Latest News

January 09, 2016

இருபத்தைந்து இந்திய இராணுவத்தினரை கொன்ற சாரம் (லுங்கி) கட்டிய புலிகள்.!
by admin - 0


இருபத்தைந்து இந்திய இராணுவத்தினரை கொன்ற  சாரம் (லுங்கி) கட்டிய புலிகள்.!

மேஜர்.கிண்ணி/அசோகன்.! 

இந்திய இராணுவம் அமைதிப்படையென்னும் முகமூடியுடன், எமது மண்ணை ஆக்கிரமித்து, தமது பாசிசமுகத்தை வெளிக்காட்டி நரவேட்டை ஆரம்பித்தபோது, தமிழர் தேசமெங்கும் இரத்தாறு ஓடியது. தமிழர் காவலரான புலிகள் மக்களைக்காக்க கேடையமாக நின்று எதித்தாக்குதலை ஆரம்பித்திருந்தனர்.
சில நூறு சாரம்(லுங்கி) கட்டிய பெடியள் என்று ஏளனம் செய்த, உலகின் நான்காவது வல்லரசு, அந்த லுங்கி கட்டிய பெடியளுடன் மோதியது. வல்லரசு என்னும் மமதையுடன் சண்டையில் குதித்த அடுத்த நாளே, தலைவரை கைது செய்யும் நோக்கில் யாழ் பல்கலைக்கழகத்தின் மைதானத்தில், பரசூட் மூலம் தரை இறங்கிய, இந்திய இராணுவத்தின் அதி சிறப்பு பயிற்சி பெற்ற அதிரடிப்படையினரை அனைவரையும் "அந்த சாரம் கட்டிய பெடியள்" கொன்று குவித்த போது தான் இந்திய இராணுவத்தலைமை கனவுலகில் இருந்து, தங்கள் தவறை உணர்ந்து மீண்டனர்.
அந்த வெற்றிகரமான தாக்குதலைத் தொடர்ந்து, பரவலாக தமிழர் பிரதேசமெங்கும் புலிகளின் பதுங்கித் தாக்குதல்கள், கண்ணிவெடித் தாக்குதல்கள் மூலம் இந்திய இராணுவத்தை புலிகள் கலங்கடித்தனர். தலைவர் மணலாற்று காட்டுக்குள் வந்ததும், அவரது பாதுகாப்பை பலப்படுத்தும் நோக்கில் மணலாற்றை சுற்றி, 15பேர் கொண்ட அணிகள் ஒவ்வொரு தளபதியின் கீழ், ஒவ்வொரு பிரதேசத்தை தமது காட்டுப்பாட்டில் வைத்திருந்தனர்.
அதில் லெப்.கேணல்.நவம் அண்ணை (டடி) தலைமையில் தான் மேஜர் கிண்ணியண்ணையும் இருந்தார். இவர்களது அணி நெடுங்கேணிப்பிரதேசத்தை தமது கட்டுப்பாட்டில் வைத்திருந்து தொடர் தாக்குதலை மேற்கொண்டிருன்தனர். இதில் டடியண்ணையின் அணியில் கூடுதலான தாக்குதலை மேற்கொண்டவர்களில் கிண்ணியண்ணை முதன்மையானவர்.
கின்ணியண்ணையின் தாக்குதல்கள் பற்றி எழுதுவதானால் ஒரு புத்தகமே எழுதமுடியும். இதில் ஒன்று இரண்டை உங்களோடு பகிர விளைகின்றேன்.
ஒருநாள், இவரது அணியை சேர்ந்த போராளிகளுடன் ஒட்டிசுட்டானில் தமது ஆதரவாளர் வீடொன்றில் உணவருந்திக் கொண்டிருந்த போது அந்த ஆதரவாளர் வேலைக்கு சென்றுவிட்டு களைப்புடன், கால் நடையாக வீடு திரும்பி இருந்தார். அப்போது அவரிடம் கிண்ணியண்ணை சைக்கிள் எங்கே என்று கேட்ட போது, "அந்த நாய்கள்" (இதிய இராணுவத்தை) வேண்டிக்கொண்டு போட்டாங்கள் என்றார் சலிப்புடன். அப்போது அவரது மனைவி கூறினார் இது வழமையா நடக்கிறது தான் என்றார் கோவத்துடன்.
அடுத்த நாள் இவர்களது வீட்டுக்கு சென்ற கிண்ணியண்ணையும் இவரது அணியைச் சேந்தவரான கிளி என்பவரும் அவரது சைக்களை வாங்கிக்கொண்டு தமது மறைவிடத்திற்கு வந்தனர். அங்கு வைத்து அந்த சைக்கிளை பிரித்து, அதன் "பாரினுள்" வெடிமருந்தை நிரப்பினர். பின் பழையபடி அந்த சைக்கிளை பூட்டினர். கிளி என்பவருக்கு வெடிகுண்டு பொருத்துவது அத்துபடியானது.
அவரது புது முயற்சியாக அந்த சைக்கிளின் "பிரேக்கை" பிடிக்கும் போது, குண்டை வெடிப்பது போல அந்த குண்டை பொருத்தி இருந்தார். பின்பு எமது ஆதரவாளர் வேலை செய்யும் இடத்தில் சைக்கிளை கொண்டு போய் நிறுத்திவிட்டு, அவருக்கு பணம் கொடுத்து புது சைக்கிள் ஒன்றை வாங்கும் படி கூறிவிட்டு அவர்கள் இடத்திலேயே மறைந்திருந்தனர்.
சிறிது நேரத்தில் அவ்விடத்திற்கு வந்த மூன்று இந்திய இராணுவ சிப்பாய்கள் அவரது சைக்கிளை அடாத்தாக வாங்கிச் சென்றனர். மூவரும் அந்த சைக்கிளில் வெளிக்கிட்டு 100m போகும் போது பாரிய சத்தத்துடன் அந்த குண்டு வெடித்தது. அந்த மூவரும் அவ்விடத்திலேயே கொல்லப் பட்டனர்.
இதே போல ஒரு ரோந்து அணிமீது தாக்குவதற்கென மூன்று வெடிகுண்டுகளை பொருத்திவிட்டு இருக்கும் போது, மழை காரணமாக தாட்டு வைத்திருந்த குண்டின் வயர் வெளித்தெரிந்தமையால் இந்திய இராணுவத்தால் அந்த குண்டுகள் எடுக்கப் பட்டிருந்தன. இதன் காரணமாக டடியண்ணையால், இவரது அணியினர் களத்தில் இருந்து விலக்கி வைக்கப் பட்டனர்.
அந்த காலகட்டத்தில் புலிகள் அமைப்பில் ஆயுதங்களுக்கு பெரும் தட்டுப்பாடு நிலவியது. உயிரைக் கொடுத்தே ஆயுதங்கள் எதிரியிடம் இருந்து கைப்பற்றப் பட்டது. அதனால் ஆயுதங்களை யாரவது எதிரியிடம் பறிகொடுத்தால், அவருக்கு இரண்டு குண்டுகள் கொடுக்கப்படும், அதைக் கொண்டு எதிரியை தாக்கி அவர் பறிகொடுத்த ஆயுதத்தை மீளவும் கைப்பற்ற வேண்டும்.
சில நேரம் சண்டைகளில் இருந்து விலக்கப் படுவார்கள். இது தான் கிண்ணியண்ணையின் அணியினருக்கும் நடந்தது. தினமும் களத்தில் இருந்த ஒரு போர் வீரனுக்கு மிகப் பெரும் தண்டனை, போரில் இருந்து அப்புறப்படுத்துவதே ஆகும். தண்டணையின் நிறைவின் பின் கிண்ணியண்ணையால் நெடுங்கேணி பாடசாலையில் அமைந்திருந்த இந்திய இராணுவத்தின் மினிமுகாம் மீது துல்லியமான வேவொன்று எடுக்கப்பட்டிருந்தது.
அதாவது தினமும் காலை 8.00மணிக்கு மினிமுகாமிலிருந்து வரும் 25க்கு மேற்பட்ட இராணுவத்தினர் நெடுங்கேணி பாடசாலையில் தாங்கள் அமைத்திருந்த காவலரணில் இருந்து விட்டு மாலை 5.00-6.00 மணிக்கும் இடைப்பட்ட நேரத்தில் மீண்டும் முகாம் திரும்புவார்கள். மக்களுக்கு உயிராபத்து வரும் என்பதால் எதிரி போய், வரும் பாதையில் தாக்கும் எண்ணம் இவர்களால் கைவிடப்பட்டது.
ஆகவே முதல் நாள் இரவே பாடசாலையின் அதிபர் அறையினுள்ளும் மற்றும் இன்னும் இரு அறையினுள்ளும் மூன்று அணிகளாக பிரிந்து,பதுங்கி இருந்து எதிரியின் பிடரியில் தாக்கும் முடிவு எடுக்கப்பட்டு டடியண்ணையிடம் அனுமதி கேட்கப்பட்டது. அவரும் தற்கொலைக்கு ஒப்பான அந்த திட்டத்தை கேட்ட பின் தயக்கத்துடன் அன்று இரவே அண்ணையிடம் (தலைவரிடம்) திட்டத்தை கூறி அனுமதி கேட்டார்.
அதற்கு அவரும் திட்டத்தில் சில திருத்தங்களுடன் அனுமதி கொடுத்தார். அதன் படி காந்தன் தலைமையில் , நவீனன், வேலன் மற்றும் இருவரும், தங்கேஸ் தலைமையில் சுதா, குமரேஸ், மற்றும் இருவரும், கிண்ணியண்ணை தலைமையில் எல்வின், கிளி, ரங்கன் ஆகியோரும் அன்று இரவே திட்டத்தின் படி தமது இடங்களுக்கு சென்று எதிரிக்காக காத்திருந்தனர்.
தாக்குதல் திட்டத்தின் படி டடியண்ணையுடன் பிரபு ஒரு அணிக்கும், போர்க்கண்ணை, நவநீதண்ணை ஆகியோரும் துணைக்கு வந்திருந்தனர். அடுத்த நாள் காலை திட்டத்தின் படி பெரியகுளம் சந்தியில் அமைந்திருந்த காவலரண் மீது டடியண்ணையால் தாக்குதல் மேற்கொள்ளப் பட்டது.
அதனைத்தொடர்ந்து காவலரணில் இருந்த இராணுவத்தினர் புலிகள் முன் பக்கத்தால் வருவார்கள் என்றெண்ணி, சகட்டுமேனிக்கு சுட்டுக் கொண்டிருந்தனர்.
அந்த நேரத்தில் திடீர் என திறந்த கதவுகளின் பின்னாலிருந்து இந்திய இராணுவத்தால் ஏளனம் செய்யப்பட்ட "சாரம் கட்டிய புலிகள்" பாய்ந்தனர். புலிகளில் முதலாவது சூட்டை எதிரி மீது ரங்கன் சுட்டு அன்றைய சண்டையை ஆரம்பித்தார். இந்திய இராணுவத்தினர் எதிர்பாராத இந்த தாக்குதலின் அதிர்ச்சியில் இருந்து மீள்வதற்குள் அங்கிருந்த அனைவரும் பிணமாகி விட்டிருந்தனர்.
அவர்களது ஆயுதங்கள் அனைத்தும் கைப்பற்றப் பட்டிருந்தது. இந்த வெற்றிகரமான தாக்குதலின் பின் நெடுங்கேணி பிரதான முகாமிலிருந்து ஏவிய "2 இஞ்சி"மோட்டர் எறிகணை ஒன்று டடியண்ணைக்கு அருகில் விழுந்து வெடித்தது. அதில் காயமடைந்த அவரை தமிழ்நாட்டிற்கு கொண்டு சென்று வைத்தியம் செய்த போதும், அது பலனளிக்காமல் வீரச்சாவடைந்தார். அவரது வித்துடல் அங்கேயே புதைக்கப் பட்டது. ஆன போதும் அவர் பல "டடிகளை" உருவாக்கி விட்டிருந்தார்.
இந்த வெற்றிகரத்தாக்குதால் அன்று பெரும் அதிர்வை ஏற்படுத்தி இருந்தது. இது கிண்ணி என்னும் பெரும் வீரனின் சாதனை.! தமிழர் அரசு பிறந்திருந்தால், தமிழரின் இராணுவ வரலாற்றில் இந்த தாக்குதல் பற்றி நிச்சையம் இளந்தலைமுறை வீரருக்கு கற்பிக்கப் பட்டிருக்கும்.!
இந்திய இராணுவம் எம் மண்ணை விட்டு சென்றதும் சிங்கள இராணுவத்துடன் சண்டை ஆரம்பமான பின்னர் தலைவர் அவர்களால் தமிழரின் முதலாவது தாக்குதல் படையணியான சாள்ஸ் அன்ரனி சிறப்பு படையணி உருவாக்கப் பட்ட போது அதன் சிறப்பு தளபதியாக பால்ராஜ் அண்ணையையும் அடுத்த நிலையில் தளபதியாக ராஜண்ணையையும்(ரோமியோ நவம்பர்) இதன் துணைத்தளபதியாக இருந்த ஜஸ்டின் அண்ணையின் வீரச்சாவுடன், கிண்ணியண்ணையை நியமித்திருந்தார்.
பின்னைய நாட்களில் அதன் சிறப்புத்தளபதியாக நியமித்தார். அப்படி இருக்கும் போது தான் 10/07/1992 அன்று இயக்கச்சி பகுதியில் எதிரியுடனான மோதலின் போது வீரச்சாவடைந்தார். இனிமையான போராளி, இறுக்கமான கட்டளைத்தளபதி, அதையும் தாண்டி எனது நல்ல ஆசான் எம்மை விட்டு போனபோதும் அவர் நினைவில் என்றும் வாழ்வோம்..!!! 
நினைவுகளுடன் துரோணர்...!!!!
« PREV
NEXT »

No comments