை விளக்கேற்றி துதிக்க சிங்கள பேரினவாதம் தடையாக இருந்து மக்களை கருவிகளாக பயன்படுத்தியது மட்டுமல்லாது அடாவடித்   தனங்களையும் மேற்கொண்டது. இதனால் மாவீர அடையாளங்களை அழித்து விடும் உக்தி வெற்றி பெற்றதாக சிங்களம் புகழ் பாடினாலும் மக்கள் மனதில் அகலாத ஜோதியாக புலிகளும், மாவீரர்களும் திகழ்ந்தனர். இதனால் பல இன்னல்களை எதிர் கொண்ட போதிலும் மக்கள் மறைமுகமாக விளக்கேற்ற ஆரம்பித்தனர். 

இவை இவ்வாறு இருக்க தற்பொழுது லண்டனில் மும்முரமாக நடைபெறும் மாவீரர் துயிலும் இல்லம் அமைக்கும் பணிகள் பலர் மனதில் காயங்களை தந்திருக்கிறது. காரணம் மாவீர தியாகம் எமது மக்களின் சுதந்திர வேக்கைக்கானது  அவர்களின் நின்மதியையும் சந்தோசத்தையும் நிலை நாட்டும் பொருட்டே தங்கள் சுகங்களை இழந்து போராட்டத்தில் ஈடுபட்டு துயில்கின்றனர். அவர்களின் ஆசைப்படி இருப்பது நமது கடமை. இறுதி யுத்தமாக கருதப்படும் இனவழிப்பு நடவடிக்கை எனப்படுவது வெறும் புலிகளை மட்டுமே அழித்து விட வில்லை. புலிகளை விட அதிகம் பாதிக்கபட்டோர் மக்கள். இன்று வீடிழந்து, உறவிழந்து, அவயங்கள் இழந்து, அனாதைகளாக மக்கள் திண்டாடுகின்றனர். அதோடு முன்னாள் போராளிகள் ஒரு வேளை சோற்றிற்கு பாதையின்றி வீதியில் இறங்கி பிச்சை எடுக்கும் நிலைமைக்கும் தள்ளப்பட்டுள்ளனர். நாளுக்கு நாள் பல தற்கொலைகள் என நீள்கிறது பட்டியல். மாவீரர்கள் ஆசைப்பட்டது என்ன? இவற்றையா? தலைவர் பலரை புலம்பெயர் தேசங்களில் குடியமர்த்தியது எதற்கு? எங்களின் போராட்டம் ஓய்ந்து போகும் நிலையில் உங்களின் உதவிக்கள் வேண்டும் என்பற்காகவே. மாறாக இன்று நடப்பது என்ன என்று ஒன்றுமாக புரியவில்லை. 

எனவே ஈழத்தில் எம் இனத்தின் விடுதலைக்கா போராடிய போராளிகளின் நிலை உணருங்கள். அவர்கள் வாழ்வாதாரத்தை வலுப்படுத்துங்கள். கருவிகளாக பயன்படுத்தப்பட்ட மக்களுக்கு உதவுங்கள் அவர்களின் வாழ்க்கை செலவை பொறுப்பெடுங்கள். இன்றைய சிறார்களின் நிலை உணருங்கள் அவர்களின் கல்வியை வழி நடத்துங்கள். இவற்றை எல்லாம் முடித்து விட்டு மாவீரர் கல்லறைகளை நிறுவுங்கள.. ஒரு செங்கல்லால் அடையாளம் இட்டாலும் அதில் அவர்கள் சுதந்திர வேற்கையுடன் நித்திய துயில் கொள்வார்கள். மாறாக இவற்றை நிராகரித்து பளிங்கு கல்லறைகள் அமைப்பதால் அது வெறும் கல்லறையாக மட்டுமே இருக்கும் அதில் மாவீரர் தியாகம் ஒரு போதும் இருக்காது. 

மாவீரர் துயிலும் இல்லம் வேண்டும் அதை நிராகரிப்பு செய்யவில்லை. கடந்த இரண்டு மாவீரர் நாளிலும் கலந்து கொண்டேன். அதில் 2014 நடைபெற்ற லண்டன் excel மைதானத்தில் உள் நுளைய அனுமதி கிடைத்த போதிலும், 2015 நடைபெற்ற மாவீரர் நாளில் உள் நுளைய அனுமதி மறுக்கப்பட்டு வெளியே நின்று விளக்கேற்றி திரும்பினோம். காரணம் மக்கள் கூட்டம் குறிப்பிட்ட மக்கள் முன் அனுமதி இவற்றை எல்லாம் பார்க்க என் மனதிலும் தோன்றியது நமக்கென ஒரு துயிலும் இல்லம் புலம் பெயர் தேசத்தில் அமையக்கூடாதா என்று அமைய இன்று அனுமதி கிடைத்தும் இவ்வளவு பாரிய செலவு தேவைதானா என தோன்றுகிறது மக்களின் நிலை கண்டு. 

பிரித்தானிய தமிழ் மக்களே எமது அடையாளம் நமக்கு தேவை முதலில் நமக்காக இரத்தம் சிந்தியவர்களின் வாழ்வில் ஒளியேற்றுங்கள். அதன் பின் அழிந்த மாவீரர் இல்லங்கள் தானாக உயிர்த்தெழும். 

நன்றி 
பவித்ரா நந்தகுமார்
« PREV
NEXT »

No comments