காணாமல்போனோர் தொடர்பில் உண்மைகளை கண்டறியும் தேடுதலில் இராணுவத்தின் ஆதாரங்களையும் சேர்த்துக்கொள்வது சாதகமாக அமையும். இறுதி யுத்தத்தில் சரணடைந்தோர் தொடர்பில் இராணுவம் வசமுள்ள
தகவல்களையும் பெறுவது விசாரணை செயற்பாடுகளுக்கு வலுச்சேர்ப்பதாக அமையும் என்று அரசாங்கம் தெரிவித்துள்ளது.
விடுதலைப்புலிகள் பயங்கரவாதிகளுடன் தொடர்புகளை வைத்திருந்தவர்கள் மற்றும் அவர்களுக்கு ஆயுத, பண உதவிகளை வழங்கியவர்கள் தேசத்துரோகிகள் எனவும் அரசாங்கம் குறிப்பிட்டது.
விடுதலைப்புலிகள் இயக்கத்தினருக்கு பண உதவிகளையும், ஆயுத உதவிகளையும் வழங்கியோர் தொடர்பில் விரைவில் சரத் பொன்சேகா தகவல்களை வெளியிடுவார் என ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சி தெரிவித்துள்ளது.
அத்துடன் 58ஆவது படைத்தளத்தின் சரணடைந்தவர்கள் தொடர்பில் இராணுவம் வசம் உள்ள ஆதாரங்களை நீதிமன்றில் முன்வைக்கவேண்டும் என்று தீர்ப்பும் வழங்கப்பட்டுள்ள நிலையில் அரசாங்கத்தின் நிலைப்பாட்டை வினவிய போதே அமைச்சரவை பேச்சாளர் ராஜித சேனாரத்ன மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
இது தொடர்பில் அவர் மேலும் கூறுகையில்,
இறுதி யுத்தத்தில் இராணுவம் வசம் சரணடைந்த பொதுமக்கள் தொடர்பில் உள்ள ஆவணங்களை பரிசீலனை செய்வது சிறந்த விடயமாகும். உண்மைகளை கண்டறிய இது நல்லதொரு ஆதாரமாகும். குறிப்பாக காணாமல் போனதாகக் கூறப்படும் பொதுமக்கள் தொடர்பில் உண்மைகளை கண்டறியும் ஆணைக்குழுவின் செயற்பாடுகள் துரிதப்படுத்தப்பட்டுள்ளது. அத்துடன் ஆணைக்குழுவின் கால எல்லையும் நீட்டிக்கப்பட்டுள்ளது.
இந்த காலப்பகுதியில் காணாமல்போனதாக கூறப்படும் பொதுமக்கள் தொடர்பில் மேலும் ஆதாரங்களை திரட்ட வாய்ப்புகள் உள்ளன. இராணுவம் வசமுள்ள ஆதாரங்களை முன்வைப்பதன் மூலம் இந்த செயற்பாடு இன்னும் இலகுவாக்கப்படும்.
போர்க்குற்ற விசாரணைகள் தொடர்பில் நீதிமன்ற சுயாதீன செயற்பாடுகளுக்கென விசேட சட்டமூலம் ஒன்றையும் இந்த ஆண்டு நடுப்பகுதிக்குள் கொண்டுவர தீர்மானித்துள்ளோம். ஆகவே போர்க்குற்ற விசாரணைகள் தொடர்பில் அரசாங்கம் தெளிவாக தமது நகர்வுகளை முன்னெடுத்து வருகின்றது. இந்த நிலையில் எமக்கு கிடைக்கும் ஆதாரங்களை பூரணமாக முன்வைப்பதன் மூலமாக உண்மைகளை கண்டறிய வாய்ப்பாக அமையும்.
மேலும் யுத்த காலகட்டத்தில் நடைபெற்ற மனித உரிமை மீறல்கள் தொடர்பில் அரசாங்கம் அதிக அக்கறை செலுத்தி வருகின்றது. சர்வதேச ஒத்துழைப்பும் இந்த விடயத்தில் கிடைத்து வருகின்றது. எனவே இந்த விடயத்தில் காலம் கடத்தப்படாது வெகு விரைவில் பொதுமக்களின் பிரச்சினைகளுக்கும் ஏனைய பிரதான சிக்கல்களுக்கும் தீர்வை பெற்றுத்தர முடியும்.
அதேபோல் விடுதலைப் புலி பயங்கரவாதிகளுக்கு நிதி வழங்கியதாகவும், அவர்களுக்கு ஆயுத உதவிகளை வழங்கியதாகவும் எழுந்துள்ள சில குற்றச்சாட்டுகள் தொடர்பில் அரசாங்கம் தீவிரமான விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றது. எவ்வாறு இருப்பினும் புலிகளுக்கு உதவி செய்துகொண்டு அரசாங்கத்தில் எவரும் செயற்பட்டிருந்தால் அது தேசத்துரோக செயற்பாடாகும். அவ்வாறான தேசத்துரோக செயற்பாடுகள் கண்டறியப்படும் நிலையில் அவர்கள் மீதான கடுமையான நடவைக்கை எடுக்கப்படும் என்றார்.
No comments
Post a Comment