புதிய அரசியலமைப்பின் மூலம் அரசியல் தீர்வைக் காண்பதற்கான இணக்கப்பாடு காணப்பட்டுள்ள நிலையில் அப்பணிகளை யாரும் குழப்புவதோ அல்லது காலதாமதப்படுத்துவதோ கூடாதென எதிர்க்கட்சித் தலைவரும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவருமான இரா.சம்பந்தன் அரசியல் கட்சிகளிடத்தில் கோரிக்கை விடுத் தார்.
பாராளுமன்றத்தை அரசியலமைப்பு பேரவையாக மாற்றுவது குறித்த பிரேரணை மீது நேற்று புதன்கிழமை இடம்பெற்ற விவாதத்தின் போது ஆளும் தரப்புக்கும் மக்கள் விடுதலை முன்னணிக்கும் இடையில் தர்க்கம் ஏற்பட்டது. இதன்போதே எதிர்க்கட்சித் தலைவர் மேற் கண்டவாறு தெரிவித் தார்.
அவர் சபையில் மேலும் தெரிவிக்கையில்,
புதிய அரசியலமைப்பு உருவாக்கம் தொட ர்பாக நாம் இங்கு விவாதித்துக் கொண்டிருக்கிறோம். 1978 ஆம் ஆண்டு அரசியலமைப்பை கைவிட வேண்டும். அதில் உள்ள பல விடயங்கள் ஏற்புடையனவல்ல. அதனால் புதிய அரசியலமைப்பு உருவாக்கப்படவேண்டும். அவ்விடயம் அனைவராலும் ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளது. அதற்கான இணக்கப்பாடும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
புதிய அரசியலமைப்பின் ஊடாக இனப்பிரச்சினைக்கு தீர்வுகாண இணக்கப்பாடு காணப்பட்டுள்ளது. அத்துடன் நிறைவேற்று அதிகார முறையை நீக்குதல், புதிய தேர்தல் முறை உருவாக்கம் போன்ற விடயங்கள் குறித்தும் இணக்கப்பாடு ஏற்பட்டுள்ளது. எனவே இதனை யாரும் குழப்பவோ, தாமதப்படுத்தவோ கூடாது என்றார்.
நேற்று புதன்கிழமை பாராளுமன்றத்தை அரசியலமைப்பு பேரவையாக மாற்றியமைப்பது குறித்த பிரேரணை மீதான விவாதம் நடைபெற்றபோது அதில் ஜே.வி.பி. பாராளுமன்ற உறுப்பினர் சுனில் ஹந்துன்நெத்தி உரையாற்றினார்.
இதன்போது அவர் குறிப்பிடுகையில்
ஜனாதிபதித் தேர்தல் நிறைவடைந்து ஒருவருடம் நிறைவடைந்த நிலையில் கடந்த ஜனவரி மாதம் ஒன்பதாம் திகதி பாராளுமன்றத்தை அரசியலமைப்பு சபையாக மாற்றியமைப்பது குறித்த பிரேரணை சபைக்கு சமர்ப்பிக்கப்பட்டது. 12 ஆம் திகதி அப்பிரேரணை மீதான விவாதம் நடத்தப்பட்டது. அதன்பின்னர் அப்பிரேரணை மீதான விவாதம் பிற்போடப்பட்டது. பெப்ரவரி 25 ஆம் திகதி மீண்டும் விவாதத்திற்கு எடுத்துக் கொள்ளப்படுவதாக கூறினார்கள். ஆனால் திடீரென நேற்று முன்தினம் செவ்வாய்க்கிழமை காலையில் கூடி முடிவெடுத்து தற்போது விவாதத்தை ஆரம்பித்திருக்கின்றார்கள். இவ்வாறு திடீரென விவாதத்தை முன்னெடுப்பதற்கு என்ன காரணம்? மறுபக்கத்தில் இப்பரிசோதனை மீதான வாக்கெடுப்பை நடத்துவது தாமதமாகுமெனவும் கூறுகின்றார்கள். அதற்கு என்ன காரணம்?
அரசியலமைப்பை உருவாக்குவதற்காக பொது மக்களின் கருத்துக்களை பெற்றுக்கொள்ளும் பணி முன்னெடுக்கப்படுகின்றது. மக்கள் கருத்துக்கள் முக்கியமானவை என்பதை நாம் ஏற்றுக்கொள்கின்றோம். எனினும் மக்கள் ஆணை பெற்ற இச்சபையில் அரசியலமைப்பை உருவாக்குவதற்காக மாற்றுவதற்கு கருத்துக்களை முன்வைத்து விவாதிக்கப்படுகின்றது.
அரசாங்கத்தில் அங்கத்துவத்தைக் கொண்டிருக்கும் ஐக்கிய தேசியக் கட்சிக்கும் ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சிக்குமிடையில் இணக்கப்பாடு காணப்படுமாயின் இப்பிரேரணை நிறைவேற்றுவதில் பிரச்சினை இருக்காது. உண்மையிலேயே அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் பிரதான கட்சிகளிடையே இணக்கப்பாடு இல்லை. இதன் காரணமாக விவாதம் என்ற பெயரால் காலத்தைக் கடத்தும் செயற்பாடு முன்னெடுக்கப்படுகின்றது என்றார்.
இதன்போது குறுக்கிட்ட அமைச்சர் ஜோன் செனவிரட்ன, ஜனநாயக நடைமுறைகளை கடைப்பிடிக்க வேண்டும். அந்த நடைமுறைகளின் அடிப்படையிலேயே கருத்துகளை கேட்டறிந்து விவாதங்கள் நடத்துவதற்குரிய நடைமுறைகள் ஏற்பாடு செய்யப்படுகின்றன என்றார்.
அப்போது குறுக்கிட்ட ஜே.வி.பி. தலைவரும் எம்.பி.யுமான அநுரதிஸாநாயக்க, அரசாங்கம் திடீரென விவாதத்தை எடுத்துக் கொண்டமைக்கு என்ன காரணம். காலத்தை வீணடிக்காது அரசாங்கத்திற்கு ஒன்றுபட்ட நிலை காணப்பட்டது. இப்பிரேரணையை இன்று நிறைவேற்ற முடியும் என்பதை வலியுறுத்தினார்.
அமைச்சர் ஜோன் செனவிரட்ன மீண்டும் ஜனநாயக நடைமுறைகளின் பிரகாரம் அனைவரினதும் கருத்துகளை உள்வாங்க வேண்டும் என்பதைச் சுட்டிக்காட்டினார்.
இதன்போது சுனில் ஹந்துன்நெத்தி எம்.பி.நாங்கள் žஜனநாயக நடைமுறைகளை வரவேற்கின்றோம். ஆனால் மக்கள் கருத்துக்கள் புதிய அரசியலமைப்புக்காக பெறப்படும் அதேநேரம் பிரேரணை மீது விவாதங்களை நடத்தி காலவிரயத்தை ஏன் செய்ய வேண்டும். உண்மையிலேயே பிரேரணையை இன்றே (நேற்று) நிறைவேற்றுவதற்கு முடியும். ஆனால் உங்களுக்குள் (அரசாங்கத்திற்குள்) இணக்கப்பாடு இல்லை. பிரதமர் ஒரு கருத்தை கூறுகின்றார். அமைச்சர் சுசில் பிரேம்ஜயந்த வேறொரு கருத்தை முன்வைக்கின்றார் என்றார்.
அதன்போது எழுந்த அநுர திஸாநாயக்க எம்.பி. அரசாங்கத்தின் கருத்து ஒன்றாக இருக்க வேண்டும். இவ்வாறான வேறுபட்ட கருத்துக்கள் வெளிவருகின்றமையின் மூலம் உங்களுக்குள் உள்ள முரண்பாடுகளை இவ்விடயத்தில் வெளிப்படுத்துகின்றீர்கள் என்றார்.
இதன்போது எழுந்த எதிர்க்கட்சித் தலைவர் சம்பந்தன் நாம் தீர்மானத்தின் மீது விவாதம் நடாத்திக் கொண்டிருக்கின்றோம். 1978 ஆம் ஆண்டு உருவாக்கப்பட்ட அரசியலமைப்பை கைவிடவேண்டுமென அனைவராலும் ஏற்றுக்கொள்ளப்பட்டு புதிய அரசியலமைப்பினை உருவாக்கும் பணிகள் முன்னெடுக்கப்படுகின்றன. அதற்காக பாராளுமன்றத்தை அரசியலமைப்பு பேரவையாக மாற்ற வேண்டும் என்ற வகையில் நாட்டின் நன்மை கருதி அனைவரும் ஒன்றிணைந்துள்ளோம். அதில் குழப்பங்களை ஏற்படுத்தாது தற்போது ஏற்பட்டுள்ள தக்க தருணத்தை பயன்படுத்திக் கொள்ள வேண்டுமென வலியுறுத்தினார்.
இதனையடுத்து ஜே.வி.பி.எம்.பி. சுனில் ஹந்துன்நெத்தி நிறைவேற்று அதிகாரங்களை குறைத்தல், இனப்பிரச்சினைக்கு தீர்வை ஏற்படுத்தல், தேர்தல் முறைமையில் மறுசீரமைப்பு போன்ற விடயங்களில் எமக்கு எந்தப் பிரச்சினையும் கிடையாது. அதனை நாமும் வலியுறுத்தி வருகின்றோம். ஆனால் இங்குள்ள பிரச்சினை அவசரமாக இந்த விவாதத்தை பயனின்றி முன்னெடுக்க முடியாது என்பதாகும். அரசாங்க கட்சிகளுக்குள் பொது இணக்கப்பாடு காணப்படுமாயின் இப்பிரேரணை இன்றே நிறைவேற்றலாம். நாம் காலம் தாழ்த்திச் செல்வதை விரும்பவில்லை என்றார்.
இதன்போது அமைச்சர் ஜோன் செனவிரட்டன கலந்துரையாடாது பிரேரணை மீது வாக்கெடுப்பு நடத்தப்பட்டால் கலந்துரையாட இடமளிக்கவில்லையெனக் கூறுவீர்கள் என்றார்.
அதன்போது குறுக்கிட்ட சுனில் ஹந்துன்நெத்தி மற்றும் அநுர திஸாநாயக்க எம்.பி.கள் வாக்கெடுப்பை நடத்துவதில் உங்களுக்கு என்ன பிரச்சினையுள்ளது. ஏன் கால தாமதத்தைச் செய்கின்றீர்கள். இந்த விவாதம் இன்றுடன் நிறைவடையப் போவதில்லை. நாளையும் தொடரும் என குறிப்பிட்டார்.
அதன்போது சபை முதல்வர் வருகை தந்ததும் உங்களுக்கு பதிலளிப்பார் என அமைச்சர் ஜோன் செனவிரட்ன தெரிவித்தார்.
அதனையடுத்து கருத்துக்களை முன்வைத்த சுனில் ஹந்துன்நெத்தி எம்.பி. இங்குள்ள 225 பேரை தவிர இங்கு வேறு எவரும் புதிதாக வந்து கருத்துக்களை முன்வைக்க முடியாது. ஆகவே இங்குள்ள அனைவரும் இணங்குகின்றபோது இதனை அங்கீகரிக்க முடியும்.
உண்மையிலேயே இந்த பாராளுமன்றம் மக்களுக்கு எதனைக் கூற முயற்சிக்கின்றது. உண்மையில் ஜனநாயகத்தினை நிலைநாட்டுவதற்குரிய நடவடிக்கைகளை முன்னெடுக்க வேண்டும் என்றார். இதன்போது கருத்து வெளியிட்ட பிரதிசபாநாயகர் உங்களுக்கு ஒதுக்கப்பட்ட நேரத்தில் நீங்கள் கருத்துகளை முன்வைக்க முடியும். மாறாக அவற்றை மாற்றியமைக்க முடியாது என்றார்.
No comments
Post a Comment