கதறும் கொழும்பில் கடத்தப்பட்ட 5 மாணவர்களின் பெற்றோர்
நாம் மரணிப்பதற்குள் எமது பிள்ளைகளை கண்ணில் காட்டுங்கள். எமக்கான இறுதிக் கிரியைகளை செய்ய வேனும் அவர்களை எம்மிடம் மீள ஒப்படையுங்கள்.
நாம் எல்லாவற்றையும் இழந்துவிட்டோம். இனி இழப்பதற்கு எதுவும் இல்லை. எந்த குற்றமும் செய்யாத எமது பிள்ளைகள் எங்கு இருக்கின்றார்கள் என்றேனும் கூறுங்கள். ஏன் எமக்கான நீதியை பெற்றுத் தர தாமதிக்கின்றீர்கள். 8 வருடங்களாக பொலிஸ் நிலையங்கள், நீதிமன்றங்கள், கோயில்கள் என நாம் செல்லாத இடமில்லை. தயவு செய்து எமது பிள்ளைகளை கண்ணில் காட்டுங்கள்' என கொழும்பு மற்றும் அதனை அண்டிய பகுதிகளில் கடத்தப்பட்ட 5 மாணவர்களின் பெற்றோர் கண்ணீர் மல்க நேற்று கதறினர்.
கோட்டை புகையிரத நிலையம் முன்பாக குறித்த பெற்றோரும், குறித்த ஐந்து மாணவர்களுடன் சேர்ந்து கடத்தப்பட்ட மேலும் அறுவரின் உறவினர்களும் நேற்று அமைதி எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் ஒன்றினை மேற்கொண்டனர். இதன் போதே அவர்கள் ஊடகங்களிடம் மேற்கண்டவாறு கதறி அழுத வண்ணம் கருத்து தெரிவித்தனர்.
கடந்த 2008.09.17 அன்று இரவு தெஹிவளை, பெர்னாண்டோ மாவத்தையில் வைத்து ரஜீவ நாகநாதன், பிரதீப் விஸ்வநாதன், திலகேஷ்வரம் ராமலிங்கம், மொஹம்மட் நிலான், மொஹம்மட் சாஜித் ஆகிய மாணவர்களும் , கொட்டாஞ்சேனையைச் சேர்ந்த கஸ்தூரி ஆரச்சிலாகே ஜோன் ரீட், மன்னார் அரிப்பு பிரதேசத்தைச் சேர்ந்த அமலன் லியோன், ரொஷான் லியோன், கொட்டாஞ்சேனையைச் சேர்ந்த அன்டனி கஸ்தூரி ஆரச்சி, திருகோணமலையைச் சேர்ந்த கனகராஜா ஜெகன், தெஹிவளையைச் சேர்ந்த மொஹம்மட் அலி அன்வர் ஆகிய 11 பேர் கடற்படையின் கடத்தல் குழுவொன்றினால் கடத்தப்பட்டுள்ளனர். கடத்தப்பட்ட குறித்த 11 பேரும் வெலிசறை, கோட்டை மற்றும் திருகோணமலை கன்சைட் நிலத்தடி ரகசிய முகாம் ஆகிய கடற்படையின் கட்டுப்பாட்டு முகாம்களில் தடுத்து வைக்கப்பட்டிருந்துள்ளமையும் பலரிடம் விடுதலை தொடர்பில் கப்பம் கோரப்பட்டுள்ளமையும் விசாரணையில் உறுதியாகியுள்ளது.
இந் நிலையிலேயே கடந்த 8 வருடங்களாக தமது பிள்ளைகள் மீண்டும் திரும்புவர் என காத்திருந்த பெற்றோரும் உறவினர்களும் நேற்று முதன் முதலாக அமைதி ஆர்ப்பாட்டம் ஒன்றினை முன்னெடுத்தனர். நேற்றைய தினம் கோட்டை நீதிவான் நீதிமன்றில் இது குறித்த வழக்கு விசாரணைகளும் இருந்த நிலையிலேயே, வழக்கின் பின்னர் பிற்பகல் 1.00 மணியளவில் பெற்றோர் குறித்த ஆர்ப்பாட்டத்தை முன்னெடுத்தனர்.
இதன் போது, குற்றமே செய்யாத எமது பிள்ளைகள் எங்கே?, திருகோணமலை நிலத்தடி சிறைகளில் இருந்த எமது பிள்ளைகள் எங்கே? எமக்கான நீதி எங்கே? போன்ற பதாதைகளை ஏந்தியவாறு இவர்கள் இந்த அமைதி ஆர்ப்பாட்டத்தை முன்னெடுத்தனர்.
இதன் போது குறித்த பெற்றோரும் உறவினர்களும் ஊடகங்களிடம் கண்ணீர் மல்க தமது சோகங்களை வெளிப்படுத்தினர்.
கொட்டாஞ்சேனையைச் சேர்ந்த, அன்டனி கஸ்தூரி ஆரச்சி, கஸ்தூரி ஆரச்சிலாகே ஜோன் ரீட், ஆகிய கடத்தப்பட்ட தனது கணவர் மற்றும் மகன் ஆகியோரை பறிகொடுத்த தாய் இவ்வாறு கண்ணீர் மல்க தெரிவித்தார்.
' எனது கணவனையும் மகனையும் கடத்திச் சென்று இன்று 8 வருடங்கள் ஆகிறது. 2008 செப்டெம்பர் மாதம் வேனில் பயணித்துக்கொன்டிருந்த எனது மகன் கடத்தப்பட்டார். பின்னர் ஒக்டோபர் மாதம் வீட்டுக்கு வந்த அடையாளம் தெரியாத நபர்கள் அதிகாலை வேளையில் எனது கணவரையும் கடத்திச் சென்றனர். அப்போது சி.ஐ.டி.யில் வந்து மகனை எடுத்துச் செல்லுமாறு அவர்கள் கூறினர். அன்று முதல் ஒவ்வொரு பொலிஸ் நிலையமாகவும் நீதிமன்றங்கள் ஊடாகவும் அலைந்து திரிகின்றேன். இன்னும் எனது மகனையும் கனவரையும் காணவில்லை. குருணாகல் பகுதிக்கு எம்மை அழைத்து மகனை விடுவிக்க கப்பமும் எம்மிடம் பெற்றார்கள். இன்று குற்றம் செய்தவர்களைக் கூட மன்னிப்பளித்து விடுவிக்கின்றார்கள். சிறையில் உள்ளவர்களுக்காகவும் பலரும் குரல் கொடுக்கின்றார்கள். எமக்காக மட்டும் யாரும் பேசுவதில்லை.
நல்லாட்சி அரசாங்கமும் எமது விடயத்தில் அக்கறை காட்டுவதாக தெரியவில்லை. எமது பிள்ளைகள் என்ன குற்றம் செய்தார்கள். அவர்களை எம்மிடம் மீட்டுத் தாருங்கள் என கண்ணீர் வடித்தார்.
அத்துடன் 2008.09.17 அன்று இரவு தெஹிவளை, பெர்னாண்டோ மாவத்தையில் வைத்து கடத்தப்பட்ட ஐந்து மாணவர்களில் ஒருவரான கொட்டாஞ்சேனையைச் சேர்ந்த ரஜீவ நாகநாதனின் தாயார் இவ்வாறு கதறுகிறார்.
' எனக்கு இருப்பது ஒரே ஒரு பிள்ளை. அவன் லண்டனில் மருத்துவம் படிக்கச் செல்ல தயாராக இருந்த வேளையிலேயே அவனது நண்பர்களான பிரதீப் விஸ்வநாதன், திலகேஷ்வரம் ராமலிங்கம், மொஹம்மட் நிலான், மொஹம்மட் சாஜித் ஆகியோருடன் சேர்ந்து கடத்தப்பட்டுள்ளார். தயவு செய்து எனது மகனை என்னிடம் தாருங்கள். அவன் என்ன குற்றம் செய்தான். நாம் மரணிப்பதற்குள் எமது பிள்ளைகளை கண்ணில் காட்டுங்கள். தயவு செய்து எமது பிள்ளைகளை எம்மிடம் ஒப்படைத்து விடுங்கள். எமது இறுதிக் கிரியைகளை செய்ய வேனும் எமது பிள்ளைகளை எம்மிடமே அனுப்பி விடுங்கள்.' என கதறினார்.
அதே போன்று கடத்தப்பட்ட மற்றொரு மாணவனான மொஹம்மட் சாஜித்தின் தந்தையும் ஊடகங்களிடம் கருத்து தெரிவித்தார்.
'நாம் கடந்த எட்டு வருடங்களாக எமது
பிள்ளைகளை தேடிக்கொண்டிருக்கின்றோம்.
கடற்படையினரே எமது பிள்ளைகளை கடத்தினர் என்பதை நாம் அறிந்துகொண்டோம். எனினும் எமது பிள்ளைகள் எங்கே என்று மட்டும் தெரியவில்லை.
எமது பிள்ளைகளை பிடித்துச் செல்ல அவர்கள் என்ன குற்றம் செய்தார்கள். அவர்கள் குற்றம் செய்திருந்தால் நீதிமன்றம் ஊடாக மரண தண்டனையேனும் கொடுங்கள். குற்றமே செய்யாத அவர்களை எங்கே அடைத்து வைத்துள்ளீர்கள்' என கேள்வி எழுப்பினார்.
இதன்போது 5 மாணவர் உள்ளிட்ட 11 பேர் கடத்தல் விவகாரம் தொடர்பில் விசாரணை செய்யும் பொலிஸ் அதிகாரிக்கு வேறு விசாரணை நடவடிக்கைகள் காரணமாக தமது விடயத்தில் கவனம் செலுத்த நேரமில்லாது இருப்பதாக தாம் அறிவதாகவும் அது தொடர்பில் நீதிமன்றிலேயே கூறப்பட்ட தாகவும் பெற்றோர்கள் கவலை தெரிவித்தனர். அதனால் தமது விடயம் தொடர் பில் சிறப்பு அதிகாரி ஒருவர் ஊடாக விசா ரணைகளை துரிதப்படுத்தி கடத்தப்பட்ட தமது பிள்ளைகளை மீட்டுத் தாருங்கள் என பெற்றோர் ஜனாதிபதியிடம் வேண்டுகோள் விடுத்தனர்.
No comments
Post a Comment