அரசியலமைப்பின் 13 ஆவது திருத்தச் சட்டத்தின் ஊடாக வழங்கப்பட்டுள்ள பொலிஸ் மற்றும் காணி அதிகாரங்களை மாகாண சபைகளுக்கு வழங்குவதன் ஊடாகவே தமிழ் பேசும் மக்களின் இனப்பிரச்சினைக்கு நியாயமான அரசியல் தீர்வைக்காண முடியும். புதிய அரசியலமைப்பின் ஊடாக இதனை உறுதிப்படுத்தவேண்டியது அவசியமாகும் என்று சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் முக்கியஸ்தரும் இராஜாங்க அமைச்சருமான டிலான் பெரேரா தெரிவித் தார்.
மஹிந்த அணியினர் புதிய அரசியல் கட்சியை ஆரம்பிக்கப்போவதாக பூச்சாண்டி காட்டிக்கொண்டிருக்காமல் விரைவாக ஆரம்பிக்கவேண்டும். நாங்களும் எமது மைத்திரி தரப்பை பலப்படுத்த தயாராகவே இருக்கின்றோம் எனவும் அவர் குறிப்பிட்டார்.
அரசியல் தீர்வு விவகாரம் மற்றும் புதிய அரசியல் கட்சி போன்றன தொடர்பாக விபரிக்கையிலேயே அமைச்சர் டிலான் பெரேரா மேற்கண்டவாறு கூறினார்.
அமைச்சர் இந்த விடயம் குறித்து மேலும் குறிப்பிடுகையில்
தேசிய அரசாங்கத்தினால் முன்னெடுக்கப்படவுள்ள புதிய அரசியலமைப்பு அல்லது அரசியலமைப்பு திருத்தங்களினூடாக நாட்டின் தமிழ் பேசும் மக்களின் தேசிய பிரச்சினைக்கு அரசியல் தீர்வு காணப்பட வேண்டும். அதாவது தற்போதைய அரசியலமைப்பில் காணப்படுகின்ற 13 ஆவது திருத்த சட்டத்தை அடிப்படையாகக் கொண்ட தீர்வு திட்டம் ஒன்று முன்வைக்கப்பட வேண்டியது அவசியமாகும்.
13 ஆவது திருத்த சட்டத்தினூடாக உறுதியளிக்கப்பட்டுள்ள பொலிஸ் மற்றும் காணி அதிகாரங்கள் மாகாணங்களுக்கு வழங்கப்பட வேண்டும் என்ற நிலைப்பாட்டிலேயே நான் இருக்கின்றேன். இதற்கு பின்னரும் பொலிஸ் மற்றும் காணி அதிகாரங்களை வழங்க முடியாது என நாம் கூறிக் கொண்டிருப்பதில் அர்த்தம் இல்லை.
பொலிஸ் அதிகாரம் என்றதும் ஏன் தென்னிலங்கை மக்கள் அச்சப்படுகின்றனர் என்பதே புரியவில்லை. காரணம் பொலிஸார் என்றதும் ஆயுதங்களை எடுத்துக் கொண்டு செல்பவர்கள் என கருதுகின்றனர். ஆனால் அது அப்படியல்ல. பொலிஸார் என்பவர்கள் சமூக பாதுகாப்பையும், மக்களின் பாதுகாப்பையும் உறுதிப்படுத்துவதுடன் சட்டம் ஒழுங்கை நிலைநாட்டும் துறையினர் ஆவர். எனவே இவ்வாறான பொலிஸ் அதிகாரங்களை மாகாணங்களுக்கு வழங்குவதில் எந்த பிரச்சினையும் ஏற்படாது.
பொலிஸ் மற்றும் காணி அதிகாரங்களை மாகாணங்களுக்கு வழங்குவதற்கு புதிய அரசியலமைப்பினுடாக நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். இதற்கு பின்னரும் இந்த விடயத்தில் தாமதங்களை ஏற்படுத்திக் கொண்டிருக்க கூடாது.
பொலிஸ் அதிகாரம் வழங்கப்படுகிறது என்றதும் நாம் அச்சமடையக் கூடாது. பொலிஸ் துறை என்பது சிவில் பாதுகாப்பு துறையாகும். நான் எனது சிறு வயதில் எனது தந்தையுடன் அக்காலத்தில் பொலிஸ் நிலையங்களுக்கு சென்றிருக்கின்றேன். அப்போது பொலிஸ் நிலையங்களில் துப்பாக்கிகள் மேலே பெட்டிகளில் போட்டு பூட்டிவைக்கப்பட்டிருக்கும். தேவை ஏற்பட்டால் மட்டுமே அவை வெ ளியில் எடுக்கப்படும்.
எனவே பொலிஸ் அதிகாரம் என்றதும் சிறு பிள்ளைகள் பூச்சாண்டிக்குப் பயப்படுவது போல் நாம் அச்சம் கொள்வதில் அர்த்தம் இல்லை. எனவே இந்த அதிகாரங்களை வழங்குவதற்கு நாம் இதற்கு பின்னரும் பின் நிற்க கூடாது.
ஆனால் மாகாணங்களுக்கு காணி மற்றும் பொலிஸ் அதிகாரங்களை வழங்கும் போது பிரச்சினைகள் ஏற்படலாம். அதனை இனவாத சக்திகள் தடுக்க முற்படலாம். ஆனால் அவற்றை நாம் எதிர்கொண்டு சவால்களை முறியடித்து பிரச்சினையை தீர்ப்பதற்கு அர்ப்பணிப்புடன் செயற்பாடுகளை முன்னெடுக்கவேண்டியது அவசியமாகும்.
இது இவ்வாறிருக்க தற்போது புதிய அரசியலமைப்பை உருவாக்குவதா அல்லது தற்போதைய அரசியலமைப்பை முழுமையாக திருத்தி அமைப்பதா என்பது தொடர்பில் இது வரை தீர்மானிக்கப்படவில்லை. கலந்துரையாடல்களின் இறுதியிலேயே இது தொடர்பான தீர்மானம் எடுக்கப்படும்.
ஆனால் என்னைப் பொறுத்தவரையில் தமிழ் பேசும் மக்களுக்கு நியாயமான அரசியல் தீர்வு கிடைக்க வேண்டுமாயின் தற்போதைய அரசியல் அமைப்பை திருத்தி அமைப்பதே சிறந்ததாக அமையும். காரணம் தற்போது நிறைவேற்றதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறைமையில் காணப்படுகின்ற சில அதிகாரங்களை நாங்கள் குறைத்திருக்கிறோம்.
எவ்வாறெனினும் நேரடியான முறையில் மக்களால் தெரிவு செய்யப்படுகின்ற ஜனாதிபதி முறைமை இருந்தால் மட்டுமே அது தமிழ் பேசும் மக்களுக்கு சாதகமாக இருக்கும். எனவே நிறைவேற்றதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறைமை ஒரு சில அதிகாரங்களுடன் நீடிப்பது தமிழ் பேசும் மக்களைப் பொறுத்தவரையில் சாதகமாக இருக்கும்.
தற்போது இந்த இனப்பி்ரச்சினைக்கு ஒரு அரசியல் தீர்வை காண்பதற்கு மிக பெரிய சந்தர்ப்பம் கிடைத்துள்ளது. அந்த சந்தர்ப்பத்தில் நாங்கள் உச்சபட்சமான பயனைப் பெற்றுக் கொள்ள வேண்டியது மிகவும் அவசியமாகும். குறிப்பாக இரண்டு பிரதான கட்சிகளும் இன்று இணைந்து கருத்தொருமைவாத தேசிய அரசாங்கத்தை உருவாக்கியுள்ளன. எனவே இது போன்ற சந்தர்ப்பம் இனி கனிந்து வருமா என்பது சந்தேகமாகும்.
எனவே தற்போது கிடைத்திருக்கின்ற இந்த சந்தர்ப்பத்தில் உரிய பயனைப் பெற்றுக் கொள்ள நாம் முயற்சிக்க வேண்டும். அமெரிக்காவில் வரலாற்றில் முதல் தடவையாக கறுப்பின ஜனாதிபதி ஒருவர் பதவிக்கு வந்திருந்தார். அதேபோன்று இந்தியாவில் மிகவும் சிறு அளவிலான சனத்தொகையை கொண்ட ஒருவர் அந் நாட்டின் பிரதமராக வந்திருந்தார். அந்த வகையில் எமது நாட்டிலும் தற்போது நல்லிணக்கத்தை வெ ளிக்காட்டும் சமிக்ஞைகள் வெ ளிப்பட ஆரம்பித்துள்ளன.
தேசிய சுதந்திர தினத்தன்று தமிழில் தேசிய கீதத்தை பாடுவதற்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன எடுத்த முடிவு மிக பெரியதொரு படிக்கல்லாக அமைந்துள்ளது. இது துணிச்சல் மிக்க முடிவாகும். இதற்காக அவரை பூ வைத்து கும்பிடலாம். தேசிய கீதம் தமிழில் பாடப்பட்ட அந்த தருணத்தை பார்த்தபோது எனது கண்களை கண்ணீர் துளிகள் பனித்தன. அது அந்தளவிற்கு உணர்வுபூர்வமாண தருணமாக அமைந்தது.
எனவே தற்போது நாட்டில் இனவாதம் நிராகரிக்கப்பட்டு நல்லெண்ண செயற்பாடுகள் இடம்பெற்று வருகின்றன. எனவே இனப்பிரச்சினைக்கு நிரந்தர அரசியல் தீர்வை காண்பதற்கு இப்போது தான் சிறந்த சந்தர்ப்பம் கிடைத்துள்ளது. அந்த சந்தர்ப்பத்தை நழுவ விடாமல் பயன்படுத்திக் கொள்ள வேண்டியது எமது பொறுப்பாகும்.
தமிழ் பேசும் மக்களின் பிரச்சினைகளை தீர்ப்பதில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மிகப்பெரிய வேலைத்திட்டத்தை கையில் எடுத்துள்ளார். தமிழ் பேசும் மக்களும் எமது நாட்டு மக்கள். அவர்கள் எமது சகோதரர்கள். எனவே நாம் விரைவாக காணப்படுகின்ற பிரச்சினைகளை தீர்க்க நடவடிக்கை எடுக்கவேண்டியது அவசியமாகும். குறிப்பாக 13 ஆவது திருத்தத்தின் அடிப்படையிலான தீர்வுத்திட்டம் ஒன்றை முன்வைப்பதற்கு தற்போது சிறந்த சந்தர்ப்பம் கிடைத்துள்ளது. அதனைவிட்டுவிடக்கூடாது.
கேள்வி மஹிந்த தரப்பினர் புதிய கட்சி ஒன்றை ஆரம்பிப்பதாக தெரிவித்துள்ளனரே?
பதில் இனவாத சக்திகள் இணைந்து புதிய அரசியல் கட்சியை ஆரம்பிக்கவுள்ளதாக தெரிவித்துள்ளன. இந்த இனவாத சக்திகளின் காரணமாகவே மஹிந்த ராஜபக்ஷ தோல்வியடைந்தார் என்பதனை மறந்துவிடக்கூடாது. எனவே தற்போதும் இந்த இனவாத சக்திகளுடன் மஹிந்த ராஜபக்ஷ இணைந்து கொண்டால் அதற்கு பின்னர் நாம் எதனையும் கூற முடியாது.
அது அவரின் தீர்மானமாக இருக்கும். ஆனால் இங்கு ஒரு விடயத்தை குறிப்பிட்டுக்கூறவேண்டும். அதாவது தற்போதைய நிலைமையில் புதிய கட்சியை ஆரம்பிப்பதானது ஐக்கிய தேசிய கட்சியின் கொந்தராத்தை நிறைவேற்றுவதாகவே அமையும் என்பதனை மறந்துவிடக்கூடாது.
ஆனால் கட்சியை ஆரம்பிப்பதாக கூறுகின்றவர்கள் வெறுமனே பூச்சாண்டி காட்டிக்கொண்டிருக்காமல் அதனை விரைவில் ஆரம்பிக்கவேண்டியது அவசியமாகும். ஆனால் ஒரு விடயத்தை மிகவும் தெ ளிவாக கூறுகின்றோம்.
அதாவது இதன் பின்னர் சிறிலங்கா சுதந்திரக் கட்சிக்குள் இனவாதம் இருக்காது. அதற்கு ஒருபோதும் இடமளிக்கவுமாட்டோம். விசேடமாக தற்போது இனவாதம் பேசிக்கொண்டிருக்கும் எவருக்கும் எமது கட்சியில் இடம் கிடைக்காது என்பதனை ஞாபகத்தில் வைத்துக்கொள்ளவேண்டும்.
கேள்வி தேசிய அரசாங்கத்தில் மகிழ்ச்சியுடன் இருக்கின்றீர்களா?
பதில் நாட்டில் நீண்டகாலமாக நிலைத்திருக்கும் தமிழ் பேசும் மக்களின் பி்ரச்சினைகளை தீர்ப்பதற்கு தற்போது சிறந்த சந்தர்ப்பம் கிடைத்துள்ள நிலையில் அதற்காக நாங்கள் எவ்வாறான அநீதியையும் தாங்கிக்கொள்ளவே தயாராக இருக்கின்றோம். இந்த அரசியல் தீர்வு பிரச்சினை இழுத்தடிக்கப்பட்டது போதும். இதற்கு பின்னரும் இதனை நீடிக்கவிடவேண்டாம்.
அடுத்த பாராளுமன்றத்துக்கு இந்தப் பிரச்சினையை கொண்டுசெல்லக்கூடாது. எனவே தற்போதைய காலத்துக்குள்ளேயே இந்தப் பிரச்சினையை தீர்ப்பதற்கு நடவடிக்கை எடுத்தாகவேண்டும். அடுத்த சந்ததியினருக்கு இந்தப் பி்ரச்சினையை விட்டுவைக்கக்கூடாது. அதற்கு கிடைத்துள்ள இந்த சந்தர்ப்பத்தை உரிய முறையில் பயன்படுத்திவிடவேண்டும்.
கேள்வி உள்ளக விசாரணை பொறிமுறை தொடர்பில் ?
பதில் உள்ளக விசாரணை பொறிமுறை தொடர்பில் இனவாத சக்திகள் பல விமர்சனங்களை முன்வைத்து வந்தன. ஆனால் இலங்கை வந்த ஐககிய நாடுகள் மனித உரிமை ஆணையாளர் செய்ட் அல் ஹுசேன் நல்லதொரு சமிக்ஞையை வெளிப்படுத்திச் சென்றுள்ளார். மனித உரிமைகள் மீறப்பட்டிருந்தால் நாங்கள் விசாரிப்போம். அதனை எமது அரசியலமைப்புக்கு உட்பட்டு விசாரிப்போம் என்றார்.
No comments
Post a Comment