இராணுவ உயர்பாதுகாப்பு வலயமாக இருந்து விடுவிக்கப்பட்ட பளை, வீமன்காமம் வடக்குப் பகுதியதில் அமைந்திருந்த இராணுவத்தின் பாரிய படைமுகாமிற்குள் வதை கூடங்கள் இருந்தமைக்கான தடயங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.
குறித்த படைமுகாமிற்குள் இருந்த மக்களுடைய வீடுகளுக்குள்ளே மாற்றங்கள் செய்யப்பட்டே இவ்வாறான வதை கூடங்களாக பயன்படுத்தப்பட்டமை கண்டறியப்பட்ட தடயங்கள் ஊடாக உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
வலி.வடக்கு இராணுவ உயர்பாதுகாப்பு வலயமாக இருந்த பகுதியில் 468.5 ஏக்கர் நிலப்பரப்பு மக்களுடைய மீள்குடியேற்றத்திற்கான கடந்த 29ம் திகதி விடுவிக்கப்பட்டது. இவ்வாறு விடுவிக்கப்பட்ட நிலப்பரப்பில் ஒன்றாக பளை வீமன்காமம் வடக்குப் பகுதியியும் மக்களிடம் ஒப்படைக்கப்பட்டிருந்தது.
குறித்த பகுதியில் சுமார் 6 ஏக்கர் நிலப்பரப்பில் இராணுவம் பாரிய படைமுகாம் ஒன்றினையும், அதனுடன் இணைந்த பயிட்சி முகாம் ஒன்றிணையும் அமைத்திருந்தனர். அப்படைமுகாமும் தற்போது மக்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
படைமுகாமிற்குள் அகப்பட்டிருந்த தமது வீடுகளை தேடி மக்கள் அங்கு சென்றிருந்தனர். இதன் போது பயிற்சி முகாமிற்காகவும், பயிற்சியாளர்கள் தங்குவதற்காகவும் அங்கிருந்த வீடுகள் பலவற்றினை உடைத்த இராணுவத்தினர் வேறு சில புதிய கட்டடங்களை அங்கு அமைத்திருந்தனர்.
இருப்பினும் அங்கிருந்து விலகிச் சென்ற இராணுவத்தினர் புதிய கட்டங்களின் கூரைகளையும், சுவர்களையும் உடைத்து விட்டு வெறுமனே அத்திபாரத்தினையும் மட்டும் விட்டுச் சென்றுள்ளனர்.
சில கட்டடங்களின் சுவர்கள் இருந்த போதும் அதில் இருந்த கதவுகள், ஜன்னல்கள், நிலைகள், மாபிள்கள், நீர் விநியோக குழாய்கள் என்பவைகளை இராணுவத்தினர் உடைத்தும், பிடுங்கியும் எடுத்துச் சென்றுள்ளனர்.
இதனால் மீள்குடியேறிக் கொள்ளும் ஆசையுடன் அங்கு சென்ற மக்கள் தமது வீடுகளையும், காணிகளையும் இனங்காண முடியாத துர்ப்பாக்கிய நிலை ஏற்பட்டுள்ளது. அப்பகுதியில் இராணுவத்தினர் புதிதாக அமைத்த கட்டடங்கள் சில இரண்டு பேருடைய காணிகளை இணைத்து கட்டப்பட்டுள்ளது. இதனால் காணிகளின் எல்லைகளை கண்டறிவதிலும் புதிய சிக்கல்கள் ஏற்பட்டுள்ளது.
மேலும் சில வீடுகளை இராணுவத்தினர் பெரிதாக சேதப்படுத்தாமல் விட்டுச் சென்றுள்ளனர். இவ்வாறு இராணுவத்தினால் சேதப்படுத்தாத வீடுகளின் வெளித்தோற்றம் பழைய நிலையில் உள்ள போதும் வீட்டிள் உட்பக்கத்தினை இராணுவத்தினர் தமது தேவைக்கு ஏற்ற வகையில் மாற்றி அமைத்துள்ளனர்.
குறிப்பாக வீட்டிற்குள் உள்ள அறைகளை சுற்றி மண்மூடைகள் அமைத்திருந்த இராணுவத்தினர் அதனை சுற்றி கறுப்பு நில தறப்பாள்களையும் போர்த்தியுள்ளனர். மேலும் அவ்வறைகளின் முகப்பில் முட்கம்பிகளை நெருக்கமாக கட்டிவைத்துள்ளனர்.
அவ்வறைகளுக்குள்ளே இருப்பவர்கள் வெளியில் தப்பித்துச் செல்ல முடியாதவாறும், வேறு ஒருவருடைய உதவி இல்லாமல் வெளிவரவும், வெளிப்புறத்தில் நடப்பவற்றினை தெரிந்து கொள்ள முடியாதவாறு அமைக்கப்பட்டுள்ளது.
அவ்வறைகளுக்குள்ளேயும், அதற்கு வெளியேயும் உள்ள வேறுசில தடயங்களை வைத்துப் பார்க்கும் போது அவ்வறைகள் வதைகூடங்களாக பயன்படுத்தப்பட்டிருக்கலாம் என்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
மேலும் அண்மையில் யாழ்ப்பாணத்தில் நடைபெற்ற காணாமல் போனவர்களை கண்டறியும் ஜனாதிபதியின் ஆணைக்குழவின் விசாரணைகளின் போது சாட்சியமளித்தவர்கள் பலர் வலி.வடக்கில் விடுவிக்கப்பட்ட பகுதிகளின் எல்லைகளின் பாதுகாப்பு வேலிகளை அமைக்கும் இராணுவத்தினரிலும், அங்கு வேலைகள் செய்யும் இராணுவத்தினரிலும் காணமல் போனத தமது பிள்ளைகளை கண்டதாக ஊடகங்களில் வெளியான புகைப்படங்களை ஆதாரம் காட்டி சாட்சியமளித்திருந்தனர்.
மேலும் இராணுவம் விடுவித்த பகுதியில் இருந்த பாடசாலையின் சுவரில் தனது மகனின் கையெப்பம் இருந்ததையும் சாட்சியமளித்தவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
இந்நிலையில் காணாமல் போனவர்கள் இவ்வாறான இராணுவ முகாங்களில் தடுத்து வைத்திருக்கப்பட்டிருக்கலாம் என்று நம்பப்படுகின்றது.
No comments
Post a Comment