அரசியல் தீர்வு ஒன்றை வழங்க அரசாங்கம் முன்வராது போனால்
தமிழர்கள் பிரிந்து செல்லும் உரிமைக்கான அங்கீகாரமாக அது அமையும்
வன்னேரிக்குளத்தில் சிறீதரன் எம்பி தெரிவிப்பு
கரைச்சிப்பிரதேச சபை முன்னாள் உறுப்பினர் டெனீஸ்வரன் அவர்களின் ஒதுக்கீட்டில் பிரதேச சபையால் அமைக்கப்பட்ட நூலக கட்டிடமும் புலம் பெயர்ந்து வாழ்ந்து மரணமான அமரர் நற்குணநாதன் புஸ்பாதேவியின் நினைவாக அவரின் பிள்ளைகளின் நிதிப்பங்களிப்புடன் அமைக்கப்பட்ட கணினி நூலக கற்கைக்கூடமும் திறந்து வைக்கும் நிகழ்வு ஐயனார்புரம் அ.த.க பாடசாலையினுடைய முதல்வரும் வன்னேரிக்குளம் உதயதாரகை சன சமூக நிலைய தலைவருமான நடேசலிங்கம் தலைமையில் இடம்பெற்றது. இந் நிகழ்வில் பிரதம விருந்தினராக கலந்துகொண்டு உரையாற்றியபோதே பாராளுமன்ற உறுப்பினர் சிறீதரன் மேற்படி தெரிவித்துள்ளார்
அவர் மேலும் தெரிவிக்கையில் அறிவுப்பாரம்பரியத்தின் அடையாளமாகவும் மனித சிந்தனைகளின் கிளர்ச்சி மையமாகவும் திகழ்கின்ற இந் நூலகத்தினை இத்தகைய பின்தங்கிய பிரதேசத்தில் திறந்து வைப்பதில் மகிழ்ச்சி அடைகின்றேன். இதற்குக் காரணமாக இருந்த புலம்பெயர்ந்த உறவுகளின் நல்லெண்ணங்களையும் எமது பிரதேச சபை உறுப்பினரின் சிந்தனையையும் நான் நினைத்துப் பார்க்கின்றேன்.
தேவைகள் எங்குள்ளதோ அங்கு தேடிச்சென்று உதவி புரிகின்ற செயல்கள் பயன் நிறைந்த சமூக பலன்களைத் தரக்கூடிய விடயமாக இருக்கின்றது. இத்தகைய அறிவுப் பொக்கிசங்களை கிராமங்களில் உருவாக்கி மக்களுடைய சிந்தனையை, சமூக மனப்பாங்கை வாசிப்பின் மூலம் ஆழவும் அகலவும் வளப்படுத்த வேண்டிய ; கடமை எங்கள் எல்லோருக்கும் உரியது.
அத்தகைய அறிவு முதிர்ச்சி கொண்ட ஒரு சமூகத்தினால்தான் தன் தாய்வழி மண்ணில் நிலைத்து நின்று பொருள் தேடவும் ஆட்சி புரியவும் முடியும். இன்று அரசாங்கம் ஓர் புதிய சூழ் நிலையில் காணப்படுகிறது. நல்லெண்ண அரசாங்கமாகவும் தமிழர்களின் அரசியல் பிரச்சினையை விளங்கிக் கொண்ட அரசாங்கமாகவும் அது தன்னை வெளிப்படுத்துகிறது.
சர்வதேச சமூகமும் தங்களுடைய அழுத்தங்களையும், கரிசனைகளையும் அக்கறைகளையும் காண்பிப்பதாக காணப்படுகின்றது. தீவிரவாத சிந்தனைகள் குறைந்து சிங்கள மக்களும் சமத்துவ வாழ்க்கை முறை பற்றியும், அதிகாரங்களைப் பகிர்ந்து வாழ்வது குறித்தும் சமயோசிதமான சிந்தனைகளில் காணப்படுகிறார்கள்.
வரலாறு கடுமையானது என்பதைப் புரிந்து கொண்ட பின்பும் மிதவாத எண்ணங்களோடு எங்களுடைய தலைவர்களும் கடுமையான முயற்சியொன்றை தீர்வு பெறுகின்ற விடயத்தில் மேற்கொள்கிறார்கள்.
ஆகவே எல்லோரும் பொருந்தி சிந்திக்கின்ற ஒத்திசைந்து செயற்படக்கூடிய காலமாக வரலாறு வாய்ப்பளித்திருக்கின்றது. இந்த வாய்ப்பை எல்லோரும் சரிவர பயன்படுத்த வேண்டும்.
ஆரசாங்கம் இந்த வாய்ப்பை தன்னுடைய மேலாதிக்க நலனுக்காக பயன்படுத்தி தமிழர் நலன்களை புறக்கணித்து தீர்வு ஒன்றை அடைய முடியாத சூழலை தோற்றுவிக்குமாக இருந்தால் தமிழர்கள் பிரிந்து செல்வதை அரசு அங்கீகரித்த செயலாகவே நாங்களும் உலக சமூகமும் பார்க்க வேண்டி வரும் எனவும் தெரிவித்தார்.
இந்நிகழ்வில் வடமாகாண சபை உறுப்பினர் சு.பசுபதிப்பிள்ளை மற்றும் கரைச்சிப்பிரதேச சபையின் செயலாளர் கம்சநாதன் கிராம அலுவலர் சுயந்தன் மாவட்ட தமிழ்த்தேசியக்கூட்டமைப்பின் அமைப்பாளர் வேழமாலிகிதன் முன்னாள் பிரதேச சபை உறுப்பினர் தயாபரன் அக்கராயன் பிரதேச தமிழ்த்தேசியக்கூட்டமைப்பின் அமைப்பாளர் கரன் சமூக மட்ட பிரதிநிதிகள் பொதுமக்கள் எனப்பலரும் கலந்து கொண்டனர்.
No comments
Post a Comment