அரசியல் கைதிகளின் விடுதலை, காணிகள் விடுவிப்பு, காணாமல் போனோர் பிரச்சனை ஆகிய விடயங்களில் வழங்கப்பட்ட வாக்குறுதிகளை அரசு நிறைவேற்றவில்லை என சுமந்திரன் அவர்கள் தெரிவித்துள்ளார் .
வவுனியாவில் இன்று (வெள்ளிக்கிழமை) இடம்பெற்ற தமிழரசுக்கட்சியின் மத்தியகுழு கூட்டத்தின் பின்னர் செய்தியாளர்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அக்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் இவ்வாறு தெரிவித்தார்.
அங்கு தொடர்ந்து பேசிய அவர், தமிழ் தேசியக் கூட்டமைப்பின் விஞ்ஞாபனத்தில் உள்ளடக்கிய விடயங்கள் புதிய அரசியல் அமைப்பில் உள்வாங்கப்பட வேண்டும் என்பதனை நாம் அரசுக்கு வலியுறுத்துவோம்.
அவற்றில் உள்ளடங்கிய விடயங்களை நாம் அரசியல் அமைப்பில் உள்ளடக்கி புதிய அரசியல் அமைப்பு உருவாகுவதற்காக பேச்சுக்களையும் நடத்துவோம்.
விசேடமாக எங்கள் மக்களின் காணிகள் பல இன்னமும் விடுவிக்கப்படாமல் உள்ளது. ஆட்சி மாற்றத்தின் பின்னர் சில சில இடங்களில் விடுவிக்கப்பட்டிருந்தாலும் கூட அதில் இராணுவ பிரசன்னம் உள்ளமை முக்கிய பிரச்சனையாக உள்ளது.
ஆகவே, நாம் தொடர்ச்சியாக அரசாங்கத்திற்கு காணிகள் விடுவிப்பு தொடர்பாக வலியுறுத்துவோம். தொடர்ச்சியாக சிறுசிறு பகுதியாவது விடுவிக்கப்படுகின்ற முறைமை துரிதப்படுத்தப்பட வேண்டும்.
அரசியல் கைதிகள் விடுதலை தொடர்பாக பல வாக்குறுதிகள் வழங்கப்பட்டுள்ளன. அவை முழுமையாக நிறைவேற்றப்படவில்லை. ஆகையினால் அரசாங்கத்துடன் பேச்சுவார்த்தை நடத்தி விரைவாக பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் தடுத்துவைக்கப்பட்டுள்ள, விசேடமாக நீண்ட காலமாக தடுத்து வைக்கப்பட்டுள்ளவர்கள் விடுதலை தொடர்பாக நாம் செயற்பட வேண்டும்.
காணாமல் போனோர் பிரச்சனை சம்பந்தமாக விசேடமாக நாம் ஆராய்ந்திருந்தோம். அது குறித்த அலுவலகம் திறக்கப்பட்டு செயற்பாடுகள் முன்னெடுக்கப்படும் என அரசாங்கம் அறிவித்திருந்த போதிலும் இன்னமும் அதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படவில்லை.
ஆகையால், இது குறித்த விடயங்கள் தொடர்பாக பொறுப்புக்கூறவேண்டிய கடப்பாடு அரசாங்கத்திற்கு உள்ளது. எனவே, அதை வரும் மாதம் நாடாளுமன்றத்தில் ஒத்திவைப்பு பிரேரணையாக நாங்கள் கொண்டுவருவோம். அதற்கு அரசு உரிய பதிலை கொண்டு வரவேண்டும்.
விசேடமாக 2010 ஆம் ஆண்டில் இருந்து மக்கள் மத்தியிலே ஆணையை பெற்று வந்திருக்கின்றோம். கடந்த தேர்தலிலும் தமிழ் தேசியக் கூட்டமைப்பாகவே ஆணையை பெற்றோம்.
தமிழரசுக்கட்சியின் பெயரிலும் சின்னத்திலும் நாம் போட்டியிட்டாலும் வேறு பங்காளிக்கட்சிகள் மூன்றுடன் இணைந்து தேர்தல் அறிக்கையை வெளியிட்டு மக்கள் ஆணையை பெற்றொம். ஆகையால், அந்த அடிப்படையிலேயே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பாக நாம் செயற்படுவோம்.- என்றார்.
No comments
Post a Comment