Latest News

February 22, 2016

இனக்கருவறுப்பு வடிவங்கள் மாறலாம் ஆனால் அதன் இலக்குகள் மாறப் போவதில்லை.
by admin - 0

இனக்கருவறுப்பு வடிவங்கள் மாறலாம் ஆனால் அதன் இலக்குகள் மாறப் போவதில்லை.

இன்று காலை இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபன தேசிய சேவைக்கு திரு. எம்.ஏ.சுமந்திரன் அவர்கள் வழங்கிய நேர்காணலில், 

அண்மையில் ரெஜினோல்ட் குரே சிறி லங்கா ஜனாதிபதியால் வடக்கு மாகாண ஆளுநராக நியமிக்கப்பட்டது தமக்கு மகிழ்ச்சியான விடயம் எனவும், 

தாம் எதிர்பார்க்காமலே இந்த விடையம் நடந்தது தமக்கு ஒரு வாய்ப்பு என்றும். அவர் பத்து ஆண்டுகள் முதலமைச்சராக இருந்திருக்கிறார் என்றும், தமிழ்  உட்பட மூன்று மொழிப் பரிச்சயம் கொண்டவர் என்றும், 

அதிகாரப் பகிர்வுகள் வழங்கப்பட வேண்டுமென்ற நிலைப்பாட்டில் இருப்பவர் என்றும், கடந்த மகிந்த அரசில் 13 ஆவது திருத்த அதிகாரங்களில் குறைப்புச் செய்ய முயன்ற போது அதற்கு எதிர்ப்புத் தெரிவித்தவர் என்றும், 

புதிய அரசியல் அமைப்பு உருவாக்கப்படும் இந்தச் சூழலில்  ரெஜினோல்ட் குரே வடக்கு மாகாண ஆளுநராக நியமிக்கபட்டது தமிழருக்கு ஒரு வரப்பிரசாதம் எனவும் குறிப்பிட்டுள்ளார்.

ஆனால் வடக்கு மாகாண ஆளுநராக நியமிக்கப்பட்ட ரெஜினோல்ட் குரே,  அவருக்கு யாழ்ப்பாணத்தில் அளிக்கப்பட்ட வரவேற்பு நிகழ்வில் ஆற்றிய உரையில், 

''சமூகத்தில் உள்ள சாதிகளும், சமூகங்களும் ஒன்றுடன் ஒன்று கலக்கும் பொழுது பிறக்கின்ற பிள்ளைகள் ஒரே சாதியில், ஒரே இனத்தில் பிறக்கின்ற பிள்ளைகளைவிட சிறந்தவர்களாக இருப்பார்கள்''

 ''கலப்புத் திருமணம் என்பது கூடாதது அல்ல, கலத்தல் என்பது விஞ்ஞானம் மற்றும் தொழில்நுட்ப விளைவுகளின்படி நன்மைகளைத் தரவல்லது''

 ''இலங்கையின் முன்னோர்களான அரசர்களும்கூட கலப்பு திருமணங்களையே செய்திருந்தனர்'' 

''தனித்துவமான இனம் என்று எதனையும் கூறமுடியாது'' 

''இலங்கையை ஆண்ட அரசர்களில் அநேகர் இந்தியாவில் இருந்தே தமது மனைவியரை வரவழைத்திருந்தனர் எனவே சிங்கள இரத்தம் என்பது கலப்படம் கொண்டது''

''இங்கு வந்த முஸ்லிம்கள் அனைவரும் சிங்களப் பெண்களையே திருமணம் செய்து கொண்டார்கள் எனவே, நாங்கள் தனித்துவத்தைப் பற்றி சிந்திக்க முடியாது''

''எல்லோருமே கலப்பினத்தவர்களே, இங்கு வந்துள்ள நானும்கூட கலப்பு மனிதனே''

என்று கூறியுள்ளார். இதைத்தான் மனதில் வைத்துக் கொண்டு பண்டாரநாயக 1956 ஆம் ஆண்டு தனிச்சிங்களச் சட்டத்தைக் கொண்டு வந்தார்.

குறிப்பிடத்தக்க இனவாதியான முன்னாள் அமைச்சர் காமினி திசாநாயக கூட பல தடவைகள் கலப்புத் திருமணம் வேண்டுமெனக் கூறியுள்ளார். தனது மகனோ, மகளோ கூட அதைச் செய்வதை வரவேற்கிறேன் என்று கூறியிருந்தார்.

2009 ஆம் ஆண்டின் பின்னர் மகிந்த ராஜபக்ஸ கூட இந்தக் கருத்தையே கொண்டிருந்தார். படையினர் தமிழ் பெண்களைக் காதலித்த போது பெருமெடுப்பில் திருமணமும் செய்து வைத்தார் மற்றைய படையினரையும் ஊக்குவிக்கும் முகமாக அந்தச் செயல்பாடு அமைந்து இருந்தது.

சிங்களவர்களுடைய இனக்கருவறுப்பு  வடிவங்கள் கால சூழலுக்கு ஏற்றவாறு மாற்றமடையலாம் ஆனால் அவர்களுடைய மன நிலையிலோ, கொள்கைகள், இலக்குகளிலோ என்றுமே மாற்றம் வந்து விடப் போவதில்லை.

இலங்கையில் நீண்ட காலமாக நிலவி வருகின்ற இனப் பிரச்சினை நிரந்தரமாகத் தீர்க்கப்படுகிறதோ இல்லையோ ? நிரந்தரமாகத் தமிழினம் தீர்க்கப்படும். இதற்கு எம்மவர்களும் தம்மாலான முழுப் பங்களிப்பையும் செய்வார்கள் என நம்ப முடியும்.
« PREV
NEXT »

No comments