Latest News

December 10, 2015

ஆட்சி மாறிய பின்னரும் வெள்ளைவான் கடத்தல் தொடர்கிறது : வடக்கு முதல்வர் குற்றச்சாட்டு
by admin - 0

ஜனவரி 8க்குப் பின்னரும் அதாவது ஆட்சி மாற்றத்தின் பின்னரும் கூட வெள்ளைவான் கடத்தல்கள் நடைபெற்றுள்ளளன. மனித உரிமைகளைப் பேணுபவர்கள் நாம் என்று இலங்கை அரசாங்கத்தினர் மார்தட்டிக் கூறுவதாகவிருந்தால் தமிழ் மக்களின் அவலங்களை நீக்கும் விதத்தில் அவர்களின் சுயநிர்ணய உரிமையை மதித்து அவ்வுரித்தின் அடிப்படையில் ஒரு நிரந்தரமான தீர்வைப் பெற்றுக் கொடுக்க முன்வரவேண்டும் அப்பொழுதுதான் உலக மனித உரிமைகள் தினம் இலங்கைக்குப் பொருந்தும் ஒரு தினமாக ஏற்றுக்கொள்ளப்படலாம் என வடக்கு முதலமைச்சர் சி.வி விக்கினேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

வடமாகாண சபையின் 40 ஆவது அமர்வு இன்று கைதடியிலுள்ள வடமாகாண சபையின் கட்டிடத் தொகுதியில் இடம்பெற்றது. இதன்போது சர்வதேச மனித உரிமைகள் தினத்தை முன்னிட்டு வடமாகாண முதலமைச்சர் சி.வி. விக்னேஸ்வரன் ஆற்றிய விசேட உரையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,
உலக மனித உரிமைகள் தினமான டிசம்பர் 10ஆம் திகதி பற்றி இந்தச் செய்தியை இவ்வருடம் டிசம்பர் மாதம் 9ஆம் திகதியன்று நான் தயாரிக்க முற்படும் போது ஒரு  முக்கிய விடயம் எனக்குப் புலப்பட்டது. இவ்வருடம் முற்பகுதியில ஐக்கிய நாடுகள்  பொதுச்சபையினால் டிசம்பர் மாதம் ஒன்பதாம் திகதியானது முதன் முதலாக  இனப்படுகொலையில் பலியானோரின் நினைவுறுத்தும் நாளாகவும் அவர்கள் மாண்பை  வலியுறுத்தும் நாளாகவும், இனப்படுகொலைக் குற்றமிழைப்பைத் தடுக்கும் நாளாகவும்  பிரகடனப்படுத்தியுள்ளமை தெரியவந்தது. 

எனவே இனப்படுகொலைக்குப் பலியானோரை  நினைவில் இருத்தி இச்செய்தியைத் தயார்படுத்தினேன். ஒரு நாட்டின் தனி மனிதர்களை அல்லது அங்கு வசிக்கும ஒரு மனிதக் குழுக்கூட்டத்தை பாரிய அதிகாரங்களைக் கொண்ட அந்நாட்டின் அரசு முறையற்ற விதத்தில்  நடத்தித் துன்புறுத்தலைத் தவிர்க்க ஏற்பட்டதே மனித உரிமைகளை நோக்கிய  பயணமாகும். யூத மக்களுக்கு அக்காலகட்டத்தில் நேர்ந்த அவலங்களே, சர்வதேசச்  சட்டத்தின் கவனத்தை நாடுகளின் உரிமைகளில் தங்கியிருப்பதை விடுத்து, ஐக்கிய நாடுகள், தனி மனித உரிமைகள் பற்றிச் சிந்தித்துச் செயலாற்றும் படியாக 1948ஆம் ஆண்டில் திசை திருப்பியது.

முதலில் கொண்டு வரப்பட்ட உலகளாவிய மனித உரிமைகள் பற்றிய விளம்பல்  ஆவணத்தில் காணப்பட்ட ஒவ்வொரு  உரித்தும் பின்னர் வந்த சிறப்புக் கூட்டகளிலும்  விளம்பல்களிலும் விரிவாகக் குறிப்பிடப்பட்டன. குறிப்பிட்ட உரித்துக்களை நிலைநாட்டவே  மனித உரிமைகள் சபையும்  மனித உரிமைகளுக்கான உயா்ஸ்தானிகரின் அலுவலகமும் உருவாக்கப்பட்டன.

மேற்படி ஐக்கிய நாடுகள் சபை ஆவணங்களில் அறிவிக்கப்பட்டிருக்கும் கோட்பாடுகள்  இலங்கையைப் பொறுத்த வரையில் மிக முக்கியமானவை. அதுவுந் தமிழ் மக்கள் இன்று வரை அனுபவித்து வரும் அல்லல் அவலங்களுடன் மிக நெருங்கிய தொடர்புகள் கொண்டவை மேற்படி ஆவணங்கள். தொடர்ந்து வந்த இலங்கை அரசாங்கங்களினால் தமிழ் மக்களின் உரித்துக்கள் தனிமனித ரீதியிலும் நிர்ணயிக்கப்பட்ட மக்கட் கூட்டம் என்ற ரீதியிலும் காலாதிகாலமாக  மீறப்பட்டு வந்துள்ளன.

குடியியல் மற்றும் அரசியல் உரித்துக்கள் சம்பந்தமான ஐக்கிய நாடுகள் சமவாய ஆவணத்தில்  நிர்ணயிக்கப்பட்ட மக்கட் கூட்டங்கள் யாவற்றிற்கும் யநிர்ணய உரிமையானது உறுதிபப்படுத்தப்பட்டுள்ளது. சமவாயத்தின் உறுப்புரை (1)ல் பின்வருமாறு கூறப்பட்டுள்ளது.

'சகல மக்கட் கூட்டங்களும் சுய நிர்ணய உரித்தையுடையவர்கள். அவ்வுரித்தின் அடிப்படையில் அவர்கள் தமது அரசியல் நிலையை வகுக்க முடியும ;. அத்துடன் சுதந்திரமாகத் தமது பொருளாதார, சமூக, கலாசார அபிவிருத்தியை வழிநடத்திச்  செல்லமுடியும்'. இந்த சுயநிர்ணய உரிமைதான் தமிழ்ப் பேசும் மக்களுக்கு மறுக்கப்பட்டுள்ளது. 

அத்துடன் மிகமுக்கிய மனித உரிமையான சமத்துவத்திற்கான உரித்து இலங்கை  இயங்கத் தொடங்கிய காலம ; முதல் தமிழ் மக்களுக்கு மறுக்கப்பட்டு வருகின்றது. தனிப்பட்ட தமிழ் மக்களுக்கான உயிருக்கான உரித்து கூட அரசாலும் அதன்  முகாமைகளாலும ; நீதிக்குப் புறம ;பான படுகொலைகளால் வழிநடத்தப்பட்டுள்ளன. நடந்த மனிதப் படுகொலைகளுக்கு இதுவரையில் பதிலளிக்கப்படவில்லை. 

குடியியல் அரசியல் உரிமைகளுக்கான சமவாயத்தில் கூறப்பட்டிருக்கும் மாற்றமுடியாத உரித்துக்களாகிய சுதந்திரத்திற்கான உரித்து  நூற்றுக்கணக்கிலான தமிழ் இளைஞர் யுவதிகளுக்கு இன்றும் மறுக்கப்பட்டு அவர்கள் விளக்கமற்ற விளக்கமறியல்களிலும் விளப்பமற்ற விளக்கங்களிலும்  சிறைப்படுத்தப்பட்டுள்ளார்கள். தொடர்ந்து அவர்களைச் சிறைப்படுத்தி வைத்தல் இலங்கை அரசாங்கம் சுதந்திரத்திற்கான மனித உரிமையை மீறும் செயலாகும். 

ஆகவே தாமதமின்றி தமிழ் அரசியல் கைதிகளை உடனே விடுவிப்பது அரசாங்கத்தின்  தலையாய கடமையாகும் . அவ்வாறு விடுவித்தால்த்தான் எமது நாட்டில் எமது  ஆட்சியாளர்களிடையே மனித உரிமையைப் பேணிப் பாதுகாக்கும்  நோக்கம்  உண்டென்று உணரக் கூடியதாக இருக்கும் மேன்மைதகு ஜனாதிபதியவர்கள் நாட்டின் நற்பெயர் கருதி நமது இளைஞர் யுவதிகளைப் பொது மன்னிப்பில் விரைவில்  விடுவிப்பார் என்று எதிர்பார்க்கின்றேன்.  எமது வடமாகாணசபையின் இவ்வருடப் பெப்ரவரி மாதத் தீர்மானமானது தொடர்ந்து  நடைபெற்று வரும் தமிழ் மக்களின் படுகொலைகள் இனப்படுகொலையே என்று  அடையாளம் காட்டியது. அந்த இனப் படுகொலைகளின் சூத்திரதாரிகளை அடையாளம்  கண்டு அவர்கள் மீது விளக்கம் நடாத்துவது இலங்கை அரசாங்கத்தின் கடப்பாடு என்பதை நான் சொல்லி நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டியதில்லை.

 ஆனால் அரச  தலைவர்களின் அண்மைய கால அறிக்கைகள் முரண்பட்ட விதத்தில் அரங்கேறி  வருகின்றன. இலங்கை பற்றிய ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் உயர் ஸ்தானிகரின்  அறிக்கையின் அடிப்படையை அடியோடு மறுப்பனவாகவே அவை அமைந்துள்ளன.  பின்ஹெய்ரோ கோட்பாடுகள் என்பன யுத்தம் போன்ற காரணங்களால் இடம்பெயர்ந்த  மக்களை அவர்களின் முன்னர் வாழ்ந்த வதிவிடங்களில் மீள் குடியேற்றுவதை  வலியுறுத்துகின்றன. இன்று எமது மாகாண மக்களின் பெருவாரியான காணிகள் இராணுவத்தினர் கைவசம் உள்ளது. இவ்வாறு மக்களின் காணிகளை இராணுவம்  கையேற்று வைத்திருப்பது சர்வதேச மனித உரிமைகள் சட்டத்திற்கு முரணானது.

எமது  நாடு மனித உரிமைகளைப் பேணிப் பாதுகாத்து வர அவாக் கொண்டுள்ளது என்பது  உண்மையெனில் இராணுவத்தினரை வெளியேற்றி அவர்கள் கையேற்ற காணிகளை  அவற்றின் சொந்தக்காரர்களுக்குக் கையளிப்பதே பொறுப்பான செயற்பாடாகும் என்றும் அவர் தெரிவித்தார்.
« PREV
NEXT »

No comments