Latest News

February 27, 2016

தக்க நேரத்தில் பிரபாகரன் திரும்பி வருவார்! பழ.நெடுமாறன் நம்பிக்கை
by admin - 0

இலங்கைத் தமிழர் பிரச்சினை தமிழ்நாட்டில் நடைபெறவுள்ள இந்த சட்டப்பேரவைத் தேர்தலிலும் எதிரொலிக்கும் என்று தமிழர் தேசிய முன்னணி ஒருங்கிணைப்பாளர் பழ.நெடுமாறன் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

 இது தொடர்பாக அவர் அளித்த பேட்டி, 

பிரபாகரன் உயிரோடு இருக்கிறார் என்ற கருத்தை சமீபத்தில் கூறியிருந்தீர்கள், எந்த அடிப்படையில் அப்படி கூறுகிறீர்கள்? 

எனக்கு வந்த சில நம்பகமான தகவல்களின்படி. 2009, மே 17ம் திகதிக்கு 2 தினங்கள் முன்பே அவர் இலங்கையை விட்டு தப்பிச் சென்றுவிட்டார். 

அவர் உண்மையிலேயே மரணமடைந்திருந்தால், அவரது உடலை கொழும்பில் வைத்து, சர்வதேச ஊடகத்துக்கு ராஜபக்ச காட்டியிருப்பார். 

ஆனால், அப்படி செய்யாமல், கொல்லப்பட்டதாகச் சொன்ன மறுநாளே அவசர அவசரமாக காட்டிய உடலை எரித்தார். 

இதன் மூலம் அது பிரபாகரன் உடல் அல்ல என்பது உறுதியாகிறது. 

இலங்கை இராணுவம் காட்டிய உடல் பிரபாகரனுடையது இல்லை என்று எப்படி உறுதிபட கூறுகிறீர்கள்? 

இலங்கை இராணுவம் காட்டிய உடல் பிரபாகரனுடையது தானா என்பதை உறுதி செய்ய, டி.என்.ஏ பரிசோதனை செய்ய வேண்டும் என சிலர் வலியுறுத்தினர். 

இலங்கையில், டிஎன்ஏ பரிசோதனை மேற்கொள்வதற்கான வசதி எதுவும் கிடையாது. 

மேலும், ராஜீவ் காந்தி கொலை வழக்கில் பிரபாகரன் தேடப்படும் குற்றவாளி ஆவார். அவர் இறந்து விட்டார் என்று இலங்கை அரசு கூறிய போது, அவர் மீதான வழக்கை முடித்து வைக்க, அவரது இறப்புச் சான்றிதழை இந்திய அரசு கேட்டது. ஆனால், இலங்கை அரசு அதனை கொடுக்கவில்லை. 

பிரபாகரன் உயிரோடு இருக்கிறார் என்றால், எப்போது வெளியே வருவார்? 

ஒரு சுதந்திர போராட்டத்துக்கு கால நேரத்தை முடிவு செய்ய முடியாது. இலங்கைத் தமிழர் பிரச்சினை ஒரு தீவுக்குள் நடக்கிற பிரச்சினை அல்ல, அது சர்வதேசம் சம்பந்தபட்டது. 

சர்வதேச சூழலில் தமிழர்களுக்கு ஆதரவான மாற்றங்களை இப்போது உணர முடிகிறது. 

எனவே, தக்க நேரத்தில் பிரபாகரன் திரும்பி வருவார். 

இலங்கைத் தமிழர் பிரச்சினை தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் தாக்கத்தை ஏற்படுத்தும் என்றீர்கள். அது யாருக்கு சாதகமாக இருக்கும்? 

2011 சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக காங்கிரஸ் தோல்வியடையக் காராணமே இலங்கை பிரச்சினைதான். 

இதையடுத்தே இலங்கை பிரச்சினையில் அதிமுகவின் நிலைப்பாடு மாறியது. இத்தகைய மாற்றத்துக்கு தமிழக வாக்காளர்கள்தான் காரணம். 

எனவே இந்தத் தேர்தலிலும் இலங்கைத்தமிழர் பிரச்சினை எதிரொலிக்கும். 

இந்த முறையும் திமுக- காங்கிரஸ் கூட்டு சேர்ந்துள்ளது. அவர்களுக்கு இலங்கை பிரச்சினை பாதகமாக இருக்கும். 

உங்கள் இயக்கத்தின் தேர்தல் நிலைப்பாடு என்ன?

எங்கள் இயக்கத்தின் செயற்குழுக் கூட்டம் வரும் 28-ம் திகதி நடைபெறும். அதன் பிறகு தான் எங்களது தேர்தல் நிலைப்பாட்டை அறிவிப்போம். என்றார்.

« PREV
NEXT »

No comments