ஐக்கிய தேசியக் கட்சியில் இடமும் அமைச்சுப்பதவியும் கிடைத்தவுடன் சரத்பொன்சேகா ஐக்கிய தேசியக் கட்சியின் புலிக்கொள்கைக்கு தன்னையும் மாற்றிக்கொண்டுள்ளார். இன்று அவரின் கருத்துகள் அனைத்தும் புலிகளுக்கு மீள் உயிர் கொடுப்பதைப்போலவே அமைந்துள்ளன என தேசிய சுதந்திர முன்னணியின் தலைவரும் மஹிந்த ஆதரவு அணியின் உறுப்பினருமான விமல் வீரவன்ச தெரிவித்தார்.
வடக்கு கிழக்கில் மஹிந்தவை தோற்கடித்த எதிரிகளை பலப்படுத்தும் வேலைத்திட்டம் அரசாங்கத்தினால் துரிதகதியில் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. புலம்பெயர் புலிகளின் அனுசரணையில் வடக்கு கிழக்கில் மீண்டும் புலிகளின் ஆதிக்கத்தை ஏற்படுத்தும் வேலைத்திட்டங்கள் மேற்கொள்ளப்படுவதாகவும் அவர் குறிப்பிட்டார்.
பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா இறுதி யுத்தம் தொடர்பில் முன்வைத்துவரும் கருத்துகள் தொடர்பில் மஹிந்த அணியின் நிலைப்பாட்டை வினவிய போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
இது தொடர்பில் அவர் மேலும் கூறுகையில்,
மூன்று தசாப்தம் நாட்டில் நிலவிய யுத்த சூழலை மூன்று ஆண்டுகளில் முடித்து நாட்டில் அமைதியையும், அபிவிருத்தியையும் நாம் ஏற்படுத்தினோம்.
எமது இராணுவத்தின் தாக்குதலில் புலிகள் மட்டுமே இலக்காக இருந்தனர். மாறாக பொதுமக்கள் எவரையும் கொல்லவேண்டும் என்ற நிலைபாட்டில் நாம் இருக்கவில்லை. ஆனால் அன்று யுத்தத்தை முன்னெடுத்து சென்றவர்கள் இன்று இராணுவத்தினருக்கு எதிராக கருத்துகளை முன்வைத்து வருகின்றமை ஒருபோதும் ஏற்றுக்கொள்ள முடியாது.
கடந்த ஜனாதிபதி தேர்தலின்போதும் பொதுத் தேர்தலின்போதும் தோல்வியுற்ற சரத் பொன்சேகாவுக்கு ஐக்கிய தேசியக் கட்சியில் இடமும் அமைச்சுப்பதவியும் கொடுத்தவுடன் ஐக்கிய தேசியக் கட்சியின் புலிக்கொள்கைக்கு தன்னையும் மாற்றிக்கொண்டுள்ளார். இன்று அவரின் கருத்துகள் அனைத்தும் புலிகளுக்கு மீள் உயிர் கொடுப்பதைப்போலவே அமைந்துள்ளன. இன்று அவர் தெரிவிக்கும் கருத்துகளை ஏன் அன்று மக்களுக்கு தெரிவிக்கவில்லை. இவ்வாறு எமது இராணுவத்தையும், பாதுகாப்பு இரகசியங்களையும் காட்டிக்கொடுக்கும் இராணுவ தளபதியை வைத்துக்கொண்டு எவ்வாறு யுத்தத்தை முடிவுக்கு கொண்டுவந்தனர் என்பதில் ஆச்சரியமேயாகும்.
வடக்கு கிழக்கில் மஹிந்தவை தோற்கடித்த எதிரிகளை பலப்படுத்தும் வேலைத்திட்டம் துரிதமாக நடைபெற்று வருகின்றது. புலம்பெயர் புலிகளின் அனுசரணையில் இயங்கும் நிறுவனங்களை இங்கு வரவழைத்து வடக்கு கிழக்கில் மீண்டும் புலிகளின் ஆதிக்கத்தை ஏற்படுத்தும் வேலைத்திட்டங்கள் மும்முரமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. ஒருபுறம் புலிகளின் பணத்தில் வடக்கும் கிழக்கும் பலமடைந்து வரும் நிலையில் மறுபுறம் இந்தியாவின் ஒரு காலணித்துவ நாடாக இலங்கையை மாற்றியமைக்கும் வேலையும் நடைபெற்று வருகின்றது.
மேலும் இறுதிக்கட்ட யுத்தம் தொடர்பில் யுத்த குற்ற விசாரணைகள் நடைபெறவுள்ளன. எமது இராணுவத்தை சிறைகளில் வைத்து சித்திரவதைகள் செய்யும் நடவடிக்கை இப்போதே ஆரம்பமாகிவிட்டது. இன்னும் சிறிது காலத்தில் முழுமையாக எமது இராணுவத்தை போர்க்குற்றவாளிகள் என்ற நிலைப்பாட்டில் கொண்டுவந்து புலிகளை கொன்றதற்காக இராணுவத்தை சர்வதேச நீதிமன்றில் தண்டிக்கப்போகின்றனர். அதற்கான முக்கிய பொறுப்பு பீல்ட்மார்ஷல் சரத் பொன்சேகாவிடமே உள்ளது. இப்போதிருந்தே அவரது பணியினை ஆரம்பித்து விட்டார் என்றார்.
No comments
Post a Comment