Latest News

February 21, 2016

தீர்வு விடயத்தில் ஜேர்மன் முறைமை குறித்து தீவிர அவதானம் செலுத்தியுள்ள அரசாங்கம்
by admin - 0

புதிய அரசியலமைப்பை உருவாக்குவதற்கான முயற்சிகள் தீவிரமடைந்துள்ள நிலையில் நாட்டின் தேசிய இனப்பிரச்சினைக்கு தீர்வை முன்வைக்கும் விடயத்தில் ஜேர்மனியிலுள்ள ஆட்சிமுறைமை தொடர் பில் அரசாங்கம் கவனம் செலுத்தி வருவதாக நம்பகரமாக தெரியவருகிறது.

குறிப்பாக அரசியலமைப்பில் காணப்படுகின்ற 13 ஆவது திருத்த சட்டத்திலுள்ள அதிகாரங்களை அவ்வாறே வைத்திருப்பது என்றும் அதனை அடிப்படையாகக் கொண்டு தீர்வுத் திட்டமொன்றுக்கு செல்வதெனவும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான அரசாங்கம்

தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

புதிய அரசியலமைப்பை உருவாக்குவதற்கு அரசாங்கம் நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ள நிலையில் தமிழ் தேசியக்கூட்டமைப்பானது தேசிய இனப்பிரச்சினைக்கு தீர்வாக சமஷ்டிமுறைமை கொண்டுவரப்படவேண்டுமென வலியுறுத்தப்படுகிறது.

ஆனால் அரசாங்கத்திலுள்ள முக்கியத் தரப்பினர்கள் சமஷ்டி முறைமையை ஏற்றுக்கொள்ள முடியாது எனவும் ஒற்றையாட்சி முறைமைக்குள்ளேயே தீர்வு வழங்கப்படுமெனவும் தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில் இது தொடர்பில் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தமிழ் தேசியக்கூட்டமைப்பிடம் கலந்துரையாடியுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது. இதன்போது புதிய அரசியலமைப்பின் ஊடாக வடக்கும், கிழக்கும் ஒருபோதும் இணைக்கப்படமாட்டாது. எனினும் பல்வேறு தரப்பினரின் கோரிக்கைக்கு அடிப்படையில் வடக்கும், கிழக்கும் ஒருங்கிணைப்புடன் செயற்படுவதற்கான ஏற்பாடுகள் முன்னெடுக்கப்படுமென பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தமிழ் தேசியக்கூட்டமைப்பின் பிரதிநிதிகளிடம் தெரிவித்துள்ளதாகவும் அறியமுடிகிறது.

இது இவ்வாறிருக்க இந்த அரசியலமைப்பு உருவாக்கம் மற்றும் தேசிய இனப்பிரச்சினை தீர்வு விவகாரம் தொடர்பில் ஆங்கில ஊடகமொன்றுக்கு கருத்து வெளியிட்டுள்ள பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தற்போது அரசியலமைப்பில் காணப்படுகின்ற 13 ஆவது திருத்த சட்டத்தின் ஏற்பாடுகளும் மாகாணசபை முறைமையின் ஏற்பாடுகளும் அவ்வாறே இருக்கும் என குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன் தற்போது இந்த தீர்வு விடயத்தில் அரசியலமைப்பில் என்ன இருக்கின்றதோ, அது தொடர்ந்தும் இருக்கும். எனினும் தீர்வு முறை என்று வரும்போது நாங்கள் ஜேர்மன் முறைமை தொடர்பில் ஆராய்வதற்கு தயாராக இருக்கின்றோம். அத்துடன் வேறுபல முறைமைகள் குறித்தும் ஆராய்வோம் என்று பிரதமர் ரணில் விக்கிரமசிங்க திட்டவட்டமான முறையில் கூறியுள்ளார்.
இதேவேளை தமிழ் தேசியக்கூட்டமைப்பானது சுவிட்ஸர்லாந்து, மற்றும் ஸ்கொட்லாந்து ஆகிய நாடுகளின் தீர்வு முறைமை தொடர்பில் தொடர்ச்சியாக ஆராய்ந்து வருகிறது. இந்த நாடுகளுக்கு தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பிரதிநிதிகள் விஜயம் செய்து தீர்வு முறைமைகள் குறித்து ஆராய்ந்த வருகிறது.
இது இவ்வாறிருக்க இது தொடர்பில் மேலும் கருத்து வெளியிட்டுள்ள பிரதமர் ரணில் விக்ரமசிங்க அரசியலமைப்பை உருவாக்குவதற்கு பாராளுமன்றத்தை அரசியலமைப்பு பேரவையாக மாற்றுவதற்கு நான் காத்திருக்கின்றேன். மக்களின் கருத்துக்கள் தொடர்பில் ஆராய்ந்து வருகின்ற நிபுணர் குழுவின் பரிந்துரைகள் கிடைத்ததும் இதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்படும். அதன் பின்னர் சகல அரசியல் கட்சிகளுடனும் பேச்சுவார்த்தை நடத்துவதற்கு நான் எதிர்பார்க்கின்றேன் என்று குறிப்பிட்டிருக்கின்றார்.
புதிய அரசியலமைப்பின் ஊடாக சகலரும் ஏற்றுக்கொள்ளக்கூடிய மற்றும் தமிழ்பேசும் மக்களின் அரசியல் அபிலாஷைகளை அங்கீகரிக்கின்ற அரசியல்தீர்வுத்திட்டம் முன்வைக்கப்படவேண்டுமென்று தெரிவிக்கப்படுகின்ற நிலையிலேயே பிரதமர் இவ்வாறு தெரிவித்திருக்கின்றார்.
தமிழ் தேசியக்கூட்டமைப்பானது இணைந்த வடக்கிழக்கில் சமஷ்டி முறைமையின் கீழ் அதியுச்ச அதிகாரப்பகிர்வுடன் அரசியல்தீர்வுத்திட்டம் புதிய அரசியலமைப்பில் உள்வாங்கப்படவேண்டுமென வலியுறுத்திவருகின்றது.
அரசாங்கம் இது தொடர்பில் இதுவரை இறுதி முடிவை எடுக்காத நிலையில் அரசாங்கத்திற்கும் தமிழ் தேசியக்கூட்டமைப்பிற்குமிடையில் விரைவில் பேச்சுவார்த்தை நடைபெறுமென எதிர்பார்க்கப்படுகின்றது.

அந்த வகையில் புதிய அரசியலமைப்பை உருவாக்கும் நோக்கில் பாராளுமன்றத்தை அரசியலமைப்புப் பேரவையாக மாற்றப்படுவதற்கான பிரேரணை பாராளுமன்றத்தில் ஏற்கனவே சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இவ்வாரம் இந்த விடயம் தொடர்பில் பாராளுமன்றத்தில் விவாதம் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

இது இவ்வாறிருக்க அரசாங்கத்தினால் நியமிக்கப்பட்டுள்ள புதிய அரசியலமைப்பு குறித்த கருத்துக்களையும் யோசனைகளையும் பெறும் நிபுணர் குழுவானது நாடளாவிய ரீதியில் தமது அமர்வுகளை நடத்தி வருகின்றது. இதன்போது பல்வேறு தரப்பினரும் மிகவும் பரந்துபட்ட ரீதியிலான யோசனைகளையும் கருத்துக்களையும் முன்வைத்து வருகின்றனர். அந்த வகையில் விரைவில் இந்த நிபுணர் குழுவானது தமது பரிந்துரைகளை பிரதமர் அலுவலகத்திற்கு முன்வைக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது
« PREV
NEXT »

No comments