இலங்கையில் இடம்பெற்றதாக கூறப்படும் யுத்தக் குற்றச்சாட்டுக்கள் மற்றும் மனித உரிமை மீறல்கள் குறித்து மேற்கொள்ளப்படும் உள்ளக பொறிமுறை விசாரணையில் வெளிநாட்டு நீதிபதிகளை உள்வாங்கப்போவதில்லை என்றும் அதற்கு ஒருபோதும் அனுமதியளிக்க போவதில்லை என்றும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன குறிப்பிட்டுள்ளார்.
சர்வதேச ஊடகமான பி.பி.சிக்கு வழங்கிய நேர்காணலில் அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன், இலங்கையில் இன்னும் தடுத்து வைத்து சித்திரவதை செய்யும் நடவடிக்கைகள் தொடர்வதாக வெளியான குற்றச்சாட்டுக்களையும் அவர் முற்றாக மறுத்துள்ளார்.
இலங்கையின் பிரச்சினைகள் இலங்கையின் சட்டதிட்டங்களுக்கு அமைய தீர்த்துக்கொள்ளப்படும் என்றும், எங்கள் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கு வெளிநாடுகளிலிருந்து நிபுணர்களை இறக்குமதி செய்ய வேண்டிய அவசியம் இல்லை என்றும் ஜனாதிபதி கூறியுள்ளார்.
கடந்த ஆண்டு ஒக்டோபர் மாதம் நடைபெற்ற ஐ.நா மனித உரிமைகள் பேரவை அமர்வில் அமெரிக்கா, பிரிட்டன் உள்ளிட்ட நாடுகள் கொண்டு வந்து, இலங்கை இணை அனுசரணை வழங்கிய பிரேரணையில் இலங்கையில் இடம்பெற்ற குற்றங்களுக்கு விசாரணை நடத்தி நீதி வழங்கப்படவேண்டும் என்று சுட்டிக்காட்டப்பட்டிருந்தது.
அந்த விசாரணைப் பொறிமுறைக்கு பொதுநலவாய நாடுகள் மற்றும் சர்வதேச நாடுகளின் நீதிபதிகள், வழக்கு தொடுநர்கள் மற்றும் விசாரணையாளர்களின் ஒத்துழைப்புக்கள் தொழிநுட்ப உதவிகள் பெற்றுக்கொள்ள வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டிருந்தது.
இவ்வாறான ஒரு நிலையல், நடத்தப்படவுள்ள உள்ளகப் பொறிமுறையில் வெளிநாட்டு நீதிபதிகளுக்கு அனுமதியளிக்கப்போவதில்லை என்று ஶ்ரீலங்கா ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன திட்டவட்டமாக கூறியுள்ளார்.
No comments
Post a Comment