முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியின் கொலையுடன் தொடர்புடையவர் என்ற குற்றச்சாட்டின் பேரில் கைது செய்யப்பட்டு சுமார் 25 ஆண்டுகளாக சிறையில் இருந்து வரும் பேரறிவாளன், முதல் முறையாக பிணை வழங்ககோரி விண்ணப்பித்துள்ளார்.
கடந்த 25 ஆண்டு காலப்பகுதியில் ஒரு முறை கூட பிணை வழங்க கோரி பேரறிவாளன் விண்ணப்பிக்காமல் இருந்தார். ‘நான் குற்றம் செய்யவில்லை, வெளி வந்தால் விடுதலையாகி மட்டுமே வருவேன்’ என்பதில் அவர் உறுதியாக இருந்து வந்தார்.
இந்த நிலையில் அவர் அண்மையில் சிறுநீரக தொற்று நோய் பிரச்சினைக்காக வேலூர் சிறையிலிருந்து வெளியே, சென்னை மருத்துவமனைக்கு அவர் அழைத்துச் செல்லப்பட்டார். அந்த பயணத்தில் தான் வெளி உலகை பார்க்க முடிந்தது என பரவசமாக குறிப்பிட்டிருந்தார்.
முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியின் கொலையுடன் தொடர்புடையவர் என்ற குற்றச்சாட்டின் பேரில் கைது செய்யப்பட்டுள்ள எழுவர் விடுதலை தொடர்பிலான வழக்கு விசாரணையின் போது, ‘மத்திய அரசு விசாரணை செய்த வழக்கு என்பதால் மாநில அரசு மட்டும் விடுதலை செய்வது குறித்து முடிவெடுத்து விடமுடியாது’ என கூறப்பட்டிருப்பது சிக்கலை ஏற்படுத்தியுள்ளது.
இவ்வாறானதொரு சூழ்நிலையிலேயே பேரறிவாளன் பிணை கோரியுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது. இதுதொடர்பில் கருத்து வெளியிட்டுள்ள பேரறிவாளனின் தாயார் அற்புதம்மாள், ‘வந்தால் விடுதலையாகிதான் வெளியே வருவேன் என 25 வருடமாக பிடிவாதமாக பிணைக்கு மறுப்பு தெரிவித்து வந்தான்.
நாங்களும் விடுதலை இந்த ஆண்டு கிடைத்துவிடும், இப்போது கிடைக்கும், அப்போது கிடைக்கும் என பார்த்து பார்த்து பல ஆண்டுகள் கடந்துவிட்டது. அவனோட அப்பா, அறிவு இந்த வீட்டுக்கு எப்ப வருவான்னு காத்திருக்கார். அதை நினைத்தே மன அழுத்தம் அதிகமாகி அவருக்கு உடல் நிலை மோசமாகிவிட்டது.
அதனால் கட்டாயப்படுத்தி பிணை வழங்ககோரி விண்ணப்பிக்குமாறு கேட்டுக் கொண்டோம். இவ்வளவு வருஷமும் எனது மகன் உறுதியா இருந்தான். அதை கெடுத்துட்டோமேன்னு வருத்தமாவும் இருக்கு. அவனை வீட்டுக்கு கூட்டி வந்து பார்க்கணும்னு ஒரு தாயான எனக்கு ஆசையாகவுள்ளது என தெரிவித்துள்ளார்.
No comments
Post a Comment