ஊடகவியலாளர், அரசியல்வாதி, சமூக ஆர்வலர் என பல்வேறு வழிகளிலும் அநீதிக்கு எதிராக குரல் கொடுத்த லசந்த விக்கிரமதுங்க படுகொலை செய்யப்பட்டு இன்றுடன் 7 வருடங்கள் கடந்துள்ளன.
சண்டே லீடர் பத்திரிகையின் ஸ்தாபகரான லசந்த விக்கிரமதுங்க நீதி மற்றும் தர்மத்தை நிலைநாட்டுவதற்காய் முன்நின்ற பேனாமுனைப் போராளியாவார்.
மாவீரனின் கூரிய வாளைவிட பேனாமுனை சக்தி வாய்ந்தது என்பதை பல்வேறு சந்தர்ப்பங்களிலும் கட்டியம் கூறிய ஊடகவியலாளராக லசந்த விக்ரமதுங்க திகழ்ந்தார்.
புலனாய்வு ஊடகவியலில் தன்னிகரற்று விளங்கிய லசந்த, ஊடகவியலாளர்கள் பலருக்கும் முன்மாதிரியாகவும் செயற்பட்டார்.
எம்.ரீ.வீ / எம்.பீ.சி ஊடக வலையமைப்பின் தெபானம கலையகத்தின் மீது தாக்குல் மேற்கொள்ளப்பட்டபோது அச்சமின்றி குரல் கொடுத்த லசந்த, தாக்குதல் மேற்கொள்ளப்பட்டு 48 மணித்தியாலங்களில் படுகொலை செய்யப்பட்டார்.
ஊடகவியலாளர்களின் எழுத்துக்கள் ஆட்சியாளர்களை ஆட்டம் காணச்செய்யும் என்பதை
லசந்த உரிய முறையில் அறிந்துவைத்திருந்தார்.
லசந்தவினால் எழுதப்பட்ட அவரது கடைசி ஆசிரியர் தலையங்கம் அவரது மரணத்தை எதிர்வுகூறுவதாக அமைந்திருந்தது.
2009 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 8 ஆம் திகதி பணிக்கு சென்று கொண்டிருந்தபோது தெஹிவளை அத்திடிய பகுதியில் லசந்த விக்கிரமதுங்க படுகொலை செய்யப்பட்டார்.
லசந்தவின் மறைவுக்குப் பின்னர் மனித நேய செயற்பாடுகளுக்காக யுனஸ்கோ / Guillermo Cano சர்வதேச பத்திரிகை, அவருக்கு சர்வதேச ஊடக சுதந்திர விருது வழங்கி கௌரவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
பத்திரிகை சுதந்திரத்திற்கான முதலாவது ஆசிய ஊடக விருது, சர்வதேச பத்திரிகை நிறுவகத்தின் உலக பத்திரிகை சுதந்திர நாயகன் விருது, அமெரிக்க தேசிய பத்திரிகை கழகத்தின் பத்திரிகை சுதந்திர விருது மற்றும் நேர்மை, சிறந்த மனப்பாங்கிற்காக ஹவார்ட் பல்கலைக்கழகத்தின் நெய்மன் அறக்கட்டளை விருது என்பவற்றையும் லசந்த விக்ரமதுங்க சுவீகரித்திருந்தார்.
லசந்தவின் கொலை இடம்பெற்று 7 வருடங்கள் கடந்துள்ளபோதும் நாம் அது தொடர்பான முழுமையான
விசாரணைகளை எதிர்ப்பார்த்து காத்து நிற்கின்றோம்.
“And then they came for me” என்பதே சிரேஸ்ட ஊடகவியலாளர் லசந்த விக்ரமதுங்கவின் இறுதி ஆசிரியர் தலையங்கமாகும்.
No comments
Post a Comment