சித்திரவதைகளின் அடிப்படையில் பெறப்பட்ட வாக்குமூலத்தை காரணங்காட்டி முன்னாள் போராளியொருவர் குற்றச்சாட்டுக்களிலிருந்து விடுவிக்கப்பட்டுள்ளார்.
ஆனையிறவு இராணுவ முகாம் மீது 2000ஆம் ஆண்டு தாக்குதல் நடத்தியவர் என்ற குற்றச்சாட்டில் பயங்கரவாதத் தடைச்சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்ட பெர்ணாண்டோ எமில்தாஸ் என்பவரே யாழ். மேல் நீதிமன்ற நீதிபதி மா.இளஞ்செழியனால் நேற்று வியாழக்கிழமை விடுதலை செய்யப்பட்டார்.
அவருக்கு எதிராக சுமத்தப்பட்ட குற்றச்சாட்டு தொடர்பில், அவர் அளித்த ஒப்புதல் வாக்குமூலத்தின் நம்பகத்தன்மையை பயங்கரவாதக் குற்றத்தடுப்புப் பிரிவு உறுதிப்படுத்த தவறியதின் அடிப்படையில் அவரை விடுதலை செய்வதாக நீதிபதி தீர்ப்பளித்தார்.
2000ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 22 மற்றும் 23ஆம் திகதிகளில் ஆனையிறவு இராணுவ முகாம் மீது விடுதலைப் புலிகளால் மேற்கொள்ளப்பட்ட ஓயாத அலைகள் 3 தாக்குதலில் ஈடுபட்டார் என கடந்த 2011 ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் 21ஆம் திகதி பயங்கரவாதத் தடுப்புப் பிரிவினரால் கைது செய்யப்பட்டார்.
கைது செய்யப்பட்டவர் வழங்கிய குற்ற ஒப்புதல் வாக்குமூலத்தை பயங்கரவாத தடுப்புப் பிரிவினர் மன்றில் சமர்ப்பித்தனர். இருந்தும் அந்தக் குற்ற ஒப்புதல் வாக்குமூலத்தின் உண்மைத் தன்மையை விசாரணைகளின் முடிவில் பயங்கரவாதத் தடுப்புப் பிரிவினர் நிருபிக்கத்தவறியமையால் , குற்றஞ்சாட்டப்பட்டவரை விடுதலை செய்து நீதிபதி தீர்ப்பளித்தார்.
No comments
Post a Comment