நவம் அண்ணை - ஒரு மறை முக ஊடகப் போராளி.
‘மூத்த ஊடகவியலாளர் நவரட்ணராஜா காலமானார்!’ என்ற இந்தத் தலைப்பை இன்று காலை உதயன் பத்திரிகையின் இணையத்தளத்தில் பார்த்ததும் மனதிற்குள் ஒரு நெருடல்.
அதில் போடப்பட்டிருந்த படத்தை உற்றுப் பார்த்தேன். சந்தேகமே இல்லை. நவம் அண்ணை தான். அப்படியென்றால் நவம் அண்ணை எம்மை விட்டுப் போய் விட்டாரா? நெஞ்சிற்குள் ஒரு பதற்றம்.உடனே பதிவு இணையத்தளத்திற்குச் சென்றேன்.
அதிலும் அதே செய்திதான். கூடவே நவம் அண்ணையின் படங்களும் அதில் இணைக்கப்பட்டிருந்தன. என்னால் ஏற்க முடியவில்லை.
ஓவென்று கதறியழ வேண்டும் போல இருந்தது.
2005 பெப்ரவரி முதல் 2009 மே வரை ஐ.பி.சி வானொலியின் தலைமை செய்தி ஆசிரியராக நான் பணிபுரிந்த பொழுது எனக்கும், அப்பொழுது ஐ.பி.சி நிறுவனத்தின் பணிப்பாளராக விளங்கிய ரமணன் அவர்களுக்கும் மட்டுமே தெரிந்த ஒருவராக விளங்கியவர் நவம் அண்ணை.
ஐ.பி.சி வானொலியில் அன்று பணியாற்றிய எந்தவொரு அறிவிப்பாளருக்கும் அவரைத் தெரியாது. நவம் என்ற பெயர் இடையிடையே எமது செய்தியறையில் அடிப்பட்டாலும், அவரை யாருக்கும் தெரியாது. ஓரிரு தடவைகள் பிரியன் என்ற பெயரில் செவ்விகளை வழங்கியிருந்தார். ஆனாலும் பிரியன் என்கின்ற நவம் யார் என்பது என்னையும், பணிப்பாளர் ரமணனையும் தவிர வேறு எவருக்கும் தெரியாத ஒன்றாகவே இருந்தது. அந்த அளவிற்கு நவம் அண்ணையின் விடயத்தில் நாம் இரகசியம் காத்தோம்.
யாழ்ப்பாணத்தில் இருந்து எமக்கு உண்மைகளைத் தந்த அவரது உயிரைக் காக்க வேண்டும் என்பதற்காகத் தான் அவ்வாறு இரகசியம் காத்தோம். இந் நினைவுக் குறிப்பை நான் எழுதவில்லை என்றால் எவருக்குமே அவரது இரகசியப் பணி தெரிந்திருக்காது.
அந்த அளவிற்கு நவம் அண்ணை பற்றி நாம் இரகசியம் காத்தோம். நவம் அண்ணையும் இரகசியம் காத்தார்.
2005ஆம் ஆண்டின் நடுப்பகுதி. ஒரு நாள் என்னிடம் வந்த பணிப்பாளர் ரமணன், ஒரு தொலைபேசி எண்ணைத் தந்து ‘இவரோடு கதையும், இவர் யாழ்ப்பாணத்திற்கான எங்கடை புதிய செய்தியாளர்’ என்றார்.
அப்பொழுது யாழ்ப்பாணத்திற்கான செய்தியாளராக தவச்செல்வன் என்பவர் கடமையாற்றி வந்தார். ஆனால் செய்திகளைத் தருவதை விட பணத்தைக் கறப்பதில் தான் தவச்செல்வனின் கவனம் இருக்கும். அதனைவிட செய்திகளைத் தருவதிலும் தவச்செல்வன் அலட்சியப் போக்கைக் கடைப்பிடித்தார். தவச்செல்வன் இல்லை என்றால் யாழ்ப்பாணத்தில் இருந்து ஐ.பி.சிக்கு செய்தி கிடைக்காது என்ற நிலைதான் இருந்தது. அப்படியான ஒரு சூழலில் அவருக்கு மாற்றீடாக ஒருவரை நாம் தேடத் தொடங்கிய பொழுது தான் வன்னியில் உள்ள எமது நண்பர்கள் ஊடாக அறிமுகம் ஆகியவர் நவம் அண்ணை.
என்னோடு நவம் அண்ணை பணிபுரிந்த நாட்களில் ஒரு நாள் கூட அவர் பணத்தைப் பற்றிப் பேசியது கிடையாது. ஓரிரு தடவைகள் அவருக்கான பண வழங்கல் பற்றி நான் கேட்ட பொழுது, ‘அதை விடடா. காசு முக்கியம் இல்லை. செய்தி வெளியில வாறதுதான் முக்கியம்’ என்று கூறிப் பணம் பற்றிய பேச்சைத் திசைதிருப்பி விடுவார்.
‘உவன் ஆனந்த சங்கரிக்கு வால்பிடிச்சவன். உவனை என்னெண்டு யாழ்ப்பாணச் செய்தியாளராக வைச்சிருப்பியள்?’ என்று நவம் அண்ணையைப் பற்றி தவச்செல்வன் என்னிடம் குமுறித் திட்டித் தீர்த்த பொழுது, வன்னியில் உள்ள நண்பர்கள் சிரித்தார்கள். நானும் சிரித்தேன்.
ஏனென்றால் அன்று தமிழ்த் தேசியம் பேசிக் கொண்டிருந்த தவச்செல்வனின் குறி பணத்தில்தான் இருந்தது: செய்திகளைத் தருவதில் அல்ல. நவம் அண்ணையின் இலக்கோ செய்திகளை தருவதில் மட்டுமே இருந்தது.
அவர் பதிவு இணையத்திற்கும், வன்னியில் உள்ள நண்பர்கள் ஊடாக சங்கதி இணையத்திற்கும் செய்திகளை வழங்கினார் என்று அறிந்திருந்தேன். ஆனாலும் அவருக்கான கொடுப்பனவை பதிவு இணையமே வழங்கியதாகவும் அறிந்தேன்.
ஆனால் பதிவு இணையத்திற்கு வழங்கிய செய்திகளை விட எமது வானொலிக்கே நவம் அண்ணை அதிகம் செய்திகளை வழங்கினார். அதற்காக எம்மிடம் ஒரு நாள் கூட அவர் பணம் கேட்டதில்லை.
யாழ்ப்பாணத்தில் அன்றிருந்த ஐ.பி.சி வானொலியின் நேயர்கள் பலர், எமது யாழ்ப்பாணச் செய்தியாளராக தவச்செல்வனை மட்டுமே அறிந்திருந்தார்கள். யாருக்கும் நவம் என்றொரு இரகசிய செய்தியாளன் இருந்தது தெரியாது. அதனையிட்டு நவம் அண்ணையும் அலட்டிக் கொண்டது கிடையாது.
யாழ்ப்பாண மண்ணில் சிங்களப் படைகளும், ஒட்டுக்குழுக்களும் புரிந்த படுகொலைகள், ஆட்கடத்தல்கள், பாலியல் வெறியாட்டங்கள், கைதுகள், நில ஆக்கிரமிப்புக்கள் என எல்லாச் செய்திகளையும் நவம் அண்ணையே எமக்கு வழங்கினார். பெரும்பாலான சந்தர்ப்பங்களில் எமது அதிகாரபூர்வ செய்தியாளரான தவச்செல்வன் எமக்குச் செய்திகளைத் தருவதற்குப் பல மணிநேரத்திற்கு முன்னரே நவம் அண்ணையிடம் இருந்து செய்திகள் வந்து விடும். அவை உடனடியாக எமது வானொலியில் ஒலிபரப்பாகி விடும்.
இங்கு அதிகாலை 2:00 மணியாக இருக்கும் பொழுதே, எனது செல்பேசிக்குக் குறுஞ்செய்தியாக அல்லது மின்னஞ்சலுக்கு செய்தியாக நவம் அண்ணை தகவல் அனுப்பி விடுவார். அந்தளவு வேகம் நவம் அண்ணையிடம் இருந்தது.
பல மணிநேரம் கழித்து அச்செய்தியைத் தவச்செல்வன் எமக்கு வழங்கும் பொழுது அது ஆறிய செய்தியாகி விடும்.
ஆனாலும் யாரும் நவம் அண்ணையைப் பற்றி அறிந்திருக்கவில்லை.
2006 ஓகஸ்ட் 11ஆம் நாளன்று முகமாலையில் யுத்தம் வெடித்ததை அடுத்து, ஏ-9 நெடுஞ்சாலை மூடப்பட்டு யாழ்ப்பாணத்திற்கான தரைவழித் தொடர்புகள் அனைத்தும் துண்டிக்கப்பட்டன.
அப்பொழுது எமது அதிகாரபூர்வ செய்தியாளரான தவச்செல்வன் கிளிநொச்சியில் இருந்தார்.
அல்லைப்பிட்டியில் தமிழீழ விடுதலைப் புலிகளின் ஈருடகப் படையணியினர் தரையிறங்கி மேற்கொண்ட வலிந்த தாக்குதல் நடவடிக்கையையும், வரணியில் தமிழீழ விடுதலைப் புலிகளின் அணியொன்று மேற்கொண்ட ஊடுருவல் நடவடிக்கையையும் முறியடிப்பதற்காக யாழ்ப்பாணத்திற்கான செல்பேசித் தொடர்புகள் அனைத்தையும் சிங்களப் படையினர் முற்றாகத் துண்டித்திருந்தனர்.
அப்பொழுது நவம் அண்ணையுடனான தொடர்பையும் நாம் இழந்தோம்.
இதனால் யாழ்ப்பாணத்தில் இருந்து செய்திகளைப் பெறுவது சாத்தியமற்றதாகியது. என்ன செய்வது என்று நாம் திண்டாடிக் கொண்டிருந்த பொழுது திடீர் வெளிச்சம் எனது கணினித் திரையில் தென்பட்டது. எனக்கு நவம் அண்ணையிடம் இருந்து மின்னஞ்சல் ஒன்று வந்திருந்தது.
சிங்களப் படையினர் பிறப்பித்திருந்த ஊரடங்கு உத்தரவையும் பொருட்படுத்தாது, எங்கோ ஓரிடத்திற்கு சென்று, அங்கிருந்து எனக்கு மின்னஞ்சல் ஒன்றை நவம் அண்ணை அனுப்பியிருந்தார்.
அதில் யாழ்ப்பாணத்தில் என்ன நடக்கின்றது என்பதை சிறு சிறு குறிப்புக்களாக நவம் அண்ணை இணைத்திருந்தார். அப்பொழுதுதான் இருண்டு கிடந்த யாழ்ப்பாணத்திற்குள் வெளிச்சம் பரவியது. அங்கே என்ன நடக்கின்றது என்பது எமது கண்களுக்குத் தென்பட்டது.
சிங்களத்தின் படையாட்சியை மீறி, அதன் இரும்புக் கரங்களை மீறி, நவம் அண்ணை எமக்கு வழங்கிய செய்திகள் உலகெங்கும் மட்டுமன்றி, மறுநாள் அதிகாலை சிற்றலை வழியாகத் தமிழீழ தாயகம் முழுவதும் பரவின. இதில் நவம் அண்ணையின் பங்கு என்னையும், பணிப்பாளர் ரமணனையும் தவிர வேறு எவருக்கும் தெரியாது.
அதன் பின்னர் யாழ்ப்பாணத்தில் இருந்து எமக்கு வந்த ஒவ்வொரு முக்கிய செய்திகளிலும் நவம் அண்ணையின் பங்கு இருந்தது.
கிளிநொச்சியில் இருந்தவாறு தனது யாழ்ப்பாணத்துத் தொடர்புகள் ஊடாகத் தவச்செல்வன் வழங்கிய செய்திகளை விட, யாழ்ப்பாணத்தில் சிங்களத்தின் படையாட்சிக்குள் இருந்தவாறு நவம் அண்ணை வழங்கிய செய்திகளில் பல மடங்கு கனதியும், பெறுமதியும் இருந்தன.
ஆனால் அதற்காக ஒரு சதத்தைக் கூட எம்மிடம் நவம் அண்ணை கேட்கவில்லை.
‘அண்ணை, கவனம்’ என்று நான் கூறும் பொழுது, ‘என்னைப் பற்றிக் கவலைப்படாதை. நான் தாற செய்தியைப் போடு அப்பு’ என்று நவம் அண்ணை கூறுவார்.
நவம் அண்ணை சிறந்த செய்தியாளராகவும், நிழற்படப் பிடிப்பாளராகவும் விளங்கினாலும், எழுத்து என்று வரும் பொழுது அதில் அவர் பரீட்சியம் மிக்கவராக விளங்கவில்லை. ஆனாலும் நீண்ட செய்திகளையும், கட்டுரை வடிவிலான குறிப்புக்களையும் அவர் அனுப்புவார்.
‘அப்பு, நான் அனுப்பிய கட்டுரை கிடைத்ததோ?’ என்று அவர் கேட்கும் பொழுது கட்டுரை வடிவிலான குறிப்புக்கள் மட்டும் வந்திருக்கும்.
‘ஓம், அண்ணை’ என்றதும், ‘சரி, அதைப் போட்டுவிடு’ என்பார்.
எனக்குத் தெரியும் கட்டுரை என்று அவர் குறிப்பிடும் குறிப்புக்கள் அப்படியே வாசிப்பதற்கு பொருத்தமற்றவை என்பது. ஆனாலும் அதன் சாராம்சத்தை செய்திகளாகத் தொகுத்து ஒலிபரப்புவோம்.
அதனையிட்டு நவம் அண்ணையும் பெரிதாக அலட்டிக் கொண்டது கிடையாது. அவரைப் பொறுத்தவரை செய்திகள் வெளியில் வந்தால் சரி.
2009 மே 12 வரை ஐ.பி.சி வானொலிக்கான யாழ்ப்பாணச் செய்தியாளராக நவம் அண்ணையே விளங்கினார்.
ஒரு அதிகாரபூர்வ செய்தியாளனாக அல்ல. ஒரு புலனாய்வுச் செய்தியாளனாக, ஒரு இரகசிய செய்தியாளனாக, ஒரு மறை முக ஊடகப் போராளியாகவே அவர் விளங்கினார்.
சிங்களப் படைகளிடம் அவர் மாட்டிக் கொள்வாரோ? என்று நான் அச்சமடைந்த நாட்களும் உண்டு.
யாழ்ப்பாணத்தில் சிங்களப் படைகள் புரிந்த இனவெறியாட்டத் தாண்டவங்களை மட்டுமன்றி, அங்கு நிகழ்ந்த சமூகச் சீர்கேடுகள், அரச அதிகாரிகளின் முறைகேடுகள் பற்றிய செய்திகளையும் நவம் அண்ணையே எமக்குத் தந்தார்.
இது அவரது உயிருக்கு உலைவைப்பதாகவும் இருந்தது.
ஒரு தடவை யாழ்ப்பாணத்தின் கிராம உத்தியோகத்தர் ஒருவரின் அசமந்தப் போக்குக் காரணமாக தற்கொலை செய்து கொண்ட ஒருவரின் உடலம் தூக்கில் தொங்கிக் கொண்டிருந்த செய்தி நவம் அண்ணையால் எமக்கு வழங்கப்பட்டது. அதற்குக் காரணமாக இருந்த கிராம அலுவலர் தனது வீட்டில் ஒழிந்திருந்ததும், பின்னர் மக்களால் அவர் கண்டுபிடிக்கப்பட்டு நையப்புடைக்கப்பட்டதும் எமக்கு நவம் அண்ணையால் செய்தியாக வழங்கப்பட்டது.
நவம் அண்ணையும் அப்பொழுது ஒரு கிராம அலுவலராகப் பணிபுரிந்தவர். சம்பவம் நடைபெற்ற இடத்தில் நவம் அண்ணையும் நின்றதால், அச்செய்தியை அவரே எமக்கு வழங்கினார் என்ற சந்தேகம் சக அரச அதிகாரிகளிடையே ஏற்பட்டது. அதனால் அவரைச் சந்தேகக் கண்ணோடு (கூடவே அச்சம் கலந்த பார்வையோடும்) அவர்கள் பார்க்கத் தொடங்கினார்கள்.
இதனால் தான் ஒருவேளை சிங்களப் படைகளிடம் காட்டிக் கொடுக்கப்படலாம் என்றும் என்னிடம் நவம் அண்ணை அச்சம் வெளியிட்டார்.
ஆனால் அவரது பக்கம் ஆகூழ் (அதிர்ஸ்டம்) இருந்தது. அதனால் கடைசி வரை அவர் எதிரியிடம் காட்டிக் கொடுக்கப்படவில்லை.
யுத்தம் முடிந்த பின்னர் அவருடனான தொடர்பை சிறிது காலத்திற்கு நான் இழந்திருந்தேன். பின்னர் 2009ஆம் ஆண்டின் இறுதியில் இருந்து 2010ஆம் ஆண்டின் நடுப்பகுதி வரையான காலப்பகுதியில் பதிவு இணையத்தின் செய்தி ஆசிரியர்களில் ஒருவராகக் கடையாற்றிய பொழுது, மீண்டும் நவம் அண்ணையின் தொடர்பு கிடைத்தது. அப்பொழுது முன்னரைப் போன்று எமக்கு அவர் செய்திகளை வழங்கினார்.
ஆனாலும் யுத்தத்தின் முடிவு அவர் வழங்கிய செய்திகளின் வீரியத்தைக் குறைத்திருந்தது.
பதிவு இணையத்தில் இருந்து நான் விலகியதும், நவம் அண்ணை டெய்லி மிரர், தமிழ் மிரர் போன்ற கொழும்பு ஊடகங்களுக்கும் செய்திகளை வழங்கியதாகப் பின்னர் அறிந்தேன்.
அதன் பின்னர் நவம் அண்ணையுடன் உரையாடுவதற்கு வாய்ப்புக் கிடைக்கவில்லை.
நவம் அண்ணையின் மறைவு பற்றிய செய்தியை இன்று பார்த்ததும் நெஞ்சுக் கூடு கழன்று விழுந்தது போன்ற உணர்வு ஏற்பட்டது.
மனதிற்குள் ஏதோ ஒரு இனம்புரியாத வலி.
நான்கு மாதத்திற்கு முன்னர் இடம்பெற்ற வாகன விபத்து ஒன்றில் அவர் படுகாயமடைந்தார் என்றும், அதன் விளைவாக உடல்நிலை மோசமடைந்து அவர் மாரடைப்புக்கு ஆளாகி இன்று இறந்தார் என்றும் செய்தியைப் படித்ததும் என்னால் ஏற்க முடியவில்லை.
விபத்தில் அவர் படுகாயமடைந்த செய்தியை நான் அறிய முடியவில்லை என்பதையும், அதை அறிந்திருந்தால் அவரோடு எப்படியாவது ஒரு தடவையாவது உரையாடியிருக்க முடியும் என்பதையும் நினைத்த பொழுது கண்கள் குளமாகிப் போயின.
கடந்த ஆறு ஆண்டுகளாக ஆழ்மனதின் நிசப்தங்களில் மட்டும் என்னோடு தொடர்பில் இருந்த நவம் அண்ணையின் குரலை இனி நிரந்தரமாகக் கேட்க முடியாது என்று நினைத்த பொழுது விலா எலும்புகள் உடைந்து நொருங்குவது போன்ற உணர்வே ஏற்பட்டது.
மறை முகக் கரும்புலிகள் பற்றியும், புலனாய்வு வீரர்கள் பற்றியும் எம்மவர்கள் பலர் அறிந்திருப்பார்கள். ஆனால் மறை முக செய்தியாளர்கள் பற்றி எம்மவர்களில் பலர் அறிந்திருக்க வாய்ப்பில்லை. அவ்வாறு எம்மவர்களில் மறை முக செய்தியாளர்கள் என்று கூறுவதற்கும் பலர் இல்லை.
ஆனால் நவம் அண்ணை அப்படியல்ல.
யுத்த காலத்தில் தமிழீழத்தில் சில மறை முக செய்தியாளர்கள் பணிபுரிந்தார்கள். அப்படிப்பட்ட சிலரில் ஒருவர் தான் நவம் அண்ணை.
அந்த மறை முக ஊடகப் போராளியின் முகத்தை இன்று வெளியில் கொண்டு வருவதே அவருக்கு நான் செய்யக்கூடிய இறுதி மரியாதையாக இருக்கும்.
கலாநிதி சிறீஸ்கந்தராஜா (ரஞ்சித்),
முன்னாள் தலைமை செய்தியாசிரியர் (ஐ.பி.சி – தமிழ் வானொலி) (பெப்ரவரி 2005 – மே 2009)
No comments
Post a Comment