குழந்தைகளுக்கு பொம்மைகளைக் கொடுத்து அவர்களை ஏமாற்றி அவர்களிடம் இருக்கும் ஆபரணங்களை பறித்துச்செல்லும் செயற் பாடுபோன்றே தற்போது வடகிழக்கில் மேற்கொள்ளப்படவுள்ள 65 ஆயிரம் வீட்டுத்திட்ட செயற்பாடுகளும் காணப்படுகின்றன என்று வடமாகாண
முதலமைச்சர் சி.வி. விக்னேஸ்வரன் தெரிவித்தார்.
வடமாகாண சபையின் 48ஆவது அமர்வு நேற்றைய தினம் கைதடியிலுள்ள வடமாகாண பேரவை செயலகத்தில் இடம் பெற்றது. இதன்போது மீள்குடியேற்றஅமைச்சினால் யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்காக முன்னெடுக்கப்படவுள்ள விசேடமான வீட்டுத்திட்டத்தில் திருத்தங்கள் மேற்கொள்ளப்படவேண்டும் என்பதான பிரேரணை ஒன்று மாகாண சபை உறுப்பினரால் கொண்டுவரப்பட்டது.
இப்பிரேரணை மீதான விவாதத்தில் மாகாண முதலமைச்சர் உரையாற்றுகையிலேயே இதனைத் தெரிவித்தார்.
தொடர்ந்து அங்கு உரையாற்றுகையில் யுத்தத்தால் பாதிக்கப்பட்டு வீடுகளை இழந்து நிற்கின்ற மக்களிடம் சென்று அவர்களுக்கு சிலவற்றைக் கொடுத்து அவர்களை தம் பக்கம் இழுத்து அதனூடாக தாங்கள் நன்மைகளைப் பெற்றுக்கொள்ள சிலர் முயற்சிக்கின்றனர். மீள்குடியேற்ற அமைச்சினால் வடக்கு கிழக்கில் யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு 65 ஆயிரம் வீடுகளை அமைத்துத்தரப்போவதாக தற்போது கூறுகின்ற விதத்திலேயே தருவதாக இருந்தால் அதனை நாம் எதிர்க்கின்றோம்.
குறிப்பாக இவ் வீட்டுத்திட்டத்தில் எங்களுக்கு எத்தனை வீடுகள் தேவை எவ்வாறான வீடுகள் தேவை என மாகாண அரசோடு கலந்துரையாடாமல் மத்திய அரசாங்கம் தன்னிச்சையாகவே இந்த நடவடிக்கைகளை எடுத்துள்ளது.
இவ்வாறானதொரு செயற்பாடே சற்று காலத்திற்கு முன்பு பிரதமரினால் மேற்கொள்ளப்பட்டிருந்தது. அதாவது கிராம ராஜ்ஜியம் என்ற பெயரில் கிராமத்திலிருந்து 20 பேரை ஓர் குழுவாக நியமித்து அதனை நேரடியாக தன்னிடம் வைத்துக்கொண்டு மாகாண சபைகளை புறம்தள்ளி செயற்பட்டிருந்தார். இந்நிலையில் இதற்கு கடும் எதிர்ப்பை நாம் வெளியிட்டிருந்த அடிப்படையில் தற்போது அது தொடர்பில் அலட்டிக் கொள்வதில்லை.
இவ்வாறானதொரு செயற்பாடே தற்போது பிரஸ்தாப வீட்டுத்திட்டத்திலும் காணப்படுகிறது. மாகாண சபையுடன் எதுவித கலந்துரையாடலும் மேற்கொள்ளமல் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.
அத்துடன் இது முகவர் அரசியலாகவும் மாறியுள்ளது.
இதனை எங்கள் மீது திணிப்பதற்கு ஆயுதமாக உங்களுக்கு வீடு வேண்டுமா? இல்லையா என வீடில்லாதவர்களிடம் கேட்டால் அவர்கள் என்ன சொல்வார்கள். அதாவது மத்திய அரசாங்கமானது குழந்தைகளுக்கு பொம்மைகளைக் கொடுத்து அவர்களை ஏமாற்றி அவர்களிடமிருக்கும் ஆபரணங்களை பறித்துச் செல்வதுபோன்று பாதிக்கப்பட்டுள்ள மக்களிடம் சென்று அவர்களுக்கு சிலவற்றைக் கொடுத்து அவர்களை தம் பக்கம் இழுத்து அதனூடாக தாங்கள் நன்மைகளை பெற முயற்சிக்கின்றார்கள்.
இவ்வாறு மத்திய அரசாங்கத்தின் நடவடிக்கையானது பாரிய தாக்கங்களையும் பின்னடைவுகளையும் எமக்குத் தரும்.
மேலும் தற்போது அவர்கள் கூறுவது போன்தான வீட்டுத்திட்டம் அமைக்கப்படுமானால் அவ் வீடுகளில் திருத்தம் செய்யவேண்டும் என்றால் அல்லது அதற்குப் பதிலான வேறொரு பாகத்தை பொருத்த வேண்டுமானால் என்ன செய்வது.? யாரிடம் போவது? இது எதுவுமே தெரியாது. எதிர்காலத்தினைக் கருதாமல் பணத்தினைக் கொண்டு செய்துவிட்டு அதனால் ஏற்படுகின்ற பிரச்சினைகளை யார் பார்ப்பது? இதற்கு யார் முகம் கொடுப்பது.?
மேலும் வடமாகாணத்தில் இதுவரை அமைக்கப்படாத இவ் வீடமைப்புத் திட்டத்தை செயற்படுத்துவதனூடாக சமூகத்தில் பல விதமான பிரிவுகளையும் பிரச்சினைகளையும் கொண்டுவரப்பார்க்கின்றனர். எம்மிடையே பலவிதமான பிரச்சினைகளையும் முரண்பாடுகளையும் ஏற்படுத்தி அதனூடாக பலவிதமான நன்மைகளை மத்திய அரசாங்கம் பெறுவதற்கான செயற்பாடாகவே இது உள்ளது என்றார்.
No comments
Post a Comment