யாழ். புத்தூர் மேற்கு நவகிரி பகுதியில் கடந்த சில தினங்களுக்கு முன்னர் நிலத்தில் ஏற்பட்ட வெடிப்பு தொடர்பாக தேசிய கட்டங்கள் ஆய்வு ஆராய்ச்சி நிலைய குழுவினர் ஆய்வுகளை மேற்கொண்டுள்ளனர்.
கடந்த சனிக்கிழமை குறித்த பகுதியில் பாரிய சத்தத்துடன் நிலத்தில் திடீர் வெடிப்பு ஏற்பட்டமையினால் அந்த பகுதியில் பதற்ற நிலை தோன்றியது.
அத்துடன், நில அதிர்வு காரணமாகவே இந்த வெடிப்பு ஏற்பட்டுள்ளதாகவும் அந்த பகுதி மக்கள் குறிப்பிட்டுள்ளனர்.
எனினும், புவியியல்துறை பேராசிரியர்கள் நிலத்தின் கீழ் உள்ள சுண்ணாம்பு கற்பாறைகள் இடிந்துள்ளதன் காரணமாகவே இந்த நில வெடிப்பு ஏற்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளனர்.
நிலவரை கிணறு மற்றும் மானிப்பாய் கட்டுடை பகுதியில் உள்ள இடிகுண்டு போன்றும் இந்தப் பகுதியும் நிலத்திற்கு கீழ் செல்லும் அபாயம் ஏற்பட்டுள்ளதாகவும் அவர்கள் சுட்டிக்காட்டியிருந்தனர்.
எவ்வாறாயினும், இந்த நில வெடிப்பு கடந்த சில தினங்களில் அதிகரித்ததுடன் சிறிய வெடிப்புகளாக இருந்தவை தற்போது விரிவடைந்துள்ளதாகவும் அந்த பகுதி மக்கள் கூறியுள்ளனர்.
இதன் காரமாணக இன்றைய தினம் குறித்த பகுதியிலுள்ள மக்கள் அனைவரும் பாதுகாப்பான இடங்களுக்கு அனுப்பிவைக்கப்பட்டதுடன், அந்த பகுதியை அனர்த்த பகுதியாகவும் அனர்த்த முகாமைத்துவ அமைச்சு அறிவித்துள்ளது.
இந்த நிலையில், தேசிய கட்டங்கள் ஆய்வு ஆராய்ச்சி நிலையம் மற்றும் அனர்த்த முகாமைத்துவ பிரிவின் பணிப்பாளர் ஆர்.எம்.எஸ்.பண்டார தலமையிலான குழுவினர் குறித்த பகுதியில் இன்று ஆய்வுகளை மேற்கொண்டுள்ளனர்.
இதேவேளை, ஆய்வுகளின் நிறைவில் குறித்த பகுதியில் எவ்வாறான பாதிப்புக்கள் காணப்படுகின்றன என்பது தொடர்பான தகவல்கள் வெளியிடப்படும் என அந்த குழுவினர் அறிவித்துள்ளனர்.
No comments
Post a Comment