வன்னித் தொண்டர் ஆசிரியர் பெயர் பட்டியலில் முறைகேடுகள்.
உண்மையான தொண்டர் ஆசிரியர்கள் பலர் மீண்டும் பாதிப்பு!!!
யாழ்ப்பாணம் மற்றும் வன்னிப்பிரதேசங்களில் நீண்டகாலமாக தொண்டர் ஆசிரியர்களாக கடைமை புரிபவர்களுக்கு ஆசிரியர் நியமனம் வழங்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. அதனையொட்டி வலயக்கல்விப்பணிமனையால் வெளியிடப்பட்டுள்ள தொண்டர் ஆசிரியர் பெயர் பட்டியலில் பல குறைபாடுகள் காணப்படுவதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
குறிப்பாக பாடசாலைக்கு தொடர்பில்லாத பிற தொழில் புரிகின்ற பலரது பெயர்கள் குறித்த பட்டியலில் இடம்பெற்றுள்ளதாகவும் பலரை பாடசாலை அதிபர்களுக்கே யாரென்று தெரியாத நிலை காணப்படுகிறது. அத்துடன் பிற மாவட்டத்தைச்சேர்ந்த சிலரது பெயர்கள் குறித்த வலயப்பணிமனையால் வெளியிடப்பட்ட பட்டியலில் உள்ளடக்கப்பட்டிருக்கின்றது. இது தொடர்பில் கடும் அதிருப்தியை வெளியிட்டுள்ள பாதிக்கப்பட்ட தொண்டர் ஆசிரியர்கள் தங்களில் பலர் யுத்தம் நடைபெற்ற காலங்களிலிருந்து தொண்டர் ஆசிரியராக கடைமை புரிவதாகவும் கடந்தமுறை தொண்டர் ஆசிரியர் நியமனம் வழங்கப்பட்டபோதும் அரசியல் பழிவாங்கல் நிமித்தம் தாம் பாதிக்கப்பட்டதாகவும் தெரிவிக்கின்றனர்.
அது மாத்திரமன்றி தொண்டர் ஆசிரியர் பட்டியலில் பதிவுகளை பேணிக்கொண்டு பல வருடங்களாக பாடசாலைக்கு சமூகமளிக்காதவர்களும் இந்தப்பட்டியலில் அடங்குவது குறித்த சம காலத்தில் பாடசாலைகளில் கல்வி கற்பித்து வரும் தொண்டர் ஆசிரியர்கள் கவலை தெரிவிக்கின்றனர். இந்தவிடயம் தொடர்பில் பாராளுமன்ற உறுப்பினர்களும் மாண்புமிகு முதலமைச்சரும் தலையிட்டு நீதி கிடைக்க ஆவணம் செய்ய வேண்டும் என கேட்டுக்கொள்கின்றோம் என பாதிக்கப்பட்டவர்களால் கோரிக்கை விடப்பட்டுள்ளது.
நீண்டகாலமாக தொண்டர் ஆசிரியர்களாகச் சேவையாற்றியவர்கள் பலர் கடந்த 2013 ஆம் ஆண்டு வழங்க்கட்ட நியமனத்தின்போதும் ஈ.பி.டி.பி என்னும் அரசியல் கடசியினால் பழிவாங்கப்பட்டுப் பாதிக்கப்பட்டவர்கள் பலர் இப்போதும் உள்ளார்கள். இதற்கு எடுத்துக் காட்டாக முல்லைத்தீவு ஒட்டுசுட்டான் பகுதியைச் சேர்ந்த 13 வருடங்களாகத் தொண்டர் ஆசிரியராகச் சேவையாற்றிய ஓரு பெண்ணுக்கு ஈ.பி.டி.பி யின் அப்பகுதி அமைப்பாளரால் பெயர் வெட்டி நீக்கப்பட்டமையும் அத் தொண்டர் ஆசிரியையை தமது அலுவலகத்திற்கு அழைத்த ஈ.பி.டி.பி அமைப்பாளர் உனது தந்தையார் ஒரு ஊடகவியலாளர் அவர் எமது கட்சிக்கு எதிரான செய்திகளை எழுதுபவர் அவரின் மகளான உனக்கு நாம் எப்படி நியமனம் தருவது? நூன்தான் உனது பெயரை வெட்டி நீக்கினேன் என்று அப்போது இறுமாப்போடு கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.
மற்றும் கிளிநொச்சி மாவட்டத்தில் தொண்டர் ஆசிரியராகச் சேவையாற்றாமல் பஸ் நடத்துநர்களாகவும் ஈ.பி.டி.பி கட்சியின் சேவகர்களாகவும் இருந்த பலருக்கு நியமனங்கள் வழங்கப்பட்டுள்ளதுடன் எவ்வித கொடுப்பனவுகளுமற்ற நிலையில் நீண்ட காலமாக தொண்டர் ஆசிரியர்களாகச் சேவையாற்றியவர்கள் பலர் பாதிக்கப்பட்டுள்ளார்கள். இதற்கு பொறுப்புவாய்ந்த கல்வி அதிகாரிகளும் துணை நின்று உதவியுள்ளார்கள்.
தற்போதும் வழங்கப்படவுள்ள தொண்டர் ஆசிரியர் பெயர் பட்டியலில் உண்மையான தொண்டர் ஆசிரியர்களின் பெயர்கள் இடம்பெறாமல் தொண்டர் ஆசிரியர் அல்லாதவர்களின் பெயர்கள் இடம்பெறுவதற்கு பொறுப்பு வாய்ந்த அதிகாரிகளின் செயற்பாடேதான் காரணமாக இருப்பதாகக் கூறிக் கவலை தெரிவிக்கப்படுகின்றது
No comments
Post a Comment