உள்நாட்டு விடயங்கள் தொடர்பாக சர்வதேச விசாரணைக்கு எனது உடன்பாடு கிடையாது. மீள் குடியேற்றம் காணாமல்போனோர் தொடர்பான விசாரணை, நீதித்துறையின் சுயாதீனம் என்ற மூன்று விடயங்கள் தொடர்பிலேயே இலங்கை வந்த ஐ.நா. மனித உரிமை ஆணையாளர் நாயகம் என்னிடம் வலியுறுத்தினார் என ஜனாதி பதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.
வாத்துவ "புளூவோட்டர்" ஹோட்டலில் சனிக்கிழமை இடம்பெற்ற இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தின் தேசிய சட்ட மாநாட்டை ஆரம்பித்து வைத்து உரையாற்றுகையிலேயே ஜனாதிபதி மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
ஜனாதிபதி இங்கு தொடர்ந்தும் உரையாற்றுகையில், ஐ.நா. மனித உரிமை ஆணையாளர் நாயகம் அண்மையில் இலங்கைக்கு வந்தார். அவர் என்னை சந்தித்தபோது, மூன்று கோரிக்கைகளை முன்வைத்தார். முதலாவதாக இடம்பெயர்ந்து முகாம்களில் வாழும் மக்களை விரைவில் விடுவித்து அவர்கள் சுதந்திரமாக வாழ்வதற்கு அவர்களது காணிகள் மீளக் கையளிக்கப்பட்டு மீள் குடியேற்றம் துரிதப்படுத்தப்பட வேண்டும். இரண்டாவதாக காணாமல்போனோர் தொடர்பான விசாரணை துரிதப்படுத்தப்பட வேண்டும். மூன்றாவதாக எமது நாட்டின் நீதித்துறையை பலப்படுத்தி சுயாதீனமாக்க வேண்டும். இவை மூன்றும் உத்தரவுகள் அல்ல கோரிக்கைகளே ஆகும்.
மனித உரிமை மீறல் தொடர்பாக சர்வதேசத்தின் குற்றச்சாட்டுகள் தொடர்பாக எதிர்காலத்தில் நடைபெறவுள்ள விசாரணைகளிலும், அதன்பின்னரான நீதித்துறை நடவடிக்கைகளிலும் வெ ளிநாட்டு நீதிபதிகளை நாட்டுக்குள் கொண்டு வருவது தொடர்பில் எனக்கு இணக்கப்பாடு கிடையாது.
எமது நாட்டின் நீதிபதிகள் மற்றும் நீதித்துறை தொடர்பாக நம்பிக்கை உள்ளது. நீதித்துறையை பக்கச்சார்பில்லாமல் சுயாதீனமாக்க வேண்டியதே எமது பொறுப்பாகும். இதுவே எமது அரசின் திட்டமாகும். எமது நீதித்துறையில் சேவையாற்றுவர்கள் தொடர்பில் காலத்திற்கு காலம் குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டன. நீதிபதிகளின் வீடுகளுக்கு கல்லெறிந்தார்கள், இன்னொரு காலத்தில் நீதிபதிகள் தொடர்பாக குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டன.
அண்மைக்காலத்தில் முன்னாள் நீதியரசர் 48 மணித்தியாலங்களுக்குள் வீட்டுக்கு அனுப்பப்பட்டார். கடந்த ஆட்சியாளர்களின் நீதித்துறை மீதான தலையீடுகளை புதிய ஆட்சியில் உள்ளோர் நன்கறிவார்கள். இன்று நாட்டின் நீதித்துறை சுதந்திரமாக இயங்க இடமளிக்கப்பட்டுள்ளது. எந்தவிதமான அழுத்தங்களும் இன்றில்லை.
நீதித்துறை மீது அரசியல் அழுத்தங்கள் கொடுப்பதென்பது மிலேச்சத்தனமான செயற்பாடாகும் என்பதே எனது கருத்தாகும். நீதித்துறையின் காலதாமதத்தை நீக்கி பொதுமக்களுக்கு பாதுகாப்பினை வழங்குவது தொடர்பில் பிரதம நீதியரசர் மற்றும் நீதி அமைச்சருடன் பேச்சுவார்த்தைகளை நடத்தி உடனடியாக தீர்மானங்கள் எடுக்கப்படும் என் என்றார்.
No comments
Post a Comment