பாதாள உலக தலைவர்களில் ஒருவராக கருதப்படும் ' கம்புறுபிட்டியே ஹர்ஷ' என்ற ஹர்ஷ யசஸ் ஸ்ரீ (32 வயது) நேற்று சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார். வெலிக்கடை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட, இராஜகிரிய - ஒபேசேகரபுர, அருனோதய மாவத்தையில் உள்ள வீடொன்றில் நேற்று பிற்பகல் 1.35 மணியளவில் உணவருந்திக்கொண்டிருந்த போது அவர் இவ்வாறு சுட்டுக்கொல்லப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் உதவி பொலிஸ் அத்தியட்சர் ருவன் குணசேகர தெரிவித்தார்.
மோட்டார் சைக்கிள் ஒன்றில், முகத்தை முழுமையாக மறைக்கும் தலைக்கவசம் அணிந்த வண்ணம் வந்த இரு சந்தேக நபர்களே .38 ரக ரிவோல்வரைப் பயன்படுத்தி துப்பாக்கிப் பிரயோகத்தை நடத்திவிட்டு தப்பிச் சென்றுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.
இந்த சம்ப்வம் குறித்து மேலும் தெரியவருவதாவது;
கடந்த சில தினங்களுக்கு முன்னர் மாத்தறை நீதிமன்றினால் பிணையில் விடுவிக்கப்பட்ட குறித்த பாதாள உலகக் குழு உறுப்பினராக கூறப்படும் கம்புருபிட்டியே ஹர்ஷ, ராஜகிரிய பகுதிக்கு வந்து தங்கியிருந்துள்ளார். வெலிக்கடை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட ராஜகிரிய, ஒபேசேகரபுர , அருணோதய மாவத்தையில் உள்ள வீடொன்றில் அவர் நேற்று பகல் உணவருந்திக்கொண்டிருந்தார்.
இதன் போது மோட்டார் சைக்கிளில் வந்த இருவர் அந்த வீட்டுக்குள் புகுந்துள்ளனர். ஒருவர் கறுப்பு நிற ஆடையும் முகத்தை முழுமையாக மறைக்கும் தலைக்கவசமும் அணிந்திருந்துள்ளதுடன் மற்றைய நபர் வெள்ளை நிற ரீ சேட் அணிந்து முகத்தை மறைத்திருந்துள்ளதாகவும் ஆரம்பக்கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது. வீட்டுக்குள் வந்த இவர்கள் தாம் கொண்டு வந்த .38 ரிவோல்வர் கொண்டு துப்பாக்கிப் பிரயோகம் செய்துவிட்டு அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளனர்.
இதனையடுத்து படுகாயமடைந்த கம்புருபிட்டியே ஹர்ஷ உடனடியாக கொழும்பு தேசிய வைத்தியசாலிக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளார். அங்கு அவருக்கு உடனடியாக சத்திர சிகிச்சை மேற்கொள்ளப்ப்ட்டுள்ள போதும், அது பலனிக்காமல் அவர் வைத்தியசாலையில் வைத்து உயிரிழந்துள்ளார்.
சம்பவம் தொடர்பில் வெலிக்கடை பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
No comments
Post a Comment