யுத்தக் குற்றம் தொடர்பான இலங்கையின் விசாரணை பொறிமுறையானது, சுயாதீனமானதாகவும் நம்பகத்தன்மை வாய்ந்ததாகவும் இருக்குமிடத்து அது ஏற்றுக்கொள்ளக் கூடியதென ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளர் செயிட் அல் ஹூசைன் தெரிவித்துள்ளளார்.
இலங்கைக்கான உத்தியோகபூர்வ விஜயத்தினையடுத்து, ரொயிட்டர்ஸ் செய்திச் சேவைக்கு வழங்கிய விசேட செவ்வியிலேயே அவர் இதனைத் தெரிவித்துள்ளார். குறித்த செவ்வியில் அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது-
‘யுத்த குற்ற விசாரணை தொடர்பில், இலங்கை அரசாங்கத்தின் மீது நாம் எதனையும் திணிக்கவில்லை. குறித்த விசாரணை தொடர்பில் இலங்கை ஜனாதிபதி தமது நிலைப்பாட்டை வெளிப்படுத்தியுள்ளார். நாம் எமது விருப்பத்தை தெரிவித்துள்ளோம்.
யுத்தக் குற்றம் மற்றும் மனித உரிமை மீறல்கள் தொடர்பான விசாரணையில், சர்வதேச பங்களிப்புடன் கூடிய கலப்பு வகையான பொறிமுறையொன்றையே ஆரம்பத்திலிருந்து நாம் விரும்புகின்றோம்.
கடந்த காலங்களில் இலங்கை மேற்கொண்ட உள்ளகப் விசாரணைகளில், பாதிக்கப்பட்டவர்களுக்கான நீதி கிடைக்கப்பெறாத நிலையில், அவர்கள் உள்ளக பொறிமுறை மீது நம்பிக்கை கொள்ளமாட்டார்கள்.
எனினும் இலங்கை அரசாங்கம் எந்த தீர்மானத்தை எடுத்தாலும், அதற்கு பாதிக்கப்பட்ட அனைத்துத் தரப்பினரதும் ஆதரவு இருக்கும் பட்சத்தில், அதனை ஏற்றுக்கொள்ள முடியும். அத்தோடு, குறித்த விசாரணை பொறிமுறை பக்கச்சார்பற்றதாகவும் சுயாதீனமானதாகவும் இருக்கவேண்டியது அவசியம்’ என குறிப்பிட்டார்.
யுத்தக் குற்ற விசாரணையில் சர்வதேசம் பங்களிப்பு செய்யுமிடத்து, அது இலங்கை இராணுவத்தினரை தண்டிப்பதாக அமையுமெனவும் சர்வதேசத்தின் தலையீடு எந்த வகையிலும் தேவையில்லையெனவும் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, அவரது ஆதரவு அணியினர் மற்றும் பௌத்த பிக்குகள் உள்ளிட்ட பலர் தெரிவித்து வருகின்றனர்.
இதேவேளை, அண்மையில் ஜனாதிபதி மைத்திரி பிபிசிக்கு வழங்கிய செவ்வியில் குறிப்பிடப்பட்டதைப் போன்று, யுத்த குற்ற விசாரணையின்போது இலங்கையின் நீதித்துறையில் சர்வதேச தலையீடு இருக்காதெனவும், விசாரணை பொறிமுறைக்குத் தேவையான தொழிநுட்ப உதவிகள் மாத்திரம் சர்வதேசத்திடமிருந்து பெற்றக்கொள்ளப்படுமென்றும் அமைச்சர் பைஸர் முஸ்தபா, நேற்று (புதன்கிழமை) கொழும்பில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
No comments
Post a Comment