Latest News

February 08, 2016

இறந்த மனைவியை பார்க்க முடியாமல் தவிக்கும் மதுரை முத்து
by admin - 0

பிரபல நகைச்சுவையாளர் மதுரை முத்து மனைவி விபத்தில் பலி; அம்மை நோய் காரணமாக அமெரிக்காவிலிருந்து திரும்ப முடியாத நிலையில் மதுரை முத்து

தமிழகத்தின் பிரபல நகைச்சுவையாளர் மதுரை முத்துவின் மனைவி வையம்மாள் வாகன விபத்தொன்றில் கடந்த வாரம் உயிரிழந்துள்ளார். எனினும் தற்போது அமெரிக்காவிலுள்ள மதுரை முத்து, அம்மை நோய் காரணமாக உடனடியாக இந்தியாவுக்குத் திரும்ப முடியாத நிலையில் தவிக்கிறார்.

மதுரை முத்து, மதுரை திருநகர் அருகே உள்ள தனக்கன் குளத்தில் வசித்து வருபவர். பிரபல நகைச்சுவையாளரான இவர், ‘அசத்தப்போவது யாரு’ என்ற பெயரில் தொலைக்காட்சியில் நிகழ்ச்சி ஒன்றை நடத்தி வருகிறார்.

1200க்கு மேற்பட்ட நிகழ்ச்சிகளை நடத்தியுள்ள மதுரை முத்து, வையம்மாள் (32). தம்பதிகளுக்கு இரு பிள்ளைகள் உள்ளனர். கடந்த 4 மாதங்களுக்கு முன்புதான் மதுரை முத்து புது வீடு கட்டி கிரகப்பிரவேசம் செய்தார்.

இந் நிலையில், காரைக்குடி அருகே உள்ள பிள்ளையார்பட்டி கோயிலுக்கு வையம்மாள் வியாழக்கிழமை காலை காரில் சென்றுள்ளார். காரை பாண்டி என்பவர் ஓட்டிச் சென்றுள்ளார்.

திருப்பத்தூர் அருகே கோட்டையூர் நெடுஞ்சாலையில் கார் ஒன்றில் சென்று கொண்டிருந்தபோது, அக் காரின் இடது பக்க டயர் வெடித்துள்ளது. இதில் கார், டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையோரத்தில் இருந்த மரத்தில் பயங்கர வேகத்தில் மோதியது.

இதில், வையம்மாள் தலையில் பலத்த காயம் ஏற்பட்டு சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். சாரதியும் பலத்த காயம் அடைந்து ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

மனைவி இறந்த துயரத்திலுள்ள மதுரை முத்துவுக்கு மற்றொரு நெருக்கடியும் ஏற்பட்டுள்ளது. இந்த விபத்து ஏற்பட்ட போது மதுரை முத்து கலை நிகழ்ச்சியொன்றுக்காக அமெரிக்காவுக்குச் சென்றிருந்தார்.

மனைவி இறந்த செய்தி அறிந்ததும் தனது நிகழ்ச்சிகளை ரத்துச்செய்துவிட்டு இந்தியாவுக்குத் திரும்புவதற்கு மதுரை முத்து தீர்மானித்தார். ஆனால், அது உடனடியாக சாத்தியமாகவில்லை. அங்கு அவருக்கு அம்மை நோய் ஏற்பட்டுள்ளது.

இதனால் மதுரை முத்து உடனடியாக நாடு திரும்ப முடியாமல் சிக்கலில் உள்ளார். ஏனெனில், அமெரிக்க விதிகளின்படி அம்மை நோயுடன் விமானத்தில் பயணம் செய்ய அனுமதி வழங்க முடியாது என அமெரிக்க விமான நிலைய அதிகாரிகள் தெரிவித்து விட்டனர்.

இந் நிலையில், அமெரிக்காவில் உள்ள இந்திய தூதரகம் மூலம் மதுரை முத்துவுக்கு அனுமதி பெற்றுக்கொடுப்பதற்கான ஏற்பாடுகள் நடைபெற்று வருவதாக தெரிவிக்கப்படுகிறது.

அம்மை நோய் குணமான பின்னர் அவர் இந்தியாவுக்குத் திரும்புவார் என எதிர்பார்க்கப்படுகிறது. மனைவி இறந்த சோகத்தில் இருக்கும் மதுரை முத்து, மனைவியை உடனடியாக பார்க்க முடியாமல் தவிக்கின்றமை அவரின் ரசிகர்களுக்கு மேலும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
« PREV
NEXT »

No comments