எமது கொள்கையின் அடிப்படையில்தான் சிறிதரன் செயற்படுகின்றார் டக்கிளஸ் பெருமிதம்!
சிங்கள மக்களது புரிதல் இல்லாமல் அரசியல் யாப்பு நிறைவேற வாய்ப்பில்லை என்றும், தமிழீழம் குறித்து இனியும் பேசிக்கொண்டிருப்பதில் அர்த்தமில்லை என்றும் நாடாளுமன்ற உறுப்பினர் சி. சிறிதரன் அவர்கள் அண்மையில் குறிப்பிட்டிருக்கின்றார்.அந்த வகையில், இப்போதாவது இவர் நடைமுறை யதார்த்தத்தைப் புரிந்து கொண்டிருப்பதை நாம் வரவேற்பதாக அக்கட்சி தெரிவித்துள்ளது.
எமது கட்சி ஆரம்பிக்கப்பட்ட காலம் முதல் இந்த யதார்த்தத்தையே நாம் எமது கொள்கையாகவும் கொண்டு செயற்பட்டும், வலியுறுத்தியும் வருகின்றோம். இந்த நடைமுறையை ஏனைய தமிழ்த் தலைமைகளும் அன்றே பின்பற்றி இருந்தால், எமது மக்களுக்கு இந்தளவு பாதிப்புகளும், இழப்புகளும் ஏற்பட்டிருக்காது.
இலங்கையில் தமிழ் பேசும் மக்களுக்கு நியாயமானதும், நிலையானதுமான ஓர் அரசியல் தீர்வு எட்டப்பட வேண்டுமானால் சிங்கள மக்களின் இணக்கப்பாடு அதற்கு அவசியமாகும். அம் மக்களால் நிராகரிக்கப்படுகின்ற தீர்வுகள் எதுவும் சாத்தியமாகாது.
எனவே, எமது பிரச்சினைகள் தொடர்பில் சிங்கள மக்கள் மத்தியில் புரிந்துணர்வை ஏற்படுத்தும் வகையில் நாம் எமது செயற்பாடுகளை முன்னகர்த்த வேண்டும். இதன் மூலம் பேரினவாதிகளால் சிங்கள மக்களிடையே புகுத்தப்பட்டிருக்கும் எம்மீதான சந்தேகங்களை அகற்றி, அம் மக்கள் மத்தியில் பரஸ்பர நம்பிக்கையை கட்டியெழுப்ப வேண்டும். அதன் பிறகு அம் மக்களை எமக்கான தீர்வு தொடர்பில் அழைத்து வருவதே நடைமுறைச் சாத்தியமாகும்.
இதைவிடுத்து, தமிழ் பேசும் மக்களை வெறும் கருத்து ரீதியில் மாத்திரம் திருப்திப்படுத்துவதற்காக இனவாத கருத்துக்களை விதைத்து, அம் மக்களைத் தூண்டி, சுயலாப அரசியலுக்கான எம் மக்களின் வாக்குகளை அபகரிக்கும் முயற்சிகளால், எமக்கு நியாயமானதும், நிரந்தரமானதுமான அரசியல் தீர்வுகள் கிட்டப்போவதில்லை. எமது மக்கள் தொடர்ந்தும் இதனால் வரலாற்று ரீதியில் ஏமாற்றப்படும் நிலையே தொடரும்.
இதை யதார்த்த ரீதியில் இன்று உணர்ந்து கொண்டுள்ள சிறிதரன் அவர்கள் தனது நிலைப்பாட்டினை வெளிப்படுத்தியுள்ளார். இது ஓர் ஆரோக்கியமான விடயமாகும். ஏனைய அனைத்துத் தமிழ்த் தலைமைகளும், தமிழ் மக்கள் பிரதிநிதிகளும் இந்த யதார்த்த நிலையைப் புரிந்துகொண்டு, நேர்மையாக செயற்பட முன்வந்தால், எமக்கான நியாயமானதும், நிலையானதுமான அரசியல் தீர்வை நாம் விரைவில் எட்ட முடியும் என்பது உறுதி.
No comments
Post a Comment