Latest News

January 10, 2016

2016ல் ஈழத்தமிழர்களின் திசைவழிப்பாதை எது?
by Unknown - 0

புதிய ஆண்டில் ஈழத்தமிழ் மக்களது சுயநிர்ணய உரிமைப் போராட்டம் முன்னோக்கி நகரும் என எதிர்பார்க்கிறோம் என்ற நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் பிரதமர் வி.உருத்ரகுமாரனது  புத்தாண்டுச் செய்தியோடு 2016 மலர்ந்துள்ளது.

வழமைபோல் புதிய நம்பிக்கைகளோடும், எதிர்பார்ப்புகளோடும் பிறந்துள்ள இப்புத்தாண்டில், ஈழத்தமிழர்களது நீதிக்கும், உரிமைக்குமான போராட்டத்தின் திசைவழிப்பாதை எவ்வகையாக அமையப் போகின்றது ? 

தாயகம் - புலம்பெயர் தமிழர் அரசியற் தரப்பு மற்றும் சிறிலங்காவின் ஆட்சியாளர்கள் ஆகிய இருதரப்பின் திசைவழிப் பாதையினை ஓரு புள்ளியில் சந்திக்க வைக்கின்ற விசைத்தறியாக அனைத்துலக சமூகத்தின் நகர்வு இருக்கின்றது.

சிறிலங்காவின் முன்னாள் அரசுத் தலைவர் மகிந்த ராஜபக்சவின் போக்கு தங்களுடைய நலன்களுக்கு பாதகமாக இருந்த நிலையில், சிறிலங்காவில் ஆட்சி மாற்றம் ஒன்றினை மேற்கொள்வதற்கு தமிழர்களின் வாக்குகளை அனைத்துலக சமூகம் கருவியாக பாவித்துக் கொண்டது என்பது வெட்டவெளிச்சம்.

இதற்கான பரிகரமாக சில வாக்குறுதிகளை தமிழ் தேசியக் கூட்டமைப்புக்கு அனைத்துலக சமூகம் வழங்கியிருந்த நிலையிலேயே, 2016ல் அரசியற் தீர்வு என்ற நம்பிக்கையினை தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பிரதான தலைவர்கள் தெரிவித்து வருகின்றனர். 

இவ்வாறான நம்பிக்கைகள் கடந்த காலங்களிலும் இவர்களினால் தெரிவிக்கப்பட்டும் உள்ளது.

இருப்பினும் 2016ல் தீர்வு என்ற நம்பிக்கை தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தரப்பில் இருந்து தெரிவிக்கப்பட்டு வருகின்றதே அன்றி, சிறிலங்கா ஆட்சியாளர்கள் மறந்தும் இவ்விடயத்தில் வாய்திறக்கவில்லை.

இதேவேளை தமிழர் தாயகத்தில் தோற்றம் பெற்றுள்ள தமிழ் மக்கள் பேரவையும், சிறிலங்காவின் புதிய அரசியல் அமைப்பு திருத்தினை மையமாக வைத்து, சில நகர்வுகளை முன்னெடுப்பதனை அவதானிக்க கூடியதாகவுள்ளது.

தாயகம், தேசியம், தன்னாட்சியுரிமை எனும் ஈழத்தமிழ் மக்களது விருப்பினை அடிப்படையாக கொண்டு தமிழர்களின் எண்ணப்பாட்டினை தெரிவிக்கும் வகையில் யோசனைகளை முன்வைக்கும் முனைப்பாக இது தெரிகின்றது.

இந்நிலையில், வட்டுக்கோட்டைத் தீர்மானத்தின் 40வது ஆண்டும், பிறந்துள்ள 2016ம் ஆண்டிலேயே அமைந்துள்ளது.

இதனை மையமாக கொண்டு வட்டுக்கோட்டடைத்தீர்மானத்தின் 40வது ஆண்டினை எழுச்சியாண்டாக கொண்டு, மெய்நிகர் தமிழீழ அரசாங்கத்துக்குரிய செயன்முறையொன்றின் வழியே, தமிழீழத்துக்கான அரசியல் யாப்பு வரைவினை இவ்வாண்டில் முன்னெடுக்கவுள்ளதாக நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் அறிவித்துள்ளது.

மேற்குலகின் அழுத்தங்களின் வழியே சிறிலங்காவின் ஆட்சியாளர்கள் தமிழர்களுக்கானதீர்வுத் திட்டத்தினை முன்வைப்பார்கள் என்ற நம்பிக்கையோடு தமிழ் தேசியக்கூட்டமைப்பு காத்திருக்கின்ற நிலையில், இவ்விவகாரத்தில் தமிழ் மக்களின் நிலைப்பாட்டினை வெளிப்படுத்தும் வகையிலான அழுத்தத்தினை தமிழ் மக்கள் பேரவை கொடுக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

இது தீர்வுத்திட்ட விவகாரத்தில் சிறிலங்கா அரசாங்கத்துடனான பேச்சு வார்த்தைகளுக்கு , தமிழ் தேசிய கூட்டமைப்புக்கான பேரம் பேசும் சக்தியினை தமிழ் மக்கள் பேரவை வழங்குவதற்கான நிலை உள்ளது.

மறுபுறம் வட்டுக்கோட்டைத்தீர்மானத்தினை மையப்படுத்தி நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் முன்னகர்வு இதற்கு அடுத்தபடி நிலையாகவுள்ளது.

இவ்வாறு 2016ம் ஆண்டில் தமிழர் தரப்பினதும், சிறிலங்கா ஆட்சியாளர்களது நகர்வுகள் அமைந்துள்ள நிலையில், தங்களுடைய நலன்களுக்கு ஏற்றாப் போல் வசதியாக அமையப்பெற்றுள்ள சிறிலங்காவின் புதிய ஆட்சியினை தக்கவைப்பதிலும், பேணுவதில் மும்முரம் காட்டும் மேற்குலகம், தமிழர் தரப்பின் இந்நகர்வுகளை எவ்வாறு கையாளப் போகின்றது என்பது இங்கு முக்கியமானது.

குறிப்பாக, நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தினதும் நகர்வானது, ஈழத் தமிழர் தேசத்துக்கான தெளிவான நிகழ்ச்சி நிரலாக தென்படுகின்றது. இது மேற்குலகத்தினதும், சிறிலங்காவினதும் நிகழ்ச்சி நிரலுக்கு நேர் எதிரானது.

இந்நிலையில், நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் பிரதமர் வி.உருத்திரகுமாரனது புத்தாண்டு அறிக்கையின் பின்வரும் பகுதி, 2016மஈழத் தமிழர் தேசத்தினது திசைவழிப்பாதையினை தெளிவாக கூறி நிற்கின்றது எனலாம்.

*கடந்து சென்ற 2015 ஆம் ஆண்டு நாம் எதிர் கொள்ளப் போகும் சவால்களுக்குக் கட்டியம் கூறும் ஆண்டாக அமைந்திருந்தது. சிறிலங்காவில் இடம் பெற்ற ஆட்சி மாற்றமும் அதன் விளைவாக அனைத்துலக அரசுகள் சிறிலங்கா அரசினைத் தாங்கிப் பிடிக்கும் அணுகுமுறையினைக் கடைப்பிடிக்கத் தொடங்கிய ஆண்டாகவும் கடந்த வருடம் அமைந்தது.

*சிறிலங்கா அரசினைத் தமது நலன்கள் சார்ந்து ஆதரித்து நிற்கும் அனைத்துலக சமூகத்தின் ஆதரவை ஈழத் தமிழ் மக்களாகிய நாம் எமது சுயநிர்ண உரிமையினை அடைந்து கொள்ளும் போராட்டத்தில் எவ்வாறு வென்றெடுக்கப் போகிறோம் என்பது புதிய ஆண்டில் நாம் எதிர் கொள்ளப் போகும் பெரும் சவாலாக அமையவுள்ளது. இச் சவாலை எதிர் கொள்ளும் வகையில்; புதிய ஆண்டில் நாம் எமது செயற்பாடுகளை அமைத்துக் கொள்ள வேண்டும்.
« PREV
NEXT »

No comments