வட கொரியத் தலைவர் கிம் யொங் –உன் மேலும் அணுசக்திப் பரிசோதனைகளை மேற்கொள்ள உத்தரவிட்டுள்ளதாக அந்நாட்டு அரசாங்க ஊடகம் நேற்று வெள்ளிக்கிழமை தெரிவித்தது.
தென் கொரிய மற்றும் அமெரிக்கப் படையினர் பாரிய இராணுவ பயிற்சி நடவடிக்கையை முன்னெடுத்தது முதற்கொண்டு பிராந்தியத்திலான பதற்ற நிலை அதிகரித்துள்ளது.
கிம் யொங் – உன் ஏவுகணையில் பொருத்தக்கூடிய சிறிய அணு ஆயுதங்களை தனது நாட்டு விஞ்ஞானிகள் விருத்தி செய்துள்ளதாக உரிமை கோரி அத்தகைய ஆயுதமொன்றை அவர் பார்வையிடுவதை வெளிப்படுத்தும் புகைப்படங்கள் வெளியானமைக்கு ஒரு சில தினங்களிலேயே இந்த பத்திரிகைச் செய்தி வெளியாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் புதிதாக விருத்தி செய்யப்பட்டுள்ள அணு ஆயுதங்களின் அழிவுச் சக்தியை மதிப்பிட அவற்றை வெடிக்க வைத்து பரிசோதனை செய்வதற்கு கிம் யொங் உன் உத்தரவிட்டுள்ளதாக வட கொரியாவின் உத்தியோகபூர்வ அரசாங்க ஊடகமான 'கே.சி.என்.ஏ. ' குறிப்பிட்டுள்ளது.
முதல் நாள் வியாழக்கிழமை வட கொரியாவால் ஏவிப் பரிசோதிக்கப்பட்ட இரு ஏவுகணைகளும் அணு ஆயுத தாக்குதல் பயிற்சியின் ஒரு அங்கமாகவே ஏவப்பட்டதாக அந்த ஊடகம் குறிப்பிட்டுள்ளது.
வட கொரியாவால் விருத்தி செய்யப்பட்டுள்ளதாக கூறப்படும் ஏவகணைகளில் பொருத்தப்படக் கூடிய அணு ஆயுதங்கள் அயல்நாடான தென் கொரியா மற்றும் பிராந்திய நாடுகளுக்கு மட்டுமல்லாது அமெரிக்காவின் பிரதான நிலப் பகுதிக்கும் அச்சுறுத்தலாகவுள்ளன.
புதிய அணு ஆயுதப் பரிசோதனைகளுக்கு உத்தரவிட்டுள்ள கிம் யொங் – உன், தென் கொரிய- – அமெரிக்க இராணுவப் பயிற்சியின் போது தனியொரு மரத்துக்காவது புல்லுக்காவது தீங்கு ஏற்படுமாயின் அந்நாடுகள் மீது உடனடியாக அணு ஆயுதத் தாக்குதல் நடத்தப்படும் என அச்சுறுத்தல் விடுத்துள்ளார்.
மேலும் அணுசக்தி பரிசோதனைகளை நடத்துவதற்கு கிம் யொங் – உன்னால் வழங்கப்பட்டுள்ள இந்த உத்தரவு குறித்து தென் கொரியா விபரிக்கையில், இது சர்வதேச அபிப்பிராயத்தை வடகொரியா அலட்சியம் செய்து வருவதை எடுத்துக் காட்டுவதாக உள்ளது என குறிப்பிட்டுள்ளது.
“சர்வதேச சமூகம் வட கொரியா மீது பலமான தடைகளை விதித்து வருகின்ற நிலையில், அந்தத் தடைகளின் அவசியம் குறித்து அதன் இந்த பிந்திய செயற்பாடுகள் நிரூபிப்பனவாக உள்ளதாக தென் கொரிய ஒருமைப்பாட்டு அமைச்சின் பேச்சாளர் ஜியோங் ஜூன் ஹீ தெரிவித்தார்.
இந்நிலையில் ஐக்கிய நாடுகள் செயலாளர் நாயகம் பான் கீ மூன், வட கொரியா பிராந்தியத்தின் ஸ்திரத்தன்மையைக் குலைக்கும் செயற்பாடுகளை கைவிட வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.
No comments
Post a Comment