Latest News

February 20, 2016

போசாக்கு நிலையின் பின்னடைவு கண்டு அதிர்ச்சியடைகின்றேன்- கிளிநொச்சி மாவட்ட அரசாங்க அதிபர் சுந்தரம் அருமைநாயகம்.
by admin - 0

போசாக்கு நிலையின் பின்னடைவு கண்டு அதிர்ச்சியடைகின்றேன்- கிளிநொச்சி மாவட்ட அரசாங்க அதிபர் சுந்தரம் அருமைநாயகம்.

கிளிநொச்சி மாவட்டத்தின் போசாக்கு நிலையின் பின்னடைவைக் கண்டு அதிர்ச்சியடைகின்றேன் என கிளிநொச்சி மாவட்ட அரசாங்க அதிபர் சுந்தரம் அருமைநாயகம் கிளிநொச்சியில் தெரிவித்தார்.

கிராமத்திற்குக் கிராமம் என்னும் ஒரு மில்லியன் ரூபா அபிவிருத்தித் திட்டத்தின் கீழ் கிளிநொச்சி திருவையாறு படித்த வாலிபர் திட்டக் கிராமத்தில் 5 இலட்சம் ரூபா செலவில் அமைக்கப்பட்ட சிறுவர் விளையாட்டு முற்றத்தினைத் திறந்து வைத்து மக்கள் மத்தியில் உரையாற்றும்போதே மேற்படி கருத்துக்களைத் அரசாங்க அதிபர் தெரிவித்திருந்தார். 

மேற்படி சிறுவர் விளையாட்டு முற்றத் திறப்பு விழா திருவையாறு கிராம அபிவிருத்திச் சங்கத் தலைவர் ச.பொன்னுத்துரை தலைமையில் நேற்றுக் காலை 10.00 மணிக்கு நடைபெற்றது. இந்நிகழ்வில் பிரதம விருந்தினராகக் கலந்துகொண்ட கிளிநொச்சி மாவட்ட அரசாங்க அதிபர் சுந்தரம் அருமைநாயகம் தனது பிரதம விருந்தினர் உரையின்போது மேற்படி கருத்துக்களைத் தெரிவித்திருந்தார்.

அவர் தனது உரையில் மேலும் குறிப்பிடுகையில் 'கிளிநொச்சி என்னும் பெயர் இன்று எல்லா மட்டங்களிலும் பேசப்படுகின்ற ஒன்று. யுத்தத்திற்குப் பின்னர் இந்த மாவட்டத்தினுடைய அபிவிருத்தி தொடர்பில் மேலெழுந்த வாரியான சில முன்னேற்றங்கள் நடைபெற்றிருக்கின்ற போதிலும் உள்ளக ரீதியான அபிவிருத்தி ஏற்படாமல் உள்ளமை சுட்டிக்காட்டப்பட வேண்டிய ஒன்றாகும். விசேடமாக 3000 கிலோ மீற்றருக்கும் மேற்பட்ட வீதிகள் அபிவிருத்தி செய்யப்பட வேண்டியுள்ளன.

யுத்தப் பாதிப்புற்றோருக்கான கொடுப்பனவுகள்கூட கடந்த காலத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு வழங்கப்படவில்லை. தற்போது எமது செயலகத்தில் பாதிப்புற்றோருக்கான கோவைகள் அனைத்தும் சரிபார்க்கப்பட்டு அவர்களுக்கான நட்டஈட்டை வழங்குவதற்கான தயார் நிலையை அடைந்திருக்கிறோம். நீங்கள் இழந்தவற்றோடு ஒப்பிடுகின்றபோது இழப்பீடுகள் போதுமானதாக இல்லை.

இந்த மாவட்டம் நெல் உற்பத்தி, பாலுற்பத்தி, கடலுணவுற்பத்தி, உபவுணவுப் பயிர்ச் செய்கை, மரக்கறிச் செய்கை என்பவற்றில் போதிய முன்னேற்ம் கண்டுள்ளது. ஆனால் இலங்கையின் போசன ஊட்ட மாவட்டங்களில் நாம் இறுதி நிலையில் இருக்கின்றோம். இந்த நிலை ஏன் எமக்கு ஏற்பட்டது என ஆராய்கின்றபொழுது, உற்பத்திப் பொருட்களை இம்மாவட்ட மக்கள் நுகர்வதைவிட ஏற்றுமதியாளர்கள் அள்ளிச் செல்கின்ற நிலையே காணப்படுகின்றது. 

வறுமை காரணமாக போசனை ஊட்டப் பொருட்களை விற்று விட்டு மக்கள் நலிவடைந்தவர்களாக இருக்கின்றார்கள். இந்நிலையைக் கட்டுப்படுத்துவதற்கு மாவட்டத்திலுள்ள மக்களின் நுகர்விற்கு எஞ்சியவற்றினை விற்பனை செய்வதற்கு மாவட்ட ஏற்றுமதிகள் மீதான ஒழுங்கமைக்கப்பட்ட கட்டுப்பாடுகளை விதிப்பதற்கு நாம் முடிவு செய்துள்ளோம்.

களஞ்சியங்களை அமைக்கவும் போசனை ஊட்ட உற்பத்திகளை மக்கள் நுகரவும் வாய்ப்பளிக்கப்பட வேண்டும். குறிப்பாக பாலுற்பத்திப் பொருட்கள் இந்த மாவட்டத்திலேயே விற்பனை செய்ய நடவடிக்கை எடுக்கப்படும்' என்றார்.

இந்நிகழ்வில் பாராளுமன்ற உறுப்பினர் சி.சிறீதரன் சார்பாக தமிழ் தேசியக் கூட்டமைப்பின் கிளிநொச்சி மாவட்ட அமைப்பளாளரும் கொள்கை பரப்புச் செயலாளருமான அ.வேழமாலிகிதன், திருவையாறு கிராம அலுவலர், அபிவிருத்தி உத்தியோகத்தர்கள், கிராம அபிவிருத்திச் சங்கத்தினர், மக்கள் எனப் பலரும் கலந்துகொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கதாகும்
« PREV
NEXT »

No comments