டி.வி. சேனல்களில் சர்ச்சைக்குரிய வகையில் கருத்துகளை தெரிவித்ததற்காக அ.தி.மு.க. துணை கொள்கை பரப்புச் செயலர் பதவியில் இருந்து நாஞ்சில் சம்பத் இன்று அதிரடியாக டிஸ்மிஸ் செய்யப்பட்டுள்ளார்.
புதிய தலைமுறை டிவி சேனலில் இன்று ஒளிபரப்பான அக்னி பரீட்சை நிகழ்ச்சியில் பேட்டியளித்திருந்த நாஞ்சில் சம்பத் அதிமுக மீதான எதிர்க்கட்சிகளின் விமர்சனத்துக்கு பக்கபலம் சேர்க்கும் வகையில் கருத்துகளைக் கூறியிருந்தார்.
அதில், சென்னை வெள்ளம் குறித்த கேள்விக்கு, மக்களின் இயல்பு வாழ்க்கை திரும்பியாச்சு. வெள்ள பாதிப்பு என்று ஒன்றும் கிடையாது. அதெல்லாம் 2015. இப்போது 2016 பிறந்தாகிவிட்டது. இன்னமும் வெள்ளம் பற்றி பேச வேண்டியதில்லை; அதெல்லாம் மெதுவாதாங்க இயல்பு நிலைக்கு திரும்பும். ஊடகங்கள்தான் மக்கள் பரிதவிப்பு என்று சொல்லிக்கொண்டுள்ளது. குடிசையில் இருந்தவர்களுக்கு கூட இப்போது குடியிருப்பு வீடுகள் கொடுக்கப்பட்டுள்ளது. எனக்கே ஒரு வீடு கிடைக்கவில்லையே என்ற ஏக்கம் இருக்கிறது.
ஒரு வீட்ல துக்கம் நடந்திருக்கு என்றால், மற்றொரு வீட்ல கல்யாணம் நடத்தாம (அதிமுக பொதுக்குழு) இருக்க முடியுமா? அதுபோலத்தான், அதிமுக பொதுக்குழு ஆடம்பரமாக நடத்தப்பட்டதிலும் தப்பெல்லாம் கிடையாது என்று கூறியிருந்தார்.
மேலும் ஜெயலலிதாவுக்கு உடல்நலக் குறைவு ஏற்பட்டுள்ளது; ஸ்டாலினின் நமக்கு நாமே பயணத்தால் எதிரிகள் முன்னேறி வருகின்றனர் என்றெல்லாம் தெரிவித்திருந்தார் நாஞ்சில் சம்பத்.
அதேபோல் தந்தி தொலைக்காட்சியில் ஒளிபரப்பாக இருந்த கேள்விக்கென்ன பதில் நிகழ்ச்சிக்கான புரோமோவிலும் கூட, பெருவெள்ளம் புரட்டி போட்ட பிறகு பொதுக்குழு கூட்டம் கோலாகலமாக, கொண்டாட்டமாக நடக்கும்போது சரியா என்ற கேள்விக்கு ,எறும்புகள் சாகிறது என்பதற்காக யானை நடக்காம இருக்க முடியுமா என்று எகத்தாளமாக கூறியிருந்தார்.
அதேபோல் மு.க.ஸ்டாலின் குறித்த கேள்விக்கு அநாகரிகத்தின் உச்சமாக பதிலளித்திருந்தார் நாஞ்சில் சம்பத்.
இதனிடையே முதல்வரும் அதிமுக பொதுச்செயலருமான ஜெயலலிதா இன்று இரவு வெளியிட்டுள்ள அறிக்கையில், அதிமுக துணை கொள்கை பரப்பு செயலாளர் பதவியில் இருந்து நாஞ்சில் சம்பத் விடுவிக்கப்படுவதாக அறிவித்துள்ளார். சொந்த காசில் சூன்யம் என்பது இதுதானோ!
No comments
Post a Comment