Latest News

January 30, 2016

வடமாகாணக் கல்வி அமைச்சு முறைகேடான அடாவடிகளுக்கு துணை நிற்பதைக் கண்டித்து இலங்கை ஆசிரியர் சங்கம் போராட்டம்!!!
by admin - 0

வடமாகாணக் கல்வி அமைச்சு முறைகேடான அடாவடிகளுக்கு துணை நிற்பதைக் கண்டித்து இலங்கை ஆசிரியர் சங்கம் போராட்டம்!!!


வடமாகாணக் கல்வி அமைச்சு மனிதாபிமானமற்ற அடாவடிகளுக்கு ஆதரவளித்துத் துணை நிற்பதைக் கண்டித்து இலங்கை ஆசிரியர் சங்கம் போராட்டம் எதிர்வரும் 02.02.2016 செவ்வாய்க்கிழமை மாலை 2.30 மணிக்கு இடம்பெறவுள்ளது.

துணுக்காய் வலயக் கல்விப் பணிப்பாளர் திருமதி மாலினி வெனிற்றனின் - ஆசிரியர்களுக்கெதிரான முறைகேடான நடவடிக்கைகள் மற்றும் அதிகார துஸ்பிரயோக நடவடிக்கைகள் தொடர்பாக -      13.11.2014 முதல் இன்று வரை எமது சங்கத்தினால் - ஆதாரபூர்வமாக பல முறைப்பாடுகளை வடமாகாண கல்வி அதிகாரிகளுக்கும், வடமாகாண கல்வி அமைச்சருக்கும், வடமாகாண ஆளுநருக்கும் எழுத்துமூலமாகத் தெரிவித்திருந்தும், ஒரு வருடம் கடந்த நிலையிலும் - இவை தொடர்பான எவ்விதமான ஆரம்பகட்ட விசாரணை கூட நடைபெறவில்லை. 

ஆதாரபூர்வமான சாட்சியங்களை – எமது சங்கம் வழங்கியிருந்தும் எவ்விதமான அடிப்படை நடவடிக்கைகள் கூட மேற்கொள்ளாது செயற்படும் வடமாகாண கல்வி அமைச்சு ஒரு வருடமாக – விசாரணை அதிகாரிகளை நியமிப்பதாக கூறி ஆசிரியர்களைத் தொடர்ந்து ஏமாற்றிவருகின்றது.  


இத்தகைய செயற்பாடுகளினால் - சாட்சியங்களுக்குரிய ஆசிரியர்கள் தொடர்ச்சியாகப் பழிவாங்கப்பட்டுக் கொண்டிருக்கின்றார்கள்.

ஒருவருடமாக – ஒரு வலயக் கல்விப் பணிப்பாளரின் முறைகேடுகளுக்கெதிராக விசாரணை அதிகாரிகளைக் கூட நியமிக்கமுடியாத வடமாகாண கல்வி அமைச்சின் இந்த நடவடிக்கைகள்  - அவர்களது அசமந்தப்போக்கையும், ஆசிரியர்கள் தொடர்பான அக்கறையின்மையையுமே எடுத்துக்காட்டுகின்றது. இவ்வாறு – ஆசிரியர்கள் மன அழுத்தங்களுக்கு உள்ளான நிலையில் - அச்சுறுத்தலுக்கு மத்தியில் - பல பழிவாங்கல்களுக்கு உட்பட்டு கடமையாற்றக்கூடிய மிகவும் ஆபத்தான சூழல் அங்கு ஏற்பட்டுள்ளது.

எனவே – துணுக்காய் வலயக் கல்விப் பணிப்பாளரின் முறைகேடுகளுக்கு எதிராகவும், வடமாகாண கல்வி அமைச்சு இதுவரை விசாரணை செய்யாதமையைக் கண்டித்தும் - எதிர்வரும் 02.02.2016 செவ்வாய்க்கிழமை மாலை 2.30 மணிக்கு – துணுக்காய் வலயக் கல்விப் பணிமனைக்கு முன்பாக - துணுக்காய் கல்வி வலய ஆசிரியர்களை ஒன்றிணைத்து - இலங்கை ஆசிரியர் சங்கம் கண்டன ஆர்ப்பாட்டம் ஒன்றை மேற்கொள்ளவுள்ளது. இந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில் துணுக்காய் கல்வி வலய ஆசியர்களையும், அதிபர்களையும் பங்குகொள்ளுமாறு கேட்டுக் கொள்கின்றோம்.

துணுக்காய் கல்வி வலய ஆசிரியர்கள் எதிர்நோக்கிவரும் இந்த மிக ஆபத்தான நிலையை நீக்க – வடமாகாண கல்வி அமைச்சு அவசர நடவடிக்கைகளை மேற் கொள்ளவேண்டும்.

ஜோசப் ஸ்ராலின்
பொதுச்செயலாளர்,
இலங்கை ஆசிரியர் சங்கம். 0773112541


« PREV
NEXT »

No comments