Latest News

February 02, 2016

யாழ்ப்பாணப் பெற்றோருக்கு நீதவான் இளஞ்செழியன் எச்சரிக்கை
by admin - 0

யாழ் குடாநாட்டில் புதிய விதத்தில் தலையெடுத்துள்ள கொள்ளை, வழிப்பறிக் கொள்ளை, வீட்டுத்திருட்டுக் குற்றவாளிகளுக்கு கடும் சிறைத் தண்டனை வழங்கப்படும் என்றும், வழக்கு முடியும் வரையில் இவர்களுக்குப் பிணை வழங்கப்பட மாட்டாது என்றும் யாழ்ப்பாணம் மேல் நீதிமன்ற நீதிபதி எச்சரிக்கை செய்துள்ளார்.

பெருமளவு போதை வஸ்தை உடைமையில் வைத்திருந்த சந்தேக நபர்களுக்குப் பிணை கோரி கடந்த வாரம் தாக்கல் செய்யப்பட்டிருந்த மனு மீதான விசாரணையின்போதே நீதிபதியினால் இந்த எச்சரிக்கை செய்யப்பட்டிருக்கின்றது.அத்துடன் குற்றச் செயல்களில் ஈடுபடுபவர்களுக்குப் பாதுகாப்பு வழங்கும் பெற்றோர்களுக்கு எதிராக ஈவிரக்கமின்றி தண்டனை வழங்கப்படும் என்றும் நீதிபதி எச்சரித்துள்ளார்.

யாழ் குடாநாட்டில் இடம்பெற்று வருகின்ற கொள்ளைச் சம்பவங்களின் மூலம் குற்றச் செயல்கள் அதிகரித்துச் செல்லும் போக்கு தலையெடுத்துள்ள நிலையில் போதை வஸ்து குற்றச் செயல் சந்தேக நபர்களுக்குப் பிணை வழங்க முடியாது என நீதிமன்றம் மறுத்துள்ளது.

குற்றச் செயல்கள் இடம்பெறுகின்ற பிரதேசங்களில் சைக்கிள் சுற்றுக்காவல் நடவடிக்கையில் பொலிசாரை ஈடுபடுத்துமாறு, இந்த வழக்கு விசாரணையின்போது நீதிமன்றில் ஆஜராகியிருந்த பருத்தித்துறை உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் நெல்லியடி பதில் பொறுப்பதிகாரி ஆகியோருக்கு, மன்று நேரடியாக உத்தரவிட்டுள்ளது.

அதேபோன்று புதிதாகப் பதவியேற்றள்ள மானிப்பாய், கோப்பாய் பொலிஸ் பொறுப்பதிகாரிகளையும் மன்றுக்கு அழைத்து விசேடமாக கொள்ளை வழிப்பறி கொள்ளை, திருட்டுக்கள் என்பவற்றைக் கட்டுப்பாட்டில் கொண்டு வருமாறு பணிக்கப்பட்டுள்ளது.

அத்துடன் யாழ் குடாநாட்டில் கொள்ளைச் சம்பவங்கள் இடம்பெறுகின்ற இடங்கள் அனைத்தையும் உன்னிப்பாக அவதானித்து, அடையாளப்படுத்துவதுடன்,  அனைத்து பொலிஸ் நிலையங்களின் ஊடாகவும் சைக்கிள் சுற்றுக்காவல் கண்காணிப்புச் செயற்பாடுகளை ஆரம்பிப்பதுடன், அதிரடிப்படை பொலிசாரைப் பயன்படுத்தி குற்றவாளிகளைக் கைது செய்வதற்கு உடன் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று குடாநாட்டின் உயர் பொலிஸ் அதிகாரிகளுக்கு நீதிபதி இளஞ்செழியன் உத்தரவிட்டுள்ளார்.

இது குறித்து நீதிபதி இளஞ்செழியன் மேலும் தெரிவித்துள்ளதாவது:

யாழ் குடாநாட்டில் கொலைக் குற்றங்கள், வாள் வெட்டு, வீதி ரவுடித்தனங்கள் குறைவடைந்து நல்லொழுக்கமுள்ளவர்களாக யாழ் இளைஞர்கள் மாறிவருவதைக் காண முடிகின்றது.  சுன்னாகம் பிரதேசத்தில் வாள்வெட்டுக்கள் குறைந்து இளைஞர்களும் மற்றவர்களும் நீதிமன்ற உத்தரவுகளுக்குப் பணிந்து நடப்பதை அவதானிக்கக் கூடியதாக உள்ளது.

ஆனால் இந்தச் சூழ்நிலையில் அண்மைக்காலமாக புதியதொரு விதத்தில் கொள்ளை வழிப்பறி கொள்ளை வீடுகளில் ஆட்கள் இல்லாத போது திருட்டுக்கள் போன்ற குற்றச்செயல்கள் தலையெடுத்திருக்கின்றன.

யாழ் குடநாட்டின் பல்வேறு நீதிமன்றங்களில் பத்துக்கும் மேற்பட்ட மோசமான கொள்ளைகள், வழிப்பறி கொள்ளைகள், வீட்டுத் திருட்டுக்கள் போன்ற குற்றச் செயல்கள் பதிவாகியிருக்கின்றன.  திருட்டுக்கள் பதிவாகியுள்ளதைச்ப்பதையும் காண முடிகின்றது.  நெல்லியடி சுன்னாகம் மற்றும் மானிப்பாய் பொலிஸ் பிரதேசங்கள் குற்றச் செயல்கள் இடம்பெறுகின்ற பிரதேசங்களாக அவதானிக்கப்பட்டிருக்கின்றது.

அமைதியாக இருக்கும் யாழ் குடாநாட்டை அச்சப்படுத்தி கொள்ளைகளில் ஈடுபடுகின்ற குற்றவாளிகளுக்குக் கடும் சிறைத்தண்டனை வழங்கப்படும். வழக்கு முடியும் வரை இத்தகைய வழக்குகளில் சம்பந்தப்பட்டவர்களுக்குப் பிணை வழங்கப்படமாட்டாது. கொள்ளைச் செயல் குற்றவாளிகளுக்குப் பாதுகாப்பு கொடுக்கும் பெற்றோர்கள் இரக்கமின்றி; சிறையில் அடைக்கப்படுவார்கள்.

மோட்டார் சைக்கிள்களில் ஹெல்மட் அணிந்து, சாதுரியமாக இனம் தெரியாத வகையில் வழிப்பறி கொள்ளைகளில் ஈடுபடும் குற்றவாளிகளின் செயற்பாடுகள், நடமாட்டங்கள் என்பவற்றை,  நல்லொழுக்கமுள்ள இளைஞர்கள் குழாம் அவதானித்து, அவர்களை பொலிசார் கைது செய்வதற்கு உதவியும் ஒத்தாசையும் வழங்க வேண்டும்.

விசேடமாக பெண்கள் மட்டுமே இலக்காகக் கொண்டு இந்தக் கொள்ளைகள் இடம்பெற்று வருகின்றன. எனவே, தனிமையில் வீதிகளில் செல்லும் பெண்கள் அதிக அளவு நகைகளை அணிந்து செல்வதைத் தவிர்த்துக் கொள்ள வேண்டும். தனிமையில் வாழ்ந்து வரும் பெண்கள் பணம், நகைகளை வீட்டில் வைக்கும் போது மிகுந்த பாதுகாப்பாக நடைமுறைகளைக் கையாள வேண்டும் என நீதிபதி இளஞ்செழியன் தெரிவித்துள்ளார்.

போதை வஸ்து பிணை வழக்கு விசாரணையை நீதிமன்றம் பங்குனி மாதத்திற்கு ஒத்தி வைத்துள்ளது.
« PREV
NEXT »

No comments